என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    போஸ்டரில் ஆதித்ய தாக்கரே படம் இல்லாததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து வடமத்திய மும்பை பா.ஜனதா வேட்பாளர் பூனம் மகாஜன் உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசினார்.
    மும்பை :

    வடமத்திய மும்பை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போது அங்கு எம்.பி.யாக உள்ள பூனம் மகாஜன் போட்டியிடுகிறார். இதில் அவர் பிரசாரத்திற்காக அச்சிட்ட விளம்பர போஸ்டர்களில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, உத்தவ் தாக்கரே, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலைவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.

    அந்த போஸ்டர்களில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயின் படம் இல்லாதது வடமத்திய மும்பை தொகுதி சிவசேனா இளைஞர் அணியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பூனம் மகாஜனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட போவதில்லை என கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி சிவசேனா இளைஞர் அணி தலைவர் ராகுல் கனால் கூறுகையில், ‘‘நாங்கள் கூட்டணியை மதிக்கிறோம். ஆனால் பூனம் மகாஜன் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றும் வரை அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம். எங்கள் தலைவர்களுக்கே இந்த நிலையென்றால் அவர் எப்படி எங்களை மதிப்பார்’’ என்றார்.

    இதுகுறித்து பூனம் மகாஜனிடம் கேட்ட போது, இது ஒரு சாதாரண பிரச்சினை, பேசி தீர்க்கப்படும் என்றார்.

    இந்தநிலையில் பூனம் மகாஜன் திடீரென உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோரை மாதோஸ்ரீ இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர் விளம்பர போஸ்டர் பிரச்சினை குறித்து விளக்கம் அளித்து, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேயை தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
    மராட்டியத்தில் வருகிற 29-ந்தேதி 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் மும்பை உள்பட 17 தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. #ParliamentElection
    மும்பை :

    நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    முதல் கட்டமாக வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைந்தது. இந்த 7 தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    2-ம் கட்டமாக வருகிற 18-ந்தேதி புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 26-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 179 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

    முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடைபெறும் 17 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தொகுதிகளில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் (நாந்தெட்), முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, பிரகாஷ் அம்பேத்கர் (சோலாப்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.



    இந்த தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தற்போது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    3-ம் கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    4-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந் தேதி நந்தூர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தொகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 9-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 10-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 12-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

    மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா- சிவசேனா, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

    இதுதவிர சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வன்ஜித் பகுஜன் அகாடி கூட்டணி, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection
    ஒவ்வொருவரும் 100 மீட்டர் தூரம் நடக்கும்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்ல கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். #kamalhaasan #makkalneedhimaiam

    திண்டிவனம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையொட்டி திண்டிவனம் காந்தி சிலை அருகே காலை 9 மணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுடன் வேட்பாளரும் அங்கிருந்தார்.

    பகல் 11 மணிக்கு கமல் ஹாசன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். நண்பகல் 12.15 மணிக்கு கமல்ஹாசன் அங்கு வந்து திறந்த வேனில் நின்றபடி விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் ஆரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து பேசினார்.

    நல்ல கட்சிக்கு ஓட்டுப் போட்டு, மாற்று சரித்திரத்தை உருவாக்க வேண்டும். எங்கள் கட்சியில் பணப்பட்டுவாடா இருக்காது. மற்ற கட்சியினர் உங்களின் ஏழ்மை- வறுமையை பயன்படுத்தி கொண்டு உங்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்று விடுகிறார்கள்.

    மக்களும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டுகளை போட்டு விட்டு அதன் பின்னர் 5 ஆண்டுகள் முச்சந்தியில் நிற்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை 5 வருடத்துக்கு கணக்கு போட்டு பார்த்தால் 0.01 சதவீதம் கூட இருக்காது. உங்கள் பணத்தையே ஓட்டுக்காக உங்களுக்கு கொடுத்து விட்டு மீதம் உள்ள பணத்தை கட்சிக்காரர்கள் சேமிப்பாக வைத்துக் கொள்கிறார்கள்.

    ஒவ்வொருவரும் 100 மீட்டர் தூரம் நடக்கும்போதும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்து நல்ல கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். அப்போதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பின்னர் கமல்ஹாசன் புதுவை மாநில வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அங்கிருந்து புறப்பட்டு புதுவை சென்றார். #kamalhaasan #makkalneedhimaiam 

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று ப.சிதம்பரம் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து வருகிறார். பெரியார் இல்லையென்றால் சுயமரியாதை திருமணங்கள் நடந்திருக்காது. பெரியாரை இழிவாக பேசுபவர்கள் உண்மையான தமிழர்களாகவே இருக்க மாட்டார்கள்.

    ரெயில்வே துறையில் கடைநிலை ஊழியர் வேலைக்கு உயர்கல்வி படித்த இளைஞர்கள் கூட விண்ணப்பிக்கும் அவலநிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்ததே கிடையாது.

    100 நாள் வேலை வாய்ப்பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செய்து காட்டியது காங்கிரஸ் அரசு. ரூ.65 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்ததும் காங்கிரஸ் அரசு தான். ஏழை மக்களுக்காக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது மக்களின் கையில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #pmk

    ஓசூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. நான் தனியாக கட்சி தொடங்கினால் நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டத்தை நடத்த முடியாது என்ற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேசிய கூட்டுறவு, வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழய் கிணறுகள் அமைக்கப்படும்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்.

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று பழித்து பேசியவர்களுடன், தற்போது அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர். அப்போது 37 தொகுதிகளில் வெற்றியை அளித்து, மோடி வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

    ஆனால், தற்போது மோடி எங்களுக்கு தந்தை (டாடி) என அ.தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். மோடியல்ல யார் வந்தாலும் இனி இவர்களை காப்பாற்ற முடியாது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சின்னம் வழங்குவதில் இடையூறுகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாம் யாரையும் நாடாமல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்று, பொதுசின்னமாக பரிசு பெட்டகத்தை பெற்றுள்ளோம். இந்த பரிசு பெட்டி அவர்களின் பணப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

    அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #pmk

    பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களிடையே தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த நாட்டின் பாதுகாவலன் என்று மோடி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவரால் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாத்துக் கொள்ள இயல வில்லை.

    இவரது ஆட்சிக் காலத்தில் தான் நமது நாட்டின் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை எதிர் நாட்டின் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கொன்றுள்ளனர். இது தான் மோடி பாதுகாவலனாக இருப்பதின் லட்சணம். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பாதுகாவலான இருக்கலாம்.

    மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வரும் மத்திய பா.ஜ.க ஆட்சியையும், அதன் பினாமியாக நடந்து வரும் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாசரேத் கே.வி.கே சாமி சிலை, சந்தி பஜார் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். கருணாநிதி ஆட்சியின் போது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இப்போது விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

    10-வகுப்பு படித்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை, 50 லட்சம் மக்களுக்கு மக்கள் நலபணியாளர் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தி.மு.க. சொன்னதை செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #bjp #admk

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அதை தடுத்தால் தோல்வி பயம் என்பதா? என்று பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #ponradhakrishnan #duraimurugan

    நாகர்கோவில்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அவற்றை வினியோகமும் செய்வார்கள். அதை தடுத்தால் தேர்தலில் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் கமி‌ஷனின் கடமை. பணப்பட்டுவாடா பல இடங்களிலும் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    குமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் கொடுக்கும் செயல்கள் நடைபெறுகிறது. இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    குமரி மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு உள்ளதை பெரிய பணி இல்லை என்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நாங்குநேரி தொகுதியில் எத்தனை சாலைகள் போட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 150 சாலைகள் போட்டுள்ளோம். இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளது. மக்கள் பிரதி நிதிக்கு இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது.

    நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பாராளுமன்ற தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறியது என்ன ஆனது என்று கேட்கிறார்கள். குமரி மாவட்ட மக்கள் தொகை 20 லட்சம். இவர்களுக்கும் நாடு முழுவதும் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை சுய வேலை வாய்ப்பு மூலம் தொழில் அதிபர்களாக ஆக்க நினைக்கிறோம். துறைமுகம் மூலம் பல ஆயிரம் பேருக்கு அந்த திட்டத்தின் பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #duraimurugan

    கீழ்ப்பாக்கம்-சூளைமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 55 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்பவரிடம் 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டது.

    பூங்காநகரை சேர்ந்த மெய்லி என்பவரிடம் 15 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் பிடிபட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சூளைமேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 கோடியே 32 லட்சம் பணம் பிடிபட்டது. விசாரனையில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை போலீசார் திருப்பி அளித்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk #parliamentelection

    விருத்தாசலம்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசினார்.

    அ.தி.மு.க. தலைமையில் பலமான வெற்றி கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி கட்சியினர் பாகுபாடின்றி வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

    இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக உரிமையை டெல்லியில் மீட்டெடுக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை தேர்தல் முடிந்த உடன் நிறைவேற்றுவோம்.

    தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது. அதனால் அரசு ஊழியர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் தவறு செய்ய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராமத்தம், திட்டக்குடியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவர் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி அவதூறு பரப்பி வருகிறார். அதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரே‌ஷன் கடை, நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை மூடிவிடுவார்கள். மேலும் உரமானியத்தையும் ரத்து செய்து விடுவார்கள்.

    டாஸ்மாக் கடைகளால் தான் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடை திறந்து இருக்கும் நேரத்தை படிப்படியாக குறைத்து, பூரண மதுவிலக்கு கொண்டு வரநடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்காக தனியாக ஒரு பட்ஜெட் போட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ramadoss #dmk #parliamentelection

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று ப. சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரியாளூர் விலக்கு ரோடு பகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.

    அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். இதைத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.


    எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து தயாராக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாடு சோதனையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார்.

    அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாத வாக்குறுதிகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றை கொண்டு வந்து இந்த நாட்டையே நாசப்படுத்தி விட்டார்.

    மதவெறி கொண்ட மோடி நாட்டை மதங்களின் பெயரால் தூண்ட நினைக்கிறார். இந்தியாவில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து பல லட்சம் பேர் வேலை இழக்க காரணமாகி விட்டார்.

    கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். ஆனால் நாட்டின் பிரதமர் பெயரளவிற்குகூட வந்து செல்லவில்லை. ஒரு வேளை புதுக்கோட்டை தனி நாடாக இருந்தால், வந்திருப்பார்போல. மத்தியில் காங்கிரஸ் கட்சியும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான நிவாரணம் வழங்கப்படும்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பார்த்து, இதை எப்படி செயல்படுத்த முடியும் எனக்கேட்ட பா.ஜ.க. இப்போதும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் எனக்கேட்கிறது. காங்கிரஸ் கட்சியும், நானும் என்றும் முடியாததை சொல்ல மாட் டோம். சொல்லியதை பா. ஜ.க. போல செய்யாமல் இருக்க மாட்டோம்.

    நிச்சயம் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அதை காங்கிரஸ் செய்து காட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #pchidambaran #rahulgandhi #mkstalin

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சம்பளம் பெறும் பினாமிகளாக உள்ளனர் என்று மு.க. அழகிரி தெரிவித்தார். #mkalagiri #dmk #mkstalin

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் எம்.எல்ராஜ் மகள் லிபியா-சந்தோஷ் குமார் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது.

    முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில், மு.க. அழகிரி பேசியதாவது:-

    எம்.எல்ராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வந்துள்ளேன். என்னை போல் பலரும் வாழ்த்த வந்துள்ளனர்.

    கட்சியில் பகுதி செயலாளர் துணைச் செயலாளர், இளைஞர் அணி, மாவட்ட துணைச் செயலாளர் என பல பொறுப்புகளுக்கு படிப்படியாக வந்தவர் எம்.எல்ராஜ். கலைஞர் உடன் பிறப்புகளை அப்படித்தான் வைத்திருந்தார்.

    தற்போது தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்கும் பினாமிகளாக உள்ளனர். வெளியில் உள்ளவர்கள் அவர்களை கட்டுப்படுத்துகின்றனர். தற்போது கட்சி அப்படித் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கே. ராஜேந்திரன், கவுஸ்பாட்சா, முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #mkalagiri #dmk #mkstalin

    அமேதி தொகுதிக்கு எதுவுமே செய்யாததால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி இந்தமுறை வயநாட்டுக்கு ஓட்டம்பிடிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை விடுதலை செய்துவிட்டு இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்காக காங்கிரஸ் அரசு அசிமானந்தாவை சிறைக்கு அனுப்பியது என்று குற்றம்சாட்டினார்.



    இந்த மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத ராகுல் காந்தி தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு ஒட்டம் பிடித்திருக்கிறார் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார். #RahulGandhi #Wayanadpolls #Amethipolls #LSpolls #Amit Shah
    ×