என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கும் வேட்பாளருக்கு ரூ.1 கோடி பரிசு
    X

    பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கும் வேட்பாளருக்கு ரூ.1 கோடி பரிசு

    பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கும் வேட்பாளருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. #Farmers #BhavanisagarDam

    ஈரோடு:

    கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் செ.நல்லசாமி கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை பவானிசாகர். 1958-லிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக அணை நீர் நிர்வாகத்தில் அரசு ஆணைகள் பின்பற்றப்படவில்லை.

    விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. காவிரித் தீர்ப்பும் கண்டு கொள்ளப்படவில்லை. விருப்பு, வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே நீர் நிர்வாகம் நடத்தப்பட்டுள்ளது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

    நீர் நிர்வாகத் தவறுகளை அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாகத் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆனால் அது இங்கு எடுபடவில்லை.

     


    தவறான இந்த நீர் நிர்வாகமானது பாசனப் பயனாளிகளிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கி உள்ளது. நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றம் வரை கொண்டு செல்ல வைத்துள்ளது. இந்தத் தவறான நீர் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஆகும்.

    2019 பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பவானி பாசனம் பெறும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நீர் நிர்வாகத் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என நிரூபித்து விட்டால் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோடி ரூபாய் பரிசு கொடுக்கும்.

    மேலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு வாதிட்டு வெற்றி பெற்றால் கோடி ரூபாய் பரிசு கிடைப்பதுடன் தேர்தல் வெற்றியும் உறுதியாகும்.

    ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை அறிந்தவராகவும் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பவராகவும் இருக்க வேண்டும். கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் விடுத்திருக்கும் இந்த அழைப்பை ஏற்க மறுப்பது அரசியல் அநாகரீகம் ஆகும். இவற்றை உணர்ந்து வாக்காளர்கள் வாக்களிப்பதே அரசியல் நாகரீகம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Farmers  #BhavanisagarDam

    Next Story
    ×