என் மலர்
இந்தியா

இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இதுதான்.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெகபூபா முப்தி ஆதரவு
- தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதே பாலிவுட்டில் அதிகாரம் மாறக் காரணம்
- இவரைப் போல ஒரு எதிர்மறையான மற்றும் பாரபட்சமான நபரை நான் பார்த்ததில்லை.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சமீப காலங்களில் எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதற்கு மதவாத சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போது படைப்பாற்றல் இல்லாத சில நபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதே பாலிவுட்டில் அதிகாரம் மாறக் காரணம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்திருந்தார். "இவரைப் போல ஒரு எதிர்மறையான மற்றும் பாரபட்சமான நபரை நான் பார்த்ததில்லை" என்று அவர் பதிவிட்டார்.
அதேநேரம்பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஏ.ஆர். ரஹ்மான் கருத்தை மறுத்துள்ளார்.
"ரஹ்மான் போன்ற ஒரு பெரிய மேதையை அணுகுவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். அது அவர் மீதான மரியாதையினால் வந்த அச்சமே தவிர, இனவாதம் அல்ல" என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, ரஹ்மானின் கருத்தை ஆதரித்துள்ளார்.
"பாலிவுட்டில் அதிகரித்து வரும் மதவாதமயமாக்கல் குறித்த ஏ.ஆர். ரஹ்மானின் கவலைகளை ஜாவேத் அக்தர் நிராகரிக்கும்போது, அவர் தனது மனைவி ஷபானா ஆஸ்மி உட்பட இந்திய முஸ்லிம்களின் அனுபவப்பூர்வமான மற்றும் பகிரப்பட்ட யதார்த்தங்களுக்கு முரணாகப் பேசுகிறார்.
ஷபானா ஆஸ்மி, மும்பை போன்ற ஒரு பன்முகப் பண்பாட்டு நகரத்தில் முஸ்லிமாக இருந்த காரணத்தால் தனக்கு வீடு மறுக்கப்பட்டதைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பாலிவுட் எப்போதும் நாட்டின் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் ஒரு வாழும் மினி இந்தியாவாக இருந்து வருகிறது. இதுபோன்ற அனுபவங்களை ஒதுக்கித் தள்ளுவது இன்றைய இந்தியாவின் உண்மையை மாற்றிவிடாது." என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.






