என் மலர்
தேர்தல் செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனைகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.
இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் ரூ.78.12 கோடி சிக்கியுள்ளது. தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்படும். உரிய ஆவணங்கள் இல்லாத பணம், நகைகள் பறிமுதல் செய்யப்படும்.
வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனை நடத்தி வருகிறோம். வருமான வரித்துறை மற்றும் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடக்கிறது.
வேலூரில் நடத்தப்பட்டு வரும் சோதனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்கு மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வேலூர் தொகுதியில் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளோம்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்வது பற்றி தலைமை தேர்தல் ஆணையம்தான் ஆலோசித்து முடிவு செய்யும்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார். #LoksabhaElections2019 #SathyaPrathaSahoo
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், அவரது முயற்சி கைகூடவில்லை.

கூட்டணிக்காக தன்னை கெஜ்ரிவால் அணுகவில்லை என ஷீலா தீட்சித் கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ‘நாங்கள் ராகுல்காந்தியை சந்தித்தோம். அவரைவிட ஷீலா தீட்சித் முக்கியமான தலைவர் அல்ல’ என்றார்.
கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஷீலா தீட்சித் மற்றும் 3 செயல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. #LokSabhaElections2019 #Rahul #Kejriwal
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கட்சி மேலிடம் அவரது பிரசார திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி 6-ந் தேதி (சனிக்கிழமை) அவர் தேனியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மறுநாள் (7-ந்தேதி) கன்னியாகுமரி செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய செல்கிறார்.
மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் அவர் ஆரணி, திருவள்ளூர் உள்பட மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் ஒடிசா மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
முதற்கட்ட தேர்தல் பிரசாரம் ஓயும் நாளான 16-ந்தேதி வரை தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #Loksabhaelections2019 #Congress #Kushboo
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை காரைக்குடியில் இருந்து சிவகங்கை, பூவந்தி, மதுரை ரிங் ரோடு வழியாக தூத்துக்குடி வரும் எடப்பாடி பழனிசாமி ஜோதிபுரம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடியில் அமித்ஷா மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. வெற்றி முகத்துடன் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் எங்களுக்கு சாதகமாக உள்ளது.
தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும். எங்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. துரை முருகன் வீட்டில் தற்போது நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.
8 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையிலேயே வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள். நான் நேர்மையான வேட்பாளர். ராகுல் காந்தி வடக்கே தோற்று விடுவோம் என்ற பயத்தில் தான் கேரளாவில் போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணியினருக்கே அவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வட மாநில கருத்து கணிப்புகளில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. எங்களை பொறுத்த வரை 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.
தூத்துக்குடி தொகுதியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நான் கூறுவதாக கனிமொழி சொல்கிறார். நாங்கள் நிறைவேற்றக்கூடிய நல்ல திட்டங்களை தான் சொல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #BJP #Tamilisaisoundararajan
தஞ்சையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை பிரசாரம் செய்தார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றனர். தஞ்சையிலும் ஏராளமான வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளனர். வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சை பகுதி மக்களின் வளர்ச்சி பணிக்காக பாடுபட்டு வருகிறார். தற்போது த.மா.கா.விற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏழை- எளிய மக்களின் சின்னமாகும். இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சியே.
மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியும் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை கீழவாசலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். அ.தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். #LokSabhaElections2019 #TamilMaanilaCongress #GKVasan
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஏ.எப்.டி. மில் திடலில் நேற்று இரவு மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் புதுவை மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை கமல் ஹாசன் வெளியிட்டு பேசியதாவது:-
புதுவையை தமிழகத்தின் ஒரு பகுதியாகத் தான் நான் பார்க்கிறேன். ஆனாலும் தனித்தன்மையை புதுவை இழந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் தான் புதுவைக்கும், தமிழருக்கும் பெருமை,
அரசியல் கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் நல்ல கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். நாங்கள் திறமையையும், நேர்மையையும் வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். படித்தவர்கள் அனைத்து இனத்திலும் உள்ளனர் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது.
தமிழகம் மற்றும் புதுவை படுத்த படுக்கையில் கிடக்கிறது. அதை எழுந்து நிற்க வைக்க வேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதனை உங்களின் வாக்குகளால் மாற்றியமைக்க முடியும் டுவிட்டரில் அரசியல் வாதிகள் மீது காட்டும் கோபத்தை இளைஞர்கள் தேர்தலில் வாக்களித்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எங்களுக்கு நல்ல யோசனை கொடுப்பதே எங்களது விரோதிகள் தான். டுவிட்டரில் மட்டுமே இயங்கி வந்ததாக என்னை விமர்சனம் செய்ததால் அடுத்த 3 மாதங்களில் அரசியல் களத்துக்கு நேரடியாக வந்து விட்டேன். எங்களுடைய தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளோம்.
அதை எப்படி செய்ய முடியும் என கேள்வி கேட்கின்றனர். வேலைகளை பல பிரிவுகளாக பிரித்து ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வழங்குவோம்.
புதுவை மாநிலத்தில் நிறை குறைகளை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளோம். இந்த தேர்தல் அறிக்கைகள் அள்ளி வீசப்படுபவை அல்ல. எங்களால் எதை செய்ய முடியும் என்பதை நன்கு அலசி ஆராய்ந்து வடிகட்டி இதை தயார் செய்துள்ளோம். இந்த அறிக்கையை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வக்கீல், டாக்டர் என பலரும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.
என்னை புகழின் உச்சியில் வைத்து மக்களுக்காக என்ன செய்தேன் என்பதை சிந்தித்தேன். அந்த குற்ற உணர்வு காரணமாகத்தான் இந்த தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சொந்த வாழ்க்கைக்கு தேவைப்படும் பணத்துக்காக மட்டுமே திரையுலகில் நடிக்கிறேன். உங்களை போலத் தான் பசித்து, விழித்து, தனித்து இருக்க வேண்டும் என்பதற்காகவே யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறோம். தமிழகம், புதுவையின் தலைவிதியை மாற்றிய மைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜன் வரவேற்றார். சிறப்பு பேச்சாளர் நடிகை ஸ்ரீபிரியா, துணைத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான மகேந்திரன், வேட்பாளர்களான ரவி (சிதம்பரம்), அண்ணாமலை (கடலூர்), மவுரியா (வடசென்னை), அன்பின் பொய்யாமொழி (விழுப்புரம்), குருவைய்யா (நாகப்பட்டினம்) மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
முடிவில் பிராங்ளின் பிரான்சுவா நன்றி கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரக்கோணம் பாண்டிய நல்லூரில் உள்ள சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பேசியதாவது:
அரக்கோணத்திலே நமது கழக வேட்பாளர், அசோகனை எதிர்த்து அதிமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் பாமக வேட்பாளர் போட்டியிடவுள்ளார். அதிமுக - பாமக சேர்ந்ததில் ஆச்சரியத்திற்கு இடமில்லை. பாமக தலைவர் டாக்டர். ராமதாஸ் குறித்து உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. தமிழக சட்டப்பேரவையிலே ஜெயலலிதாவின் படம் வைக்கக்கூடாது எனவும், அவர் மக்களுக்கு நன்மை செய்துள்ளாரா? என கேள்வியும் எழுப்பியவர்.

வன்னியர் சங்க சொத்துக்கள் முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்கவே, பாமக- அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுகவை ஏளனம் செய்யும் தகுதி பாமகவிற்கு இல்லை.
அவர்கள் கூறிவருவதை போல், சாதாரணமாக நான் தலைவர் ஆகவில்லை. 50 ஆண்டுகள் கழகத்திற்காக உழைத்துள்ளேன். மேலும் நான் இந்துக்களுக்கு விரோதி என கூறிவருகின்றனர். என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒரு போதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரியும் இல்லை. என்னை குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.
இன்று திமுக ஆட்சி ஒரு வன்முறை ஆட்சி என கூறும் பாமகவினர் தான், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என நான் கூறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

இந்நிலையில், கொடநாடு விவகாரம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை கோரி அதிமுக செய்தி தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதேபோல் பிரசாரத்தின்போது கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. #KodanadIssue #MKStalin #MadrasHighCourt
ஈரோடு:
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் செ.நல்லசாமி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை பவானிசாகர். 1958-லிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அணை நீர் நிர்வாகத்தில் அரசு ஆணைகள் பின்பற்றப்படவில்லை.
விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. காவிரித் தீர்ப்பும் கண்டு கொள்ளப்படவில்லை. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே நீர் நிர்வாகம் நடத்தப்பட்டுள்ளது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
நீர் நிர்வாகத் தவறுகளை அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாகத் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆனால் அது இங்கு எடுபடவில்லை.

தவறான இந்த நீர் நிர்வாகமானது பாசனப் பயனாளிகளிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றம் வரை கொண்டு செல்ல வைத்துள்ளது. இந்தத் தவறான நீர் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.
2019 பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பவானி பாசனம் பெறும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீர் நிர்வாகத் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என நிரூபித்து விட்டால் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோடி ரூபாய் பரிசு கொடுக்கும்.
மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற்றால் கோடி ரூபாய் பரிசு கிடைப்பதுடன் தேர்தல் வெற்றியும் உறுதியாகும்.
ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை அறிந்தவராகவும் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பவராகவும் இருக்க வேண்டும். கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் விடுத்திருக்கும் இந்த அழைப்பை ஏற்க மறுப்பது அரசியல் அநாகரீகம் ஆகும். இவற்றை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிப்பதே அரசியல் நாகரீகம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Farmers #BhavanisagarDam
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அவரது மகனுக்கு சொந்தமான கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இதற்கிடையே வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #Duraimurugan #KathirAnand
பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகியவை இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேர்தல் அறிக்கைகளை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிக்கை முன்வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மத்திய பா.ஜ.க. அரசு தனது பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.
அதற்கு போட்டியாக காங்கிரஸ், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது. இந்த திட்டம் நாளை வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளது.
இத்துடன் பல வித்தியாசமான திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர்.
அரசு துறை வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் வேலைகளுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிரப்புவது போன்ற அறிவிப்புகளும் வர உள்ளன.
எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால் உடனடியாக அவர்களது பதவி பறிபோகும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என்ற அம்சமும் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது.
விவசாயிகள் கடன்கள் ரத்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை சுகாதாரத்துக்கும், 6 சதவீதத்தை கல்விக்கும் ஒதுக்குவது, ஜி.எஸ்.டி. வரிக்காக தனியாக கவுன்சில் அமைத்து இருப்பது போல விவசாயம் மற்றும் கல்விக்கும் கவுன்சில் அமைப்பது.
உரம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு அளிப்பது, விவசாயிகளுக்கு கடன் கிடைக்க எளிதான திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது.
தொழில்களை மேம்படுத்த பல்வேறு சலுகைகள், வரி விதிப்பில் மாற்றங்கள், முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் போன்ற வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன. #LokSabhaElections2019 #congress
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ராகுல் தற்போது அங்கு 4-வது முறையாக களம் இறங்கி உள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தி மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த மாதம் 2-வது வாரம் தகவல்கள் வெளியானது. தென்னிந்தியாவில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அவர் ஒரு தொகுதியை தேர்வு செய்வார் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம், தங்களது மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிக தீவிரமாக வலியுறுத்தினார்கள். இதை ராகுல் ஏற்றுக்கொண்டார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வயநாடு தொகுதி கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.
2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி இங்கு வெற்றி பெற்றது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் சுமார் 60 சதவீதம் பேர் இருப்பதால் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமான செல்வாக்கு பெற்ற தொகுதியாக திகழ்கிறது.
இதை கருத்தில் கொண்டே வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தென் மாநிலங்கள் மீது அதிக மரியாதை, மதிப்பு ஆகியவற்றை காங்கிரஸ் வைத்திருப்பதால் ராகுல் வயநாடு தொகுதியை தேர்வு செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே மும்முனை போட்டி நடைபெற உள்ளது. ஆனால் காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டுக்கும் இடையில்தான் உண்மையான போட்டி நடைபெற இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இந்த தொகுதியில் சி.பி.சுனீர் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். ராகுல் களம் இறங்கி உள்ளதால் சுனீர் வெற்றி வாய்ப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
இதனால் கேரள மாநில கம்யூனிஸ்டு தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என்று கம்யூனிஸ்டுகள் சவால் விட்டுள்ளனர்.
வயநாடு தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே மனுதாக்கல் தொடங்கி விட்டது.
மனுதாக்கல் செய்ய வருகிற 4-ந்தேதி கடைசி நாளாகும். மனுதாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே அவகாசம் உள்ளன. இதனால் அந்த தொகுதியில் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. எனவே இன்றும், நாளையும் ராகுல் வயநாடு வர வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) ராகுல் வயநாடு வந்து மனுதாக்கல் செய்வார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று அமிர்த சித்தயோக தினம் என்பதால் அன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.
ஒருவேளை புதன்கிழமை மனுதாக்கல் செய்யாவிட்டால் மனுதாக்கலுக்கு இறுதி நாளான வியாழக்கிழமை அவர் மனுதாக்கல் செய்வார். அன்றைய தினம் அமாவாசை என்பதால் அன்று பிற்பகல் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே புதன் அல்லது வியாழன் கிழமையில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்து விடுவார்.
வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி வரும்போது அவருடன் பிரியங்காவும் வர உள்ளார். அவர்கள் இருவரும் வயநாடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் திறந்த காரில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் மனுதாக்கல் செய்ய செல்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கேரளா மாநில காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
வயநாடு தொகுதியில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் அனைத்தும் 5-ந்தேதி பரிசீலனை செய்யப்படும். தகுதியில்லாத மனுக்கள் அன்று நிராகரிக்கப்படும்.
மனுக்களை திரும்ப பெற 8-ந்தேதி கடைசி தினமாகும். அன்று மாலை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அப்போது ராகுலுடன் மோதும் வேட்பாளர்கள் யார்-யார் என்பது தெரிந்து விடும்.

ராகுல் அங்கு போட்டியிடுவதால் பா.ஜனதா அந்த தொகுதியை கேட்டு பெறும் என்று தெரிகிறது. அப்படி பெற்றால் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியையே வயநாட்டிலும் களம் இறக்கலாமா? என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அப்படி ஸ்மிரிதி இரானி களம் இறங்கினால் வயநாடு தொகுதியும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். #Rahul #LokSabhaElections2019 #WayanadLS






