search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lallu Prasad Yadav"

    • வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • லல்லு, மகளின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

    குடும்ப அரசியலுக்கு பெயர் போனது பீகார் முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவின் குடும்பம். அவரது குடும்ப உறுப் பினர்கள் 6 பேரும் அரசியலில் களம் கண்டிருக்கிறார்கள்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதால் ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

    அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் லல்லுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, நிதீஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

    சமீபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தனது கூட்டணியை மாற்றி பா.ஜ.க.வுடன் இணைந்ததால் மந்திரிகளாக இருந்த லல்லுவின் மகன்கள் தற்போது எம்.எல்.ஏ.க்களாக மட்டும் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் லல்லுவின் மற்றொரு மகள் ரோகிணி ஆச்சார்யாவை ராஷ்டீரிய ஜனதா தளம் களம் இறக்கியுள்ளது, அவர் லல்லுவின் 4-வது அரசியல் வாரிசாகும். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி ஆகியோர் அரசியலில் உள்ளனர். மிசா பாரதி மேல்- சபை எம்.பி.யாவார்.

    44 வயது டாக்டரான ரோகினி ஆச்சார்யா லல்லுவின் 2-வது மகள் ஆவார். அவர் சரன் தொகுதியில் போட்டியிடு கிறார். இந்த தொகுதி முன்பு சாப்ரா தொகுதியாக இருந்தது.

    இந்த இடம் லல்லுவின் குடும்ப தொகுதியாகும். லல்லு பிரசாத் யாதவ் இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். கடைசியாக 2009 தேர்தலில் அவர் சரன்தொகுதியில் 51,815 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    ஆனால் கடந்த இரண்டு தேர்தலிலும் ராஷ்டீரிய ஜனதா தளம் அந்த தொகுதியில் தோல்வியை தழுவியது. 2014 தேர்தலில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி 40,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    கடந்த முறை (2019) லல்லுவின் சம்மந்தி சந்திரிகா ராய் (தேஜ் பிரதாப் யாதவின் மாமனார்) 1.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த 2 முறையும் முன்னாள் மத்திய மந்திரி யும், பா.ஜனதா மூத்த தலைவருமான ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார்.

    பா.ஜனதாவை இந்த தடவையாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற வேட்கையில் லல்லு தனது மகள் ரோகினையை களத்தில் இறக்கி உள்ளார். இந்த மகள் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு.

    லல்லு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது அவரை கவனித்து கொண்டவர் ரோகினி. மேலும் தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து பாசத்தை காட்டி மக்கள் இடையே பெரும் பாராட்டை பெற்றார்.

    தனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மகளை தேர்தலில் வெற்றிபெற வைத்து அதை பரிசாக வழங்க லல்லு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். மகளின் வெற்றிக் காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். உடல் நல பிரச்சினைகள் இருந்த போதிலும் லல்லு பல பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதோடு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகளையும் அடிக்கடி சந்தித்து தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுள்ளார். லல்லு அந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருந்ததால் மகளை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான ராஜீவ் பிரதாப் ரூடியை தோற்கடிப்பது சவாலான தாகும்.

    62 வயதான ரூடி மறைந்த வாஜ்பாய், பிரதமர்மோடி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். 1996-ம் ஆண்டில் இருந்தே அவர் அந்த தொகுதிக்கு அறிமுகமானவர்.

    1996, 1999, 2014 2019 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது சரன்தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளார்.

    அனுபவம் வாய்ந்த ரூடியுடன் போட்டியிடுவது குறித்து ரோகினி கூறும்போது, 'நான் தொகுதிக்கு புதிது அல்ல. பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அறிவேன். எனது அரசியல் குருவான தந்தையிடம் இருந்து நான் அரசியலின் நுணுக்கங் களைக் கற்றுக்கொண்டேன்" என்றார்.

    ரூடி கூறும் போது. "போட்டியில் ரோகினி இல்லை. திரைக்குப் பின்னால் இருந்து போராடும் லல்லுதான் உண்மையான எதிரி" என்றார்.

    ரோகினி பாரம்பரிய முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கிகளை நம்பி இருக்கிறார். தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் கடினமான பணி அவருக்கு உள்ளது. ஆனால் சரன் தொகுதி அரசியல் களம் இப்போது லல்லு ஆட்சிக் காலத்தைப் போல் இல்லை.

    சரன்தொகுதியில் வருகிற 20-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×