என் மலர்
தேர்தல் செய்திகள்
திருச்சி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து கந்தர்வக்கோட்டை, துவாக்குடி மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் நாடு வளர்ச்சி பெறவும், பாதுகாப்புடன் இருக்கவும் தகுதியான பிரதமர் தேவை என்பதை உணர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். நாம் இங்கு மெகா கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் வைகோவை கூறலாம்.
வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கிவிட்டு, இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். மக்கள் மீது அக்கறையுள்ள கூட்டணி நமது கூட்டணி. கொள்கை உடைய கூட்டணி நமது கூட்டணி. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சேர்ந்துள்ள கூட்டணி. ஆனால் அவர்களின் கொள்கை இல்லாத கூட்டணி.
இன்றைக்கு ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. அரசு என்ன செய்தது என்று பேசி வருகிறார். கடந்த 22-ந்தேதி முதல் இன்று 1-ந்தேதி வரை நான் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. அரசு எம். ஜி.ஆர். காலத்தில் என்ன செய்தது, ஜெயலலிதா காலத்தில் என்ன செய்தது ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் இந்த அரசு என்ன செய்தது என்பதை புள்ளி விவரங்களுடன் கூறி வருகிறேன்.
ஆனாலும் அவர் அதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேசி வாக்காளர்களை குழப்பி வருகிறார். இந்த மெகா கூட்டணியை பார்த்து அவர் மிரண்டு போயுள்ளார். விரக்தியில் அவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசி வருகிறார்.
நேற்று முன்தினம் கூட பிரசாரத்தில் ஒரு முதலமைச்சரான என்னை மண் புழு என்று பேசியுள்ளார். மண்புழு என்றைக்கும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மண்புழு இயற்கை உரமாக பயன்படும். மக்கள் என்ற செடியை வளர்க்க உரம் தேவைப்படுவது போல நான் மக்களுக்கு மண்புழுவாக பயன்பட விரும்புகிறேன்.
செடி எப்படி வளர்ந்து வரும்போது பூச்சி தாக்குமோ அதுபோல பூச்சி வைரஸ் கிருமியாக தேர்தல் என்ற மருந்து மூலம் வைரஸ் பூச்சியான ஸ்டாலினை தேர்தல் மூலம் மக்கள் அகற்ற வேண்டும். அப்போது தான் நாடு செழிக்கும். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை விமர்சிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். அவர் பூதக்கண்ணாடியை போட்டு பார்த்தால் கூட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குறையையும் கண்டு பிடிக்க முடியாது.
தமிழக மக்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு இல்லை என்பது தெரியும். 4 நாட்களுக்கு முன்பு கூட ஒரு கர்ப்பிணியை ரெயிலில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்தன. தனியார் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு தி.மு.க.வினர் பில் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை அடித்து அராஜகத்தில் ஈடுபடுவதை கண்கூடாக பார்க்கிறோம்.
பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். அடுத்த நாள் தகராறு செய்த ஓட்டலுக்கு ஸ்டாலின் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். இப்படி அராஜகத்தில் ஈடுபடுபவர்களை எல்லாம் அ.தி.மு.க. சட்டப்படி தண்டனை வழங்கி வருகிறது. தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே தொண்டர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே இப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்களே? ஆளும் கட்சியாக வந்தால் என்ன செய்வார்கள். ஆளும் கட்சியாக அவர்கள் ஒருபோதும் வர முடியாது. ஆனால் அராஜகம் செய்யும் தி.மு.க.வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவுக்கு மரணத்தை கண்டுபிடிப்போம் என கூறி வருகிறார். யாரால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டார் என மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, துன்பப்பட்டு சித்தரவத்தைக்கு ஆளாகி தி.மு.க. அரக்கர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்த நிலையில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இறக்க வைத்துவிட்டனர். தற்போது இது குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதுபற்றி நான் விரிவாக கூற முடியாது.
ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, அவரின் ஆசி பெற்ற இந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி பெண்கள் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்களா? பெண்களை பற்றி பேச தி.மு.க.விற்கு தகுதி கிடையாது. இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். மத்தியில் நிலையான ஆட்சி வரவேண்டும் என்று தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். கடந்த 2011, 2016-ல் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றி காட்டியது. ஆனால் தி.மு.க. என்றைக்கும் நிறைவேற்றியது கிடையாது.
15 ஆண்டுகளாக மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது. மத்திய அரசிடம் ஏதாவது நிதி பெற்று திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. 15 ஆண்டு காலமாக தங்கள் குடும்பத்தினர் பதவிக்கு வர வேண்டும் என கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் மக்கள் பணி செய்ய தான் அ.தி.மு.க. அரசு உள்ளது.
திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். முக்கொம்பில் ரூ.350 கோடியில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #EdappadiPalaniswami #MKStalin
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய எம்.பி. தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். 3 இடங்களில் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கிரீஷ் குமார் நாயுடு என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுயேட்சையாக களத்தில் இறங்கி உள்ள அவருடைய பெயர் சென்னை வேளச்சேரி தொகுதி, பெங்களூரு சாந்திநகர் தொகுதி, தெலுங்கானா மாநிலம் சிரிலிங்கபள்ளி தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேர்தல் விதிப்படி இது தவறு.
தேர்தல் அதிகாரி, எங்கள் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj
கோபி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி உமாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, முருகசாமி அடங்கிய குழுவினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது லாரியில் இருந்த மாரிமுத்து என்பவரிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்ததில் அவர் தக்காளி பழம் வாங்க செல்வதாக கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் தாசில்தார் முன்னிலையில் ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.
பனப்பாக்கம்:
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வலம் வந்து வணங்கினார்.
அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் தொகுதி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையப்போகிறது. நான் இதுவரை 10 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளேன். செல்லும் இடங்களெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் தூண்டுதல் எதுவுமில்லை. இதற்கு முன்பு தலைமை செயலாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரம் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிழக்குமாவட்ட செயலாளர் நித்யா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர்கள் வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகியோர் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றால் மத்திய மந்திரி ஆகி விடுவார். அதனால் தேனி தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தென்னக நதிகள் இணைக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் வையாபுரி பேசுகையில், ஆண்டிப்பட்டி தொகுதி மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. அவர்கள் வென்ற பிறகு இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கினர். அ.திமு.க.வின் கோட்டையாக உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் இந்த தொகுதி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கிடைக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார். #LokSabhaElections2019 #ADMK
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் ஆசிரியர் காலனியில் பறக்கும் படை அலுவலரும் எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருமான லதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை பச்சாபாளையத்திற்கு சென்ற ஆவின் பால் லாரியைநிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் மேட்டுப்பாளையம் ராஜீவ் நகரைச்சேர்ந்த டிரைவர் ரத்தினசபாபதி(21) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3லட்சத்து 32 ஆயிரத்து 120ஐ கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கூடுதல்தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் புனிதாவிடம் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
விருதுநகர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார், தேங்காய் வியாபாரி. இவர் லாரியில் தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு விருதுநகர் வந்தார்.
பின்னர் விற்பனை பணம் ரூ.80 ஆயிரத்துடன் லாரியில் ஊருக்கு புறப்பட்டார். அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதியில் வந்த போது பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான குழுவினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்கள் சரவணகுமாரிடம் இருந்த ரு.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை எனகூறி வட்டாட்சியர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் தனது மகள் திருமணத்திற்காக திருச்சி சென்று பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆவியூர் சோதனை சாவடி வந்தபோது பறக்கும் படை அதிகாரி ராமராஜி காரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய ஆவணம் இல்லை என கூறி தமிழ்மணி வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தார்.
மானாமதுரை 4 வழிச் சாலையில் உள்ளது குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியின் தாளாளர் பூமிநாதன் காரில் சென்றார். திருப்பாச்சேத்தி சோதனை சாவடி அருகே வந்தபோது பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி தலைமையிலான குழுவினர் காரை நிறுத்தி சோதனை செய்த னர்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பூமிநாதன் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் வாக்குகள் சேகரித்தார். அவர் பேசியதாவது:-
காஞ்சிபுரம் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் மரகதம்குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு போட்டியிடும் ஆறுமுகம் ஆகியோரை பெருவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்ய வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றால் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாக உருவாக்குவது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேலும் தொகுதிமக்களுக்காக பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கேட்டு பெற்று தொகுதிவளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பார்கள். எங்களின் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மீண்டும் மோடி பிரதமரானால் ஜிஎஸ்டி வரிகுறைப்பு, வேலைவாய்பை அதிகரித்தல். இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்ற வலியுறுத்தப்படும். சதிகாரர்கள், சூழ்ச்சிகாரர்களுக்கு இந்த தேர்தலில் தக்கபாடம் புகட்டுங்கள். 40 பாராளுமன்ற தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளில் நம் கூட்டணி வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க, புரட்சிபாரதம்,த.மா.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டணிகட்சி தொண்டர்கள் கட்சிகொடியுடன் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். #PremalathaVijayakanth #DMDK #ADMK
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அவரது தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிரசார திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (3-ந்தேதி) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-ந்தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவருக்கு ஆரல்வாய் மொழியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிறகு இரவு 8 மணிக்கு திங்கள்சந்தையில் எடப்பாடி பழனிசாமி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்குகிறார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
காங்கிரசில் ராகுல் காந்தி- பிரியங்கா இருவர் மட்டுமே தற்போது முக்கிய பிரசாரகாரராக உள்ளனர்.
இவர்களை தவிர மக்களை கவரும் முக்கிய நபர்கள் இல்லை. ஆனால் இப்போது இந்த இடத்தை கிரிக்கெட் வீரர் சித்து பிடித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் முக்கிய பிரமுகராக இருந்த சித்து பஞ்சாபில் கடந்த சட்டசபை தேர்தல் காலத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் அவருக்கு மாநில மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
சித்து மிகச்சிறந்த பேச்சாளர் ஆவார். கருத்துக்களை மக்களுக்கு எளிதாக எடுத்துக் கூறுவதுடன் கேலி, கிண்டலுடன் மக்கள் மனம் மகிழும் வகையில் பேசுவார்.
சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் அவர் பிரசாரத்துக்கு அழைக்கப்பட்டார். அவரது பிரசாரம் நன்றாக எடுபட்டது.
இப்போது பாராளுமன்ற தேர்தலிலும் அவரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர். பல மாநிலங்களில் தங்கள் ஊருக்கு பிரசாரம் செய்வதற்கு அவரை அழைத்த வண்ணம் உள்ளனர்.
எனவே இந்தி பேசும் மாநிலங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார். மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.
பிரியங்கா தங்கள் மாநிலத்துக்கு வந்து பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல தலைவர்களும் அழைக்கிறார்கள்.
ஆனால் உத்தரபிரதேசத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால் அதிக அளவில் வெளி மாநில பிரசாரம் செல்ல அவர் விரும்பவில்லை.
அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை தவிர்த்து உத்தரகாண்ட், டெல்லி மாவட்டங்களில் பிரியங்கா பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ராகுல், பிரியங்கா செல்ல முடியாத இடங்களுக்கு சித்துவை பிரசாரத்துக்கு அழைக்கிறார்கள். #LokSabhaElections2019 #Congress #NavjotSinghSidhu
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.வெற்றிவேல் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுவதால் மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தொகுதியில் நன்கு அறிமுகமான இவர் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டி வருகிறார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர் பவானி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் மார்க்கெட் பகுதி முழுவதும் வாக்கு சேகரித்தார்.
1 முதல் 8 வரை உள்ள பிளாக்குகளில் அனைத்து தெருக்களிலும் ஜீப்பிலும், ஆட்டோவிலும் சென்று வாக்கு சேகரித்தார். கருணாநிதி தெரு, அம்பேத்கர் தெரு, காமராஜர் சாலை, காந்தி நகர், டீச்சர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேட்பாளர் வெற்றிவேல் கேட்டுக் கொண்டார். அவருக்கு சிறுபான்மை மக்களும், பொது மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டனர்.
பிரசாரத்தில் நிர்வாகிகள் பழனி, லட்சுமி நாராயணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #AMMK
ஆரணி:
ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி வி.ஏழுமலையை ஆதரித்து ஆரணியில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நல்லவர்கள் எல்லாம் இணைந்த கூட்டணி தான் அ.தி.மு.க. எதிரணியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் அனைவருமே அடாவடி. மத்தியில் 10 ஆண்டுகாலம் அமைச்சரவையில் இருந்த தி.மு.க.வினர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, கடந்த முறை சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் பயனாக காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.
நமது ஆட்சியின் போதே எதிர்கட்சியில் இருப்பவர்கள் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சியாக வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
இந்த தேர்தலோடு நாங்கள் காணாமல் போவோம் என்று கூறுகிறார்கள். தி.மு.க.வால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் தற்போது தொடர்வதுடன், கூடுதலாகவும் மக்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது’’ என்றார்.
இதனையடுத்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செங்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. அரசு ஏழை எளிய தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அதைக் கொடுக்கக்கூடாது என, தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்குப்போட்டு தடை செய்து விட்டனர். தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாயை மீண்டும் வழங்கும்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது, அதன் கூட்டணியில் தி.மு.க.சார்பில் 9 மந்திரிகள் இருந்தார்கள். அவர்கள், தமிழகத்துக்கு எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. செங்கம் விவசாயம் சார்ந்த பகுதி. இங்குத் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இந்தப் பகுதி வளர்ச்சிக்கு தமிழக அரசு பாடுபடும்.
சமீபகாலமாக தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டீக்கடை முதல், புரோட்டாக்கடை வரை வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை தூண்டி விட்டு, பொதுமக்களின் அமைதியை கெடுக்கிறார்கள். நானும் ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். இதுபோல நடந்ததில்லை.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள கடலைக்கடை சந்திப்பு அருகில் இரவு 9 மணி அளவில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செங்கத்தில் பிரசாரம் செய்துவிட்டு இரவு 10.35 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வந்தார். பிரசாரம் நேரம் முடிந்துவிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இரட்டை விரலை காட்டிவிட்டு சென்றார். #LokSabhaElections2019






