என் மலர்
இந்தியா

"நான் சாக விரும்பவில்லை.." தண்ணீர் நிரம்பிய குழியில் விழுந்த கார்.. மூழ்கும்போது தந்தைக்கு போன் செய்த மென்பொருள் ஊழியர்
- சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
- அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 27 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
யுவராஜ் மேத்தா என்ற அந்த இளைஞர், இரவு வேலை முடிந்து கார் மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாகப் சாலையில் எதுவும் தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய ஆழமான குழியில் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சுமார் 5 மணி நேரம் போராடி காரையும், யுவராஜையும் மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.
முன்னதாக அவ்வழியே வந்த டெலிவரி ஊழியரும் அவருக்கு உதவ முயன்றுள்ளார். கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைத்துள்ளார்.
"அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குச் சாக விருப்பமில்லை" என்று கதறியுள்ளார். இதை அவரது தந்தை ஊடகங்களுக்கு வேதனையுடன் தெரிவித்தார்.
அந்தச் சாலையில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று யுவராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






