என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரான்-இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்
- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
நாகர்கோவில்:
தமிழக மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப் பாக வளைகுடா நாடுகளில் இவர்கள் அதிக அளவு மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து தனியார் ஏஜண்டுகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதன்படி ஈரான் நாட்டுக்குச் சென்ற மீனவர்கள், அங்குள்ள தீவுகளில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தன்குழி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவு வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளிலும் அவர்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறை முகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கி உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிலும் குமரி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
எனவே அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களும், மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டது போல் மீனவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்திய தூதரகம், மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.






