search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அரசு"

    • போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
    • சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்

    60களில், தமிழகத்தில் குடிப்பழக்கம் என்பது பரவலாக இல்லை.

    ஆனால், அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில், மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.


    ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு மதுவிலக்கு பேசுபொருளாகி வருகிறது.

    சமீப சில வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேரூன்ற தொடங்கி உள்ளது.


    2021 செப்டம்பர் 13 அன்று, பிரபல தொழிலதிபர் அதானியால் நடத்தப்படும் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில், 3000 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் குஜராத் மாநில போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


    இந்தியாவிற்குள் கொண்டு வரும் போதைப்பொருட்களை, கடத்தல்காரர்கள் குஜராத் வழியாக கொண்டு வர முயல்வது தொடர்கதையாகிறது.

    குஜராத் துறைமுகத்தில் ரூ.19 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி, ரூ.21 ஆயிரம் கோடி, ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.2 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி என அடுத்தடுத்து வெவ்வேறு கால இடைவெளியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ எனும் சந்தேகத்தையே கிளப்புகிறது.

    என்டிபிஎஸ் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் (1 லட்சம் கிலோ) , ம.பி. (32 ஆயிரம் கிலோ) , குஜராத் (12 ஆயிரம் கிலோ), அரியானா (11 ஆயிரம் கிலோ), உ.பி. (4 ஆயிரம் கிலோ), என பெரும்பாலானவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனையும், போதை பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதை காட்டும் வகையில் செய்திகள் வெளிவருவது, தமிழகம் எங்கே செல்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் செய்தி வெளியானது.

    தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வரும் தகவல்களை காணும் பொதுமக்கள், இந்த அபாயகரமான சிக்கலை மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரா என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.


    தென் சென்னை வரை தென்காசி வரை போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளதாகவும், பள்ளி மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து காப்பது பெரும்பாடாக இருப்பதாகவும் பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) அண்மையில் தெரிவித்தார்.

    ஒரு சில விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுடன் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெண்களும் உபயோகிப்பதாகவும் அவ்வப்போது வரும் ஊடக சான்றுகள் எதிர்கால இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்களையே விதைக்கிறது.


    கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் மதுபானம், சிகரெட் போன்றவற்றை விட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், உளவியல் நிபுணர்களையும், மூத்த குடிமக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது.


    குடிப்பழக்கம், சிகரெட் போன்றவைகளுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்த தமிழக ஆண்களும் அவர்களால் பரிதவிக்கும் குடும்பங்களும் ஏராளம்.

    இந்நிலையில், எளிதாக கிடைக்க கூடிய பொருளாக போதைப்பொருட்கள் மாறினால், அதனால் ஏற்படும் சீரழிவு "வருங்கால தூண்கள்" என கூறப்படும் எதிர்கால தலைமுறையே மீள முடியாத அழிவை சந்திக்க நேரிடும் என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது.

    சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும், துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் போதைப்பொருள் பழக்கத்தையும், கடத்தலையும் தடுக்க கடுமையான சட்டங்களும், அவற்றை அமல்படுத்துவதில் கண்டிப்பும் கடைபிடிக்கப்படுகின்றன.


    மனித வாழ்வின் முக்கிய காலகட்டமான இளமையையே வீணடித்து, உடலாரோக்கியத்தில் எண்ணிப்பார்க்க இயலாத நாசத்தை விளைவித்து, உறவுகளால் வெறுக்கப்பட்டு, நடைபிணங்களாக வாழ வைத்து விடும் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு இளைஞர்களில் ஒருவர் கூட பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு, முழுக்க முழுக்க மத்திய-மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

    • தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும்,

    காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, நகர செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக வந்து நேரடியாக தஞ்சை திலகர் திடலுக்கு வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

    • ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    • போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.

    இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-

    ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.

    இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.

    எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.

    இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
    • இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள்.

    புதுடெல்லி:

    வருவாய்த்துறை, உயர் கல்வித்துறை, பாதுகாப்பு துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளிலும், மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களிடம் பணிபுரிய புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.

    ரோஸ்கர் மேளாவின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு விளம்பரம் முதல் நிறைய நேரம் எடுக்கப்பட்டது. காலதாமதத்தை பார்த்து லஞ்சம் பயன்படுத்தப்பட்டது. நாங்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பு செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடன் செய்கிறோம்.

    உழைத்தால் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிவார்கள். 2014 முதல் இளைஞர்களை இந்திய அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை வளர்ச்சியில் பங்கேற்பதற்காக மாற்ற முயற்சித்து வருகிறோம். தற்போது இளைஞர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.

    முந்தைய 10 ஆண்டுகால அரசைவிட 1.5 மடங்கு வேலை வாய்ப்புகளை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு வழங்கியுள்ளது. 1.25 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்களுடன் இந்த துறையில் இந்தியா 3-வது பெரிய சுற்றுசூழல் அமைப்பாக உள்ளது. இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள். இது லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் புதுவையை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுவை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் கல்லூரி வேலை வாய்ப்பில் புதுவைக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேஷன்கடைகளை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தாதது, சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவு செய்யாதது, புதிய தொழிற்சாலைகளை அமைக்காதது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்தும் இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஊர்வலத்துக்காக கடலூர் சாலை ரோடியர் மில் திடலில் காலை 9 மணி முதல் அ.தி.மு.க.வினர் திரள தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் வேன், பஸ் உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

    தொடர்ந்து காலை 11.15 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் ரோடியர் மில் திடலில் தொடங்கி, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணாசாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை பின்புறத்தை அடைந்தது. அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    • பாரபட்சம் காட்டினால் தனி நாடு கேட்கும் சூழல் உருவாகும் என்றார் டிகே சுரேஷ்
    • 4 வருடங்களில் ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சித்தராமையா கூறினார்

    மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்மானத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதாக பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும், எதிர்கட்சிகளின் தலைவர்களும், எதிர்கட்சிகளின் கூட்டணி தலைவர்களும் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூரூ (ரூரல்) பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ், "நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டினால், தென் மாநிலங்கள் தனி நாடு கேட்கும் சூழ்நிலை உருவாகும்" என பேசியிருந்தார்.

    தொடர்ந்து, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, "கர்நாடக மாநில மக்கள் செலுத்தும் வரி, அவர்களுக்கு அவசியமான நேரத்தில் வழங்கப்படாமல், வட மாநிலங்களுக்கு செல்கிறது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரி வருவாயை மத்திய அரசு குறைத்துள்ளதால், கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.45,000 கோடி கர்நாடகாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என கூறினார்.


    இப்பின்னணியில், முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பசவராஜ் ராயரெட்டி, "மத்திய அரசிடம் இருந்து தென் மாநிலங்களுக்கு நிதி பகிர்மானம் முறையாக பெற உதவும் வகையில் ஒரு பொருளாதார மன்றத்தை (economic alliance) உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்த அமைப்பு கூட்டாட்சி தத்துவத்தை சார்ந்து உருவாக்கப்படும். தென் மாநிலங்களுக்கு, அவற்றின் சரியான உரிமையை பெறுவதற்கும், தென் மாநிலங்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் ஒரு தளமாக செயல்படுவதற்கும் இந்த அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும்" என கூறினார்.

    பிப்ரவரி 7 அன்று புது டெல்லியில், இப்பிரச்சனைக்காக கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளனர்.

      கிருஷ்ணகிரி:

      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

      இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

      ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-


       கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


      தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.

      தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மருத்துவம் மற்றும் விளையாட்டு, அயல்நாட்டினரை ஈர்க்கும் காரணங்களில் முக்கியமானவை
      • 2019ல் 10.93 மில்லியன் அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர்

      இந்தியர்கள், தொன்று தொட்டு ஆன்மிக காரணங்களுக்காக நாடு முழுவதும் சுற்றுலா செல்வது வழக்கம்.

      1947 சுதந்திரம் அடைந்த பிறகு அயல்நாட்டினரை ஈர்க்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்க தொடங்கின.

      சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 25, "தேசிய சுற்றுலா தினம்" (National Tourism Day) என கொண்டாடப்படுகிறது.

      சுற்றுலா துறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியில் சுற்றுலாவின் பங்கை மக்களுக்கு உணர்த்தி சுற்றுலா தலங்களையும், உள்ளூர் மக்களையும் ஒருங்கிணைத்து துறையை முன்னெடுத்து செல்லவும், இந்நாளில் நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


      இந்தியாவின் பரந்து விரிந்திருக்கும் கலாச்சார பன்முகத்தன்மை, உணவு வகைகள், வரலாறு ஆகியவற்றின் பெருமைகளை அயல்நாட்டினர் அறிந்து கொண்டு சுற்றுலாவிற்கு அவர்களை ஈர்க்கும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

      கலாச்சார, இயற்கை, பாரம்பரியம், கல்வி மற்றும் தொழில் என பல வகை சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு  ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.

      இதை தவிர, விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்திய சுற்றுலா பெயர் பெற்றது.

      இந்திய பணியாளர்களில் 15 சதவீதம் பேர் சுற்றுலா துறையில் உள்ளனர்.

      ஒவ்வொரு வருடமும் தேசிய சுற்றுலா தின கருப்பொருள் வேறுபடும்.

      2024ல், "நீடித்து நிற்கும் பயணங்கள், நீண்டகால நினைவுகள்" (Sustainable Journeys, Timeless Memories) என்பது கருப்பொருள்.


      உலக புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகையின் "உலகின் 50 அழகான நாடுகள்" பட்டியலில் இந்தியாவிற்கு 7-வது இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

      இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் சுற்றுலா துறையில் இருந்து வருகிறது.

      2019ல், 10.93 மில்லியன் என இருந்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் குறைந்திருந்தது.

      பிறகு, அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, இது அதிகரிக்க தொடங்கியது.

      2023 அக்டோபர் வரையிலான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

      • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
      • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

      புதுச்சேரி:

      காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

      காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

      தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

      விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

      விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

      மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

      தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

      இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

      இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

      பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

      தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

      அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

      கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

      • மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
      • பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும்.

      கோவை:

      தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

      பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்துக்கும் அவர் செல்கிறார். இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது.

      ராமர் அனைவருக்கும் பொதுவானவர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து முக்கிய நபர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அரசு விடுமுறையை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்கின்றன. தமிழ்நாட்டில் விடுமுறை இல்லை என்றாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பெரும் விழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.

      அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மசூதியை இடித்து கோவில் கட்டியதாக கூறும் உதயநிதி வரலாற்றை படிக்க வேண்டும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, வழிகாட்டுதலின் படிதான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. அதனால் இடிப்பதை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.

      மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியாது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.


      கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் தான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்று ஆடியோ வெளியிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்துக்குள் மேலும் 9 ஆடியோக்கள் வெளிவரும். அதன்பின்பு விரிவாக பேசுகின்றோம். இந்த ஆடியோக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கையாண்டு இருக்கின்றனர்? என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இந்த ஆடியோக்களை பொய் என்று தி.மு.க. சொல்லட்டும் பார்க்கலாம்.

      பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார். தேர்தல் கூட்டணி குறித்து பாராளுமன்ற குழு பார்த்து கொள்வார்கள். 32 மாத ஆட்சியில் தி.மு.க. எதையும் மக்களுக்கு செய்யவில்லை. மாநில உரிமையை மீட்டெடுப்பது என்பது வெறும் வாய்ச்சொல்.

      எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி. பா.ஜனதாவில் முதலமைச்சராக என்னை விட முழு தகுதி இருக்க கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பா.ஜனதாவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. மற்ற கட்சிகளை போல முழு கட்சியும் ஒற்றை தலைமை பின்பு இல்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
      • கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

      சென்னை:

      தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.

      மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

      ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?

      தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

      கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

      கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

      இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      • வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
      • அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும்.

      கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நிலம் வைத்துள்ளனர். கடந்த 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தினால் அவர்கள் இந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

      இதனால் நிலப்பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

      இதனைத் தொடர்ந்து மாநில அரசு இடுக்கி மாவட்டத்தில் 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த மசோதாவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். கவர்னரின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு, இந்திய கம்யூனிஸ்ட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (9ந் தேதி) இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      போராட்டத்தின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும். வாகன போக்குவரத்தும் நிறுத்தப்படும். ஆனால் ஐயப்பபக்தர்கள் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ×