என் மலர்tooltip icon

    இந்தியா

    • பிரதமர் மோடி மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.
    • பா.ஜனதாவிடம் இருந்து பிரிந்து செல்ல முடியாது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்குப் பிறகு, மரியாதை மற்றும் அன்பு நிறைந்த இடத்தில் நான் மதிக்கும் ஒரே நபர் பிரதமர் மோடி தான்.

    அவர் இருக்கும் வரை, பா.ஜ.கவில் இருந்து பிரிந்து செல்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

    நான் என் எதிரிகள் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை, என் சொந்த பலத்திலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை நாங்கள் 100 சதவீத வெற்றி விகிதத்தை அடைவோம். என்று நான் நம்புகிறேன். 5 கட்சிகளின் இந்த கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணி.

    ஜனதா தளம் (ஐக்கிய) வாக்காளர் தளத்திற்குள் வளர்ந்து வருகிறது. அவர்களின் ஆதரவை பெற்று உள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உருவாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

    ராம் விலாஸ் பாஸ்வான் அரசியலில் இருக்கும்போது தனது மக்களுக்கும் அவரது பிராந்தியத்திற்கும் பாடுபட நேர்மையான முயற்சியை மேற்கொண்டார். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த நில மோசடி குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    இதுபோன்ற முறைகேடுகளை தனது அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது. மேலும் இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    "ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கூட்டணி அரசு வெளிப்படைத்தன்மையை நம்புகிறது.

    எனவே ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்பதை அறிய இந்த விவகாரம் விசாரிக்கப்படும், உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.

    இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்,"

    நில ஒப்பந்தத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் மந்திரி நிச்சயமாக இதனை விசாரிக்க வேண்டும்.

    என்னுடைய உறவினர்களுக்காக சலுகைகளை பெறுவதற்காக நான் எந்த அதிகாரியையும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை" என்றார்.

    • வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    நேற்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்துள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இந்நிலையில், பீகார் முதல்கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குபதிவு சதவீதம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 

    • ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு மும்பையில் நடைபெற்றது.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    மும்பை:

    மும்பையில் ஸ்டேட் வங்கியின் 12-வது பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கிகளின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டிற்கு பெரிய அளவிலான, உலகத்தரத்திலான வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கியும் மற்ற பிற வணிக வங்கிகளும் சேர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.

    தொழில் துறைக்கு கடன் ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்த வங்கிகளைக் கேட்டுக்கொண்டார்.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் ஏற்பட்டுள்ள தேவை, முதலீட்டை ஊக்குவித்து 'நல்ல வட்டச் சுழற்சி'யை உருவாக்கும்.

    பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய பணியாளர்களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்க வேண்டும்.

    வங்கி பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் உள்ளூரின் வட்டார மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒரு கிளையில் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு ஊழியரும் தனது வாடிக்கையாளரைப் புரிந்து கொள்வதற்கு, உள்ளூர் மொழியை பேசுவதையும் உறுதிசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் அந்த வங்கியின் கிளை மானேஜராவது வட்டார மொழி பேச வேண்டும் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி நாளை இருநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்.
    • அங்கு 4 வந்தே பாரத் ரெயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 8) 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு செல்லும் ஒரு ரயிலும் அடக்கம். இந்த ரயில் தமிழக நகரங்கள் வழியே செல்கிறது.

    இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரை வந்தே பாரத் ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் பயண நேரம் 8 மணி நேரம் 40 நிமிடமாகக் குறையும். இந்த ரெயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்ல உள்ளது.

    உ.பி.யின் பனாரஸ் நகரில் இருந்து ம.பி.யின் கஜூராகோ இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலானது வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூடம் வழியே பயணிக்கிறது. இது மதம் சார்ந்த மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்கும்.

    உ.பி.யின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையிலான வந்தே பாரத் ரெயிலால் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். இந்த ரெயிலானது லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பைரேலி, மொராதாபாத், பிஜ்னூர் நகரங்களில் நின்று செல்லும்.

    பஞ்சாபின் பிரோஸ்பூர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நகரங்கள் இடையிலான பயண நேரம் 6 மணி 40 நிமிடமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.
    • கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.  நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக AISA வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    DSF வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், AISA வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.

    SFI அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன.

    எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது. 

    • ருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு உறவினர்கள் அங்கு வந்தனர்.
    • தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

    சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் தேதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது.

    அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என காவல்துறையை அணுகியிருந்த நிலையில் அவர்களுக்கு அந்த உடல் காண்பிக்கப்பட்டது.

    குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தம் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர், புருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள், புருஷோதமை சந்தர்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.

    இறுதியில் புருஷோத்தம் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். புருஷோத்தமின் தாய் மான்குன்வர், தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

    புருஷோத்தமின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

    பிரேத பரிசோதனை அறிக்கை அந்த நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு.
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

    2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.

    சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

    கடந்த மாதம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆசாராமின் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் இன்று காலை, குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் நீதிபதி ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், ஆசாராமின் வழக்கறிஞர் தேவ்தத் காமத், மேலும் 6 மாதங்கள் ஜாமீன் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் மருத்துவ சான்றிதழைகளையும் சமர்ப்பித்தார்.

    அவரது உடல்நிலை மற்றும் சிறையில் அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு குஜராத் உயரநீதிமன்றம் அவருக்கு மேலும் 6 மாதம் ஜாமீன் வழங்கி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கறிஞர், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்கள் அவர் உடல்நிலை மோசமாக இருப்பதை இருப்பதைக் குறிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

    • 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர்.

    121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 60.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67.32% வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மாலை 6 மணியுடன் முதற்கட்ட வாக்குபதிவு நிறைவு பெற்றது.

    இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.  

    • கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
    • அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் சிப்ரி பஜார் பகுதியில் உள்ள நல்கஞ்சில் வசித்து வந்தவர் 30 வயதான ரவீந்திர அஹிர்வார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி.யில் மேம்பாட்டு அதிகாரியாக ரவீந்திரன் பணியில் சேர்ந்தார்.

    கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ள ரவீந்திரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நேற்று காலை, உள்ளூரில் அரசுக் கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

    விளையாடும்போது அசௌகரியத்தை உணர்ந்த ரவீந்திரனின் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சச்சின் மகோர், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் உணமையான காரணம் புலனாகும் என்று தெரிவித்தார். 

    ரவீந்திரனின் தம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் காலையில் அதிகாலையில் எழும்போது நலமுடனே இருந்தார். தந்தையுடன் தேநீர் அருந்தினார். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். 1 மணி நேரதிற்கு பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது" என்று தெரிவித்தார்.  

    • 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
    • பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    • Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
    • சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்

    மகாராஷ்டிராவில் புனே நகரில் பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மூடநம்பிக்கையால் போலி ஆன்மீக கும்பலிடம் சிக்கி ஏமாந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    அந்த ஐடி ஊழியருக்கு ஆட்டோ இம்யூன் நோய் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகள்கள் உள்ளனர்.

    2018 ஆம் ஆண்டு, ஒரு பக்தி பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலந்து கொண்ட ஐடி ஊழியரின் மனைவிக்கு ஒருவரும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த நபர் 3 பேர் அடங்கிய Spritual healers என அழைத்துக்கொள்ளும் அந்த ஆன்மீக மோசடி கும்பலிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    சித்தரின் ஆவி உடலில் நுழைவதாகவும், அது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்றும் அந்த கும்பல் தம்பதியினரை நம்பவைத்துள்ளது.

    நோய்களைக் குணப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்கள் தொடர்ந்து தம்பதியிடம் பணம் பெற்று வந்துளளனர்.

    பின்னர், பிரிட்டனில் உள்ள தம்பதியின் வீடு மற்றும் புனே அருகே சொந்தமாக உள்ள விவசாய நிலங்கள் உட்பட குடும்பத்தின் சொத்துக்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக அவர்களை நம்ப வைத்தனர்.

    இந்தக் கும்பல் குடும்பத்தினரை இவற்றை விற்க வற்புறுத்தியது. விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தை, அது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறி, புத்திசாலித்தனமாக கும்பல் வசப்படுத்தியுள்ளது.

    இதன் பின்னரும் பூஜைகளுக்காகக் கேட்ட பெரும் தொகையைச் செலுத்த உறவினர்களிடமிருந்து ஐடி ஊழியர் கடன் வாங்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.14கோடியை அந்த கும்பல் தம்பதியிடமிருந்து ஏமாற்றி பறித்துள்ளது.

    பல வருடங்கள் கடந்தும் குழந்தைகளின் உடல்நிலை மாறாமல் இருந்ததால், தம்பதியினருக்கு சந்தேகம் வந்த நிலையில் தற்போது அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் ஒரு சாமியார் உட்பட அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர்.    

    ×