search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்
    X

    அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை- உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்

    • மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
    • பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும்.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி ஒரே மாதத்தில் 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்துக்கும் அவர் செல்கிறார். இது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை காட்டுகிறது.

    ராமர் அனைவருக்கும் பொதுவானவர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து முக்கிய நபர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அரசு விடுமுறையை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்கின்றன. தமிழ்நாட்டில் விடுமுறை இல்லை என்றாலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பெரும் விழாவாக மக்கள் கொண்டாட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் குறித்து பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. மசூதியை இடித்து கோவில் கட்டியதாக கூறும் உதயநிதி வரலாற்றை படிக்க வேண்டும். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, வழிகாட்டுதலின் படிதான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. அதனால் இடிப்பதை பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.

    மாநில அரசு சொல்வதை கேட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியாது. அரசியலமைப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது. வரம்பு மீறி செயல்பட்டதாக சொல்லவில்லை.


    கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட நாடகம் தான் 2ஜி வழக்கு. அந்த வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்று ஆடியோ வெளியிட்டு இருக்கிறோம். அடுத்த வாரத்துக்குள் மேலும் 9 ஆடியோக்கள் வெளிவரும். அதன்பின்பு விரிவாக பேசுகின்றோம். இந்த ஆடியோக்களுக்கு தி.மு.க. பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கையாண்டு இருக்கின்றனர்? என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இந்த ஆடியோக்களை பொய் என்று தி.மு.க. சொல்லட்டும் பார்க்கலாம்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிகப்பெரிய எழுச்சி இருக்கும். மீண்டும் பிரதமராக மோடி நிச்சயம் வருவார். தேர்தல் கூட்டணி குறித்து பாராளுமன்ற குழு பார்த்து கொள்வார்கள். 32 மாத ஆட்சியில் தி.மு.க. எதையும் மக்களுக்கு செய்யவில்லை. மாநில உரிமையை மீட்டெடுப்பது என்பது வெறும் வாய்ச்சொல்.

    எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சியை வளர்ப்பது, தலைவர்களை உருவாக்குவது மட்டுமே என் முதன்மையான பணி. பா.ஜனதாவில் முதலமைச்சராக என்னை விட முழு தகுதி இருக்க கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பா.ஜனதாவில் சிங்கிள் லீடர் என்பதற்கு இடமே இல்லை. மற்ற கட்சிகளை போல முழு கட்சியும் ஒற்றை தலைமை பின்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×