என் மலர்
தேர்தல் செய்திகள்
மதுரையில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் பலம் குறைந்து இருக்கும் என அவர் நம்புகிறார். அவரது நம்பிக்கை கானல் நீராகி விடும். தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என கூட்டணி அமைத்துள்ளது. அது நடக்கப்போவதில்லை.
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
பகுத்தறிவுவாதிகள் இந்து மத புராணங்களை படித்து தெரிந்திருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு என கி.வீரமணி நிரூபித்து விட்டார். கிருஷ்ணர் குறித்து அவதூறு பேசிய கி.வீரமணி மன்னிப்பு கேட்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும்.
அமேதி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்மிருதி இரானி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவரது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தான் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாடு அவருக்கு பயநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #LaGanesan #RahulGandhi
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டணம் பகுதியில் அவர் பேசியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாம் என்னென்ன அடக்கு முறைகளை சந்தித்தோம் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களை பிரித்து ஆளக்கூடிய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத நீட் போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மீது திணித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விட்டது.
இதனால் வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக வாக்களித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதா நம் மொழியை, கலாசாரத்தை, இனத்தை அடக்கி ஒடுக்கி இந்தியா என்பது ஒருமுக தன்மையுள்ள நாடாக மாற்ற நினைக்கிறார்கள். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நம்மை பிரிக்க நினைப்பவர்கள் தான் பா.ஜனதாவினர்.
இதனை அறிந்து நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். நான் சொல்லவில்லை. தி.மு.க.வினர் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவிலேயே மோசமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த முதல்-அமைச்சர் தமிழ் நாட்டுக்கு தேவையா என்று மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். எனவே நாம் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்த அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை உருவாக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவாக வேண்டும். நாங்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய அத்தனை முயற்சிகளையும் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார். #BJP #Kanimozhi #ADMK
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான காடு வெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், பண்ருட்டி வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேர்ந்துள்ளனர்.
சென்னையில் நேற்று நடந்த விழாவில் இருவரும் வேல்முருகன் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். பா.ம.க.வில் முன்னணி தலைவராக விளங்கிய காடு வெட்டி குரு அதிரடியாக பேசக்கூடியவர். அவரது பேச்சு பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதே போல வன்னியர் சமூகத்தை சேர்ந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், பா.ம.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தார். அவரும் வேல்முருகன் கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், காடுவெட்டி குருவின் குடும்பத்துக்கு உதவியாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி வேல்முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்தார்.
பின்னர் திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. குருவின் குடும்பத்தில் ஒருவர் வேல்முருகன் கட்சியில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. காடு வெட்டி குருவின் சகோதரியும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் பா.ம.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வன்னியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம் அளித்த பேட்டி ஒன்றில், ராமதாஸ் குடும்பத்தினருக்கு எதிராக கருத்துக்களை கூறி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் வன்னியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ராமதாஸ் குடும்பத்தினருக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளோம்.
ஆனால் பா.ம.க. வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Velmurugan #PMK #KaduvettiGuru
செங்கோட்டை:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பண பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பாக பறக்கும்படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 30 பறக்கும்படையினர் கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
கேரளாவில் வருகிற 23-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 9 பறக்கும் படையினர் பல்வேறு பகுதியில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்து தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள், போலீசார் செங்கோட்டை -பண்பொழி சாலையில் விஸ்வநாதபுரம் விலக்கு மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே கேரளாவில் இருந்து வேகமாக வந்த கார்களை தடுத்து நிறுத்தினர். கார்களில் காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை அகற்றுமாறு அதிகாரிகள் கூறினார்கள். இதை தொடர்ந்து அனைத்து கார்களிலும் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அச்சன் கோவிலை சேர்ந்த சுகந்த பிள்ளை மனைவி மீனா குமாரி என்பவர் வந்த காரிலும் சோதனை நடத்தப்பட்டது. மீனாகுமாரி கேரளாவில் காங்கிரஸ் வார்டு கவுன்சிலராக உள்ளார். சோதனையில் அவரிடம் ரூ.1.20 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டனர். அதற்கு அவர் வங்கி கணக்கு புத்தகத்தை காண்பித்தார். அதில் ரூ.1.20 லட்சத்துக்கான கணக்குகள் இல்லை. இதையடுத்து ரூ.1.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தை பெற்று செல்லுமாறு மீனா குமாரியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த பணம் தாசில்தார் வெங்கடாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். கேரள கவுன்சிலரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019
நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி செங்கோடான் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி ஆம்னி வேன் வந்தது. இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.3½ கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தங்க நகைகள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் கொடுப்பதற்காக ஒரு தனியார் கூரியர் ஏஜென்சி நிறுவனம் மூலமாக மதுரையை சேர்ந்த சண்முகராஜா தலைமையில் வேனில் கொண்டு வரப்பட்டது. அவர் சுமார் 7 கிலோ தங்க நகைகளுக்கான ஆவணங்கள் மட்டுமே வைத்திருந்ததாக தெரிகிறது. 1 கிலோ கூடுதலாக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 8 கிலோ தங்க நகையையும் பறிமுதல் செய்து தேர்தல் உதவி அலுவலர் தேவிகாராணியிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு தேவிகாராணி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் 8 கிலோ தங்கத்தையும் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019
புதுவையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஸ்ரீபிரியா பேசியதாவது:-
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 13 மாதங்கள் ஆகிறது. நாம் இப்போது முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறோம். புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகம் நடக்கிறது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் இல்லை.
புதுவையில் கவர்னராக பெண் உள்ளார். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கருதினேன். ஆனால் அவர் முதல்-அமைச்சருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். புதுவையில் இரண்டு சாமிகளும், தமிழகத்தில் ஒரு சாமியும் உள்ளனர். இவர்களால் எந்த நன்மையும் இல்லை. இந்த போலி சாமியார்களை யாரும் நம்பாதீர்கள்.
பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்காக தனி காவல் துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு ஆகியவற்றை பெற்றுத்தர மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு அளியுங்கள். அரசியலை யாரும் தவிர்க்க வேண்டாம்.
நீங்கள் அரசியலை தவிர்த்தால் பொதுவாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். பெண்கள் நினைத்தால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த மாற்றத்துக்கு மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து நேற்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் உள்ள மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும், 18 சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல், தமிழகத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும் நடைபெறும் தேர்தல் ஆகும்.

பிரதமராக உள்ள நரேந்திர மோடி மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை தந்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதாக கூறினார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் அதையும் செய்யவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால் எதுவும் தரவில்லை. மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆட்சி ஆரம்பித்தபோது அடிக்கல் நாட்டிவிட்டு 5 ஆண்டுகளுக்குள் திறந்து இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி முடியும் நிலையில் அடிக்கல் நாட்டி உள்ளார். மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை எப்போது கட்டி திறப்பார்கள் என்று தெரியவில்லை. பிரதமர் மோடியை அனைவரும் இரும்பு மனிதர் என்று சொல்கிறார்கள். அவர் இரும்பு மனிதர் அல்ல, கல் மனிதர் தான்.
அதேபோல் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை, கோடநாடு கொலை வழக்கு, அனைத்து துறையிலும் ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகள் காரணமாகவும், வழக்குகளில் இருந்து காப்பாற்றி கொள்ளவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் கட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து பதவிக்காக சரண் அடைந்துள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியும் அமைத்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை பற்றியும் சிந்திக்கவில்லை, நாட்டை பற்றியும் சிந்திக்கவில்லை. தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி உள்ளார்.
குறிப்பாக மிலாது நபிக்கு அரசு விடுமுறை, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நல ஆணையம், வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் ஆகியவை தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன செய்யபோகிறோம் என்று பாராளுமன்றத்துக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூர் தொகுதிக்கு சுற்றுச்சாலை, புறவழிச்சாலை, பேரணாம்பட்டு, மாதனூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin
பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதி பா.ஜனதா எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் வருகிற 6-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவர் மீண்டும் பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) தான் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மிகப்பெரும் பழமையான கட்சி, மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு ஆகிய மாபெரும் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்தனர். அந்த கட்சி இந்தியாவின் விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றி உள்ளது. மற்றொரு காரணம் உண்மையான உணர்வுள்ள தேசிய கட்சி.
மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் அவர்களது கட்சியில் என்னை சேர்த்துக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் நான் இந்த இடத்துக்கு வந்ததற்கு காரணம், எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதே பாட்னா சாகிப் தொகுதி எனக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியது தான்.
கடந்த தேர்தலில் நான் மோடி அலையால் வெற்றி பெறவில்லை. மோடி அழிவு தான் இருந்தது. குறிப்பாக ஷாநவாஸ் உசேன் பாகல்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அருண் ஜெட்லி அவமானகரமான தோல்வியை சந்தித்தார். எனது நண்பர், வழிகாட்டி, தத்துவவாதியான எல்.கே.அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் போன்ற பா.ஜனதா தலைவர்களை கூட பிரசாரத்துக்கு அழைக்கவில்லை.
இவ்வளவு ஏன், எனது சொந்த மகள் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கூட அழைக்கவில்லை. எனவே பா.ஜனதா கட்சி தயவால் தான் நான் வெற்றிபெற்றேன் என்று அவர்கள் சொல்லக்கூடாது. நான் எனது சொந்த முயற்சியால், கொள்கையால் யாருடைய உதவியும், ஆதரவும் இன்றி வெற்றிபெற்றேன். பா.ஜனதா எனக்கு உதவி செய்யவில்லை, மற்ற வேட்பாளர்களுக்கு உதவி செய்தார்கள்.
மோடி அலையோ அல்லது அழிவோ நாட்டில் எது இருந்தாலும், எனது வெற்றியில் பாட்னா மக்களின் பங்களிப்பு தான் உள்ளது. நாட்டிலேயே அதிக ஓட்டு சதவீதம் எனக்கு கிடைத்தது.
இப்போது என்னை எதிர்த்து போட்டியிடும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எனது குடும்ப நண்பர் போன்றவர், அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்யாமல், பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசுவார் என நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ராகுல் காந்தி பிரச்சினைகளை தைரியமாக கையாள்கிறார். அவர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்ற ஒரு வருடத்தில் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தன்னை நிரூபித்து இருக்கிறார். மிகவும் பிரபலமான வாசகமான ‘காவலாளியே திருடன்’ என்பதை உருவாக்கியவரும் அவர் தான்.
ராகுல் காந்திக்கு அடுத்த பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. மக்களின் ஆசியோடு காங்கிரஸ் பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இது சாத்தியமாகும்.
பா.ஜனதா என் மீது நடவடிக்கை எடுப்பதாக நீண்டகாலமாக மிரட்டி வருகிறது. அந்த நடவடிக்கைக்கு பதிலடி தருவதற்கு சரியான நேரம் இதுதான்.
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார். #ShatrughanSinha #Congress
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பூந்தமல்லியில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2 தினங்களுக்கு முன்பு எனது பிரசாரத்தை தொடங்கினேன். அ.தி.மு.க. கூட்டணி பற்றி உங்களுக்கு தெரியும். மத்தியில் வலுவான ஆட்சி என்ற அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. புலவாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் எதிர் தாக்குதல் நடத்தி அந்த அச்சத்தை போக்கியவர் பிரதமர் மோடி. அவருடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது முதல் வெற்றி.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார். 10 ஆண்டுகளாக பேசாத பிரதமரை வைத்துக்கொண்டு இருந்தவர்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர். காங்கிரஸ் காலத்தில் இருந்து காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
காங்கிரஸ், தி.மு.க.வால் அன்று தொடங்கிய காவிரி பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஈழப்படுகொலை நடந்தபோது ஒன்றாக இருந்தார்கள். தற்போது வைகோவும் ஒன்று சேர்ந்து விட்டார். இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. எதிர் அணியில் பிரதமர் வேட்பாளர் இல்லை.
ராகுல்காந்தி அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவர் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டும் தான் சொல்கிறார். 2 ஆண்டுகள் ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார். #SarathKumar #ParliamentElections
கோலார் டவுனில் உள்ள பி.யூ.கல்லூரி மைதானத்தில் கோலார் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் முனிசாமியை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
பா.ஜனதா அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. ஜந்தன் வங்கி திட்டம் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர். முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.56 ஆயிரம் கோடி வரை தொழில்கடன் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிராமப்புறங்களில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசால், 12 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த கூட்டணி கமிஷன் அடிப்படையில் சேர்ந்த கூட்டணி. முதல்-மந்திரி குமாரசாமி தலையாட்டி பொம்மைபோல் ஆகிவிட்டார். அவர் ‘ரிமோட் கன்ட்ரோல்’ முதல்-மந்திரி போல் செயல்படுகிறார். அவரை இயக்குவது எல்லாம் காங்கிரஸ் கட்சிதான்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இதை அவரே பல இடங்களில் சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் மக்களை அனுதாப அலையில் வீழ்த்தி கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிப்பதுதான் தேவேகவுடா குடும்பத்தின் குணம் ஆகும்.
கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனை தீர்க்க கூட்டணி ஆட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் ராமர் இல்லை, ராமாயணமும் இல்லை என்று காங்கிரசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ராகுல்காந்தி இப்போது கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார். இதிலிருந்து அவர் தேர்தலுக்காக வேஷம் போடுகிறார் என்று மக்களுக்கு தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டின் பாதுகாவலனாக நரேந்திர மோடி உள்ளார். அவரையே மீண்டும் மக்கள் பிரதமராக்க வேண்டும். கோலார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.
இதில் மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடமுனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, வேட்பாளர் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #SmritiIrani #DeveGowda
பெங்களூரு புறநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம். நரேந்திர மோடி பெரிய பொய்யர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வில்லை. தேர்தல் வரும் நிலையில் ‘கிருஷி சம்மன்’ என்ற திட்டத்தை அவர் செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்துக்காக கர்நாடகத்தில் இருந்து 10 லட்சம் விவசாயிகளின் விவரங்களை அனுப்பினேன். இதில் வெறும் 17 பேருக்கு மட்டும் பயன் கிடைத்துள்ளது. ஆனால், நரேந்திர மோடி கர்நாடக அரசை குற்றம்சாட்டுகிறார்.

கர்நாடக அரசு 45 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதுவரை 15 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் உள்பட வெவ்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களை நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் பேச்சை அவர் கேட்கவில்லை. இதன்மூலம், விவசாயிகள் மீது நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை என்பது தெரிகிறது. பா.ஜனதா கட்சி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது.
பா.ஜனதா கட்சி கன்னட மக்களை ஏமாற்றி உள்ளது. மதசார்ப்பற்ற கட்சிகளான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களை பொதுமக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொள்கைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #kumaraswamy #ParliamentElection
பெங்களூரு புறநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ராகுல்காந்தி கலந்து கொண்ட இந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிகள் கண்ணீரில் கைகழுவும் நிலை உருவாகி உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்கள் பயத்தோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
ஜனநாயகம், அரசியல் சாசனம் அழிக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டும். மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும். ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தப்படுகிறது. முதல்-மந்திரி குமாரசாமி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியினர், ஜனதாதளம்(எஸ்) கட்சியினருடனும், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் காங்கிரஸ் கட்சியினருடனும் சேர்ந்து கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். புத்திசாலிகளாக இருக்கும் அனைத்து மக்களும் பா.ஜனதாவுக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Siddaramaiah #PMModi






