search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bollywood"

    • 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்
    • சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்

    64 வயதான பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்ற தகவல் பரவியது

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அனைத்து வதந்திகளுக்கு முடிவுகட்ட விரும்புகிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை. நான் அரசியலில் ஈடுபடுவதாக முடிவு செய்தால், நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன். ஆகவே இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் தத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற வதந்தி பரவுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத் போட்டியிட்டார்.

    அப்போது அவருக்கு சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்தார். அப்போது சஞ்சய் தத் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. அதற்கு சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2005- ஆம் ஆண்டு மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடவுள் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் உருவாகி வருகிறது
    • இப்படத்தில் தற்பொழுது பிரபாஸுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவர் பிரபாஸ். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பான் இந்தியன் படமான பாகுபலி படத்தில் நடித்தார். இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலித்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் இருந்து பிரபாஸின் புகழ் உச்சத்திற்கு சென்றது முதல் பேன் இந்தியன் ஸ்டார் என பெயரைப் பெற்றார்.

    2019 ஆம் ஆண்டு சாஹோ படத்தில் நடித்தார், 2023 ஆம் ஆண்டு சலார் படம் நடித்தார். பாகுபலி படத்திற்கு அடுத்து நடித்த பான் இந்தியன் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தது.

    இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் கல்கி 2898 என்ற படத்தில் நடித்து வருகிறார். கடவுள் கிருஷ்ணரின் 10 ஆவது அவதாரமான கல்கி அவதாரத்தை மையப்படுத்தி அறிவியல் புனைவு படமாக இப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

    டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தினை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கவிருக்கிறார்.

    இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளைக் ஏற்படுத்தியுள்ளது.

    கல்கி 2898 ஏடி மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கபட்டு வருகின்றது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தற்பொழுது பிரபாஸுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது

    நடிகர் பிரபாஸ் கல்கி படத்தின் படப்பிடிப்பில், தினந்தோறும் அசைவம் சாப்பிடுவதாகவும், கடவுள் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தில் நடிக்கும் பிரபாஸ் இப்படி அசைவம் சாப்பிட்டு கடவுள் அவதாரத்தில் நடிப்பது தவறு என்று பிரபல பாலிவுட் விமர்சகர் கமல் ஆர் கான் {கேஆர்கே} அவரின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய் மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார்.
    • நான் இயக்கிய எனது படங்களின் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை

    தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், தன்னிஷ்தா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் ஜோரம்.

    தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய்  மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார். 69 ஆம் பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த கதை என 3 பிரிவில் ஜோரம் படம் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை வென்றது.

    ஒரு அவநம்பிக்கையான தந்தை, அவர் இறந்துவிட விரும்பும் அமைப்பிலிருந்து தப்பிக்க தனது கைக்குழந்தையுடன் ஓடுகிறார் என்ற கதைகளத்தின் அமைந்த கதை . பல விமர்சகர்களால் ஜோரம் படம் பாராட்டை பெற்றது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான தேவாஷிஷ் மகிஜா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் " நான் இயக்கிய எனது படங்களின் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை. கடந்த 5 மாதங்களாக என் வீடு வாடகையை செலுத்த முடியாத நிலையில் நிற்கிறேன். காரணம் நான் இயக்கி தயாரித்த 'ஜோரம்' படம் எந்த லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் இப்போது நான் கடனாளியாக நிற்கிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
    • பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

    பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

    பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்
    • "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம்

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார் அனில் கபூர்
    • இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் தயங்கியதில்லை என்றார் அனில் கபூர்

    80களிலும், 90களிலும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர், அனில் கபூர் (67).

    சில தினங்களுக்கு முன் அனில் கபூர் சென்னை வந்திருந்த போது அவரிடம் அவரது திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு அவர் பதிலளித்ததாவது:

    இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்.

    தமிழில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள்; ஆனால், எனக்கு இதுவரை எவரும் வாய்ப்பு அளிக்கவில்லை.

    இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதில்லை. தமிழில் வெற்றி பெற்ற "முதல்வன்" மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற "ஸ்வாதி முத்யம்" ஆகிய படங்கள் இந்தியில் உருவான போது அந்த இயக்குனர்களை நானாக தேடிச் சென்றுதான் வாய்ப்பு கோரினேன். அவை இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்கள்.


    கே. பாக்யராஜ் அவர்களின் பல வெற்றி படங்களின் இந்தி உருவாக்கத்தில் நான் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

    கலைத்துறையின் சிறப்பே கலை படைப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உருவாவதுதான்.

    நல்ல எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அனில் கபூர் கூறினார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் கன்னட மொழியில் உருவாக்கிய "பல்லவி அனுபல்லவி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர். அதில் தோன்றும் பல காட்சிகளை மீண்டும் மணிரத்னம் "மவுன ராகம்" திரைப்படத்தில் கார்த்திக்-ரேவதி பங்கேற்கும் காட்சிகளில் கையாண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    90களின் இறுதி வரையில் இந்தி திரையுலகில் மிகக் குறைவான நடிகர்கள்தான் திரையில் மீசை வைத்து கொண்டு நடித்தனர். ஆங்கில பட கதாநாயகர்கள் போல் மீசை மற்றும் தாடி இல்லாமல் நடிப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.


    சத்ருகன் சின்கா, நானா படேகர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.

    அவர்களை போன்றே அனில் கபூரும், மீசையுடனே தனது படங்களில் நடித்தார்.

    கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் அனில் கபூர் கவனம் செலுத்துபவர்.

    எடுத்துகாட்டாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்த "ஸ்லம்டாக் மில்லியனர்", 2011ல் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ, டாம் க்ரூயிஸ் (Tom Cruise) கதாநாயகனாக நடித்த "மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் ப்ரோடோகால்", 2023ல் வெளிவந்த "அனிமல்" உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற முக்கிய கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று தந்தது.


    எப்போதும் இளமை குன்றாத தோற்றத்துடன் இருக்கும் அனில் கபூர், 2019ல் ஒரு பேட்டியில் தனது இளமைக்கு காரணம் தான் விரும்பி உண்ணும் தென்னிந்திய இட்லி, சாம்பார், சட்னி, அரிசி, ரசம் ஆகியவை என கூறியிருந்தார்.

    • திரைப்பட வெற்றிக்கு ரசிகர்கள்தான் பொறுப்பு என்றார் ஜாவெத்
    • அதே வசனங்களை கதாநாயகி பேசியிருந்தால் பெண்ணுரிமை என்பீர்கள் என்றனர் குழுவினர்

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    ஜாவெத், மகாராஷ்டிராவின் அவுரங்கபாத்தில் நடைபெற்ற அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றினார்.

    தற்கால படங்களின் வெற்றி குறித்து பேட்டியளித்த ஜாவெத், "ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது. எந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு ரசிகர்கள்தான் பொறுப்பு" என கூறியிருந்தார்.

    அவரது கருத்து, கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகெங்கிலும் பெரும் வெற்றி பெற்ற "அனிமல்" இந்தி படத்தை குறி வைத்துள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் அனிமல் படக்குழுவினர், ஜாவெத்திற்கு பதிலளிக்கும் வகையில், தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளனர்.

    அதில் அக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:

    கதாசிரியராக நீண்ட அனுபவமும், திறமையும் கொண்ட உங்களை போன்றவரால் ஒரு படத்தில், ஏமாற்றப்பட்ட காதலனின் மன உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்களின் கலைப்படைப்புகள் அனைத்துமே பொய்யானவை.

    இப்படத்தில் இடம் பெற்ற ஆண் பேசும் வசனங்களை ஒரு பெண் பேசியிருந்தால், பெண்ணுரிமை என நீங்கள் கூறியிருப்பீர்கள்.

    காதல் என்பது ஆண், பெண் பேதம் கடந்தது என்பதை உணருங்கள்.

    கதையின்படி, காதல் வயப்பட்டவர் ஏமாற்றி பொய் சொல்கிறார்; அதில் ஏமாற்றப்பட்டவர் தகுந்த பதிலடி கொடுக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, மும்பையில் அனிமல் படக்குழுவினர் மிக பெரிய வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பத்மஸ்ரீ ஜாவெத் 5 முறை தேசிய விருதுகளை வென்றவர்
    • ஆணாதிக்க காட்சியமைப்புகள் அதிகம் இருந்தும் அனிமல் வெற்றி பெற்றது

    இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).

    5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.

    தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.

    மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

    படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.

    எந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

    அப்போதுதான் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என கலைஞர்கள் முயற்சி செய்வார்கள். படங்களில் வரும் தார்மீக எல்லைக்குட்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது.

    இவ்வாறு ஜாவெத் கூறினார்.

    கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகி இந்தியா மற்றும் உலகெங்கும் வெளியான, "அனிமல்" இந்தி படம் உலகெங்கும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால், வன்முறை காட்சிகளும், ஆணாதிக்க காட்சியமைப்புகளும் அதில் அதிகம் இடம் பெற்றிருந்தது.

    பல எதிர்மறை விமர்சனங்களையும் மீறி அனிமல் வெற்றி பெற்றது.

    இப்பின்னணியில், திரைப்பட ரசிகர்களை குறித்த ஜாவெத் அக்தரின் கருத்து பார்க்கப்படுகிறது.

    • மாடலாக இருந்து நடிகையான அவர் இப்பட வெற்றிக்கு பிறகு ரசிகர்களின் கனவுக்கன்னியானார்
    • ரசிகர் பட்டாளம் இருந்தும் படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்

    முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களின் திரைப்படங்கள், ரூ.100 கோடி வசூல் இலக்கை தொட்டால்தான் அதை வெற்றி படமாக இன்னாளில் கருதுகிறார்கள்.

    இந்தி திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய கதாநாயகர்களின் படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சாதாரணமாகி விட்டது.

    கதாநாயகர்கள் மட்டுமின்றி மாதுரி தீஷித், ஸ்ரீதேவி, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் கதாநாயகியாக நடித்த இந்தி திரைப்படங்கள் ரூ.100 கோடி இலக்கை எட்டியுள்ளன.

    ஆனால், பாலிவுட்டில் (இந்தி திரையுலகம்) முதல் முதலாக ரூ.100 கோடி வசூலை அள்ளி குவித்த வெற்றி பட கதாநாயகி இவர்களில் எவரும் அல்ல; கதாநாயகனும் 3 "கான்"களில் ஒருவர் அல்ல.

    1982ல் பப்பார் சுபாஷ் (Babbar Subhash) இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படம் டிஸ்கோ டான்சர் (Disco Dancer). இதில் கதாநாயகனாக மிதுன் சக்ரபொர்த்தியும் (மிதுன் Chakraborty) கதாநாயகியாக கிம் யஷ்பால் (Kim Yashpal) எனும் பிரபல மாடல் ஒருவரும் நடித்திருந்தனர்.


    ஆடல், பாடல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் 8 பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

    மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, ரஷியா, சினா, அரபு நாடுகள், துருக்கி, ஆப்பிரிக்க நாடுகள் என திரையிட்ட இடங்களிலெல்லாம், டிஸ்கோ டான்சர், வெற்றி வாகை சூடியது.

    ஒரு இந்தி திரைப்படம் வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் முதல் முதலாக தொட்டது தயாரிப்பாளர்களே எதிர்பாராத ஒரு ஆச்சரியம்.

    மிதுனுக்காக பெண் ரசிகைகளும், கிம் யஷ்பாலிற்காக ஆண் ரசிகர்களும் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.


    பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக கிம் வலம் வந்தார்.

    டிஸ்கோ டான்சர் வெற்றிக்கு பிறகு கிம்மிற்கென பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தும் படிப்படியே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் கிம்.

    கிம்மின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல்கள் இல்லை.

    1985ல், ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து, தமிழில் "பாடும் வானம்பாடி" எனும் பெயரில் டிஸ்கோ டான்சர் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
    • நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்

    தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.

    தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.

    இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

    அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:

    1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


    2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.


    4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.


    5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.


    6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.


    7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.


    இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.

    • முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
    • அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்

    கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

    மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.

    "நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • வரும் நாட்களில் பிற ஹீரோக்களின் சாதனைகளை அனிமல் முறியடித்து விடும்
    • இது கடவுளின் கருணை என உணர்ச்சிகரமாக பாபி தியோல் பதிவிட்டுள்ளார்

    கடந்த டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" (Animal) உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இவருடன் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    2023 ஆண்டிற்கான "முதல் நாள் வசூல்" சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தி திரையுலகில் தீபாவளி, பக்ரீத் போன்று விடுமுறை நாட்களில்தான் முன்னணி கதாநாயகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். இது அவற்றின் வெற்றிக்கும் பெரிதும் உதவி வந்தது.

    ஆனால், அனிமல் திரைப்படம், விடுமுறை இல்லாத சாதாரண வார நாளில் வெளியிடப்பட்டும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த சில நாட்களில், இந்தி திரையுலகின் பிற முன்னணி ஹீரோக்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரின் இவ்வருட வெற்றி படங்களின் வசூலை அனிமல் தாண்டி விடும் என திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இது குறித்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பாபி தியோல் கண் கலங்கி தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    அதில் பாபி தியோல், "ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

    இந்தி திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், "பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்" என பாராட்டியுள்ளார்.

    தென்னிந்தியா, வட இந்தியா என பேதங்கள் இன்றி மக்கள் விரும்பும் திரைப்படங்கள் எந்த மொழியாக இருந்தாலும், நாடு முழுவதும் ரசிகர்கள் வரவேற்பு அளிப்பதும், அவை வசூலை அள்ளி குவிப்பதும் நல்ல முன்னேற்றம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×