என் மலர்
தேர்தல் செய்திகள்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. எனவே பா.ஜனதா இயக்கிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க.விற்கு பயம் வந்துவிட்டது. அதனாலே சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பாரபட்சமாக பயன்படுத்துகிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் உடைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் ரூ.100 கோடி வரை கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். பணம் வினியோகம் ஆகப்போகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் எல்லாம் சோதனைகள் ஏன் நடத்தப்படவில்லை.
இந்த சோதனை மூலம் தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெறாது.
இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமாக இருக்கிறது. சோதனையின் உண்மையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளி வரவில்லை. இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது. திமுக கூட்டணி அஞ்சாது.
இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #ITRaid
செவ்வாய்பேட்டை:
தேர்தலில் பணப் புழக்கத்தை தடுக்க பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
செவ்வாய்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்லப் பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. நேற்று மாலை சென்னை திருவள்ளுர் நெடுஞ்சாலையில் சோதனை நடந்தது.
அப்போது கோவையில் இருந்து வந்த ஆவின் பால் முகவரின் பால் வேன் வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பால் வேனில் இருந்தவரிடம் 2 லட்சத்து 28 ஆயிரம் இருந்தது. தான் பால் முகவர் என்றும் அது பால் கொள்முதல் செய்வதற்கான பணம் என்றும் அவர் தெரிவித்தார்.
என்றாலும், தகுந்த ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே அவரிடம் இருந்த ரூ.2.28 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது. #LokSabhaElections2019
பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.
அவர் 8 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்துஎம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
ஆனால் இந்த தடவை அவருக்கு பாரதிய ஜனதாவில் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. சுமித்ரா மகாஜனுக்கு தற்போது 75 வயதாகிறது. வயதை காரணம் காட்டி அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கும் டிக்கெட் வழங்கவில்லை. அந்த வரிசையில் சுமித்ரா மகாஜனையும் சேர்த்து விட்டனர்.

பொதுவாக இந்தூரில் எந்த விழா நடந்தாலும் சுமித்ரா மகாஜன் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அவர் ஊரில் இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மகேந்திர ஹரிதா, ஆகாஷ் விஜய் மற்றும் பல ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
சுமித்ரா மகாஜன் கலந்து கொள்ளாததால் அவர் கட்சியில் அதிருப்தியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.
கட்சியில் டிக்கெட் கொடுக்கப்படாவிட்டாலும் சுமித்ரா மகாஜனுக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட்டன என்று மூத்த தலைவர்கள் கூறினர். #LokSabhaElections2019 #BJP #SumitraMahajan
மனிதஉரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அதைதொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாகவும் கார்த்திக் அறிவித்தார். அதன்படி நாளைமுதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாளை (புதன்கிழமை) தூத்துக்குடியில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பேசுகிறார். நாளை மறு நாளும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
5-ந்தேதி நெல்லை தொகுதியிலும், 6-ந்தேதி தென்காசியிலும், 7-ந்தேதி விருந்துநகரிலும் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி தேனி, 10-ந்தேதி திண்டுக்கல், 11-ந்தேதி மதுரையிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
13-ந்தேதி திருச்சியில் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரிலும், 15-ந்தேதி காஞ்சிபுரத்திலும், 16-ந்தேதி தென் சென்னையிலும் கார்த்திக் பிரசாரம் செய்கிறார். நாளை பிரசாரத்தை தொடங்கும் கார்த்திக் மொத்தம் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். #LokSabhaElections2019 #ADMK #Karthik
திருச்சி:
திருச்சி, கரூர், சிவகங்கை தொகுதி தே.மு.தி.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் நாடு வளர்ச்சி பெறவும், பாதுகாப்புடன் இருக்கவும் தகுதியான பிரதமர் தேவை என்பதை உணர்ந்து தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. எதிர் அணியினர் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.
வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கிவிட்டு, இன்று அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். மக்கள் மீது அக்கறையுள்ள கூட்டணி நமது கூட்டணி. கொள்கை உடைய கூட்டணி. ஆனால் அவர்களின் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி.
மு.க.ஸ்டாலின் வாக்காளர்களை குழப்பி வருகிறார். இந்த மெகா கூட்டணியை பார்த்து அவர் மிரண்டு போயுள்ளார். விரக்தியில் அவர் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசி வருகிறார்.

நான் ஆடு வளர்க்கிறேன், சென்னையில் கோழி வளர்க்கிறேன், அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறேன். காரணம் நான் ஒரு விவசாயி. நான் படிப்படியாக முன்னேறி முதல்வராகி உள்ளேன். அடிமட்ட தொண்டனுக்கும் உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.க.தான். ஆலங்குடியை சேர்ந்த விவசாயி கூட அடுத்த முறை முதல்வர் ஆகலாம்.
தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் எடப்பாடி பழனிசாமி பதவி விலகிவிட்டாரா? என்று என்னை திட்டிக்கொண்டே எழுந்திருப்பார். ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது. அதனால்தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்தை கண்டுபிடிப்போம் என கூறி வருகிறார். யாரால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டார் என மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, துன்பப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி தி.மு.க.வால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இறக்க வைத்துவிட்டனர். தற்போது இது குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதுபற்றி நான் விரிவாக கூற முடியாது.
15 ஆண்டுகளாக மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது. மத்திய அரசிடம் ஏதாவது நிதி பெற்று திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. 15 ஆண்டு காலமாக தங்கள் குடும்பத்தினர் பதவிக்கு வர வேண்டும் என கூட்டணி வைத்திருந்தனர். ஆனால் மக்கள் பணி செய்யதான் அ.தி.மு.க. அரசு உள்ளது.
மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஏழை மக்கள் பயன் பெறுவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கினார்கள். அவர்களிடம் பாடம் கற்ற நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். ஆனால் ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சினையை கூறி பதவி விலக வேண்டும் என்கிறார். அவர் கூறியபடி பார்த்தால் நான் 100 முறை பதவி விலக வேண்டியிருக்கும். பூதக் கண்ணாடியை போட்டு பார்த்தால் கூட, மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியாது.
எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறினார். நீதிமன்றத்தில் ஊழல் செய்யவில்லை என்று நிரூபித்துள்ளோம். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி அது தி.மு.க.தான். இப்போது உதயநிதி ஸ்டாலின் என்னை பற்றி விமர்சித்து வருகிறார். எனது அரசியல் அனுபவம்தான் அவரது வயது. அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு உள்ளது. தி.மு.க.வில் பொறுப்பில் இல்லாத யாராவது ஒருவரால் பேச முடியுமா? ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவரால் பேச முடிகிறது.
இப்போது அவர்கள் வெற்றி பெற்றால் தங்களுக்கு வேண்டிய பதவிகளை பெறத்தான் குறியாக இருப்பார்கள். மக்களை பற்றியோ, தமிழ்நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க 35 ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனை சமாளித்து நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். தி.மு.க. அராஜக ஆட்சி என்பதை இப்போதும் நிரூபித்து வருகின்றனர். எனவே தி.மு.க.வுக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி. மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலை, மாத்தூர் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி உள்ள கட்சிகள். அதனால் வருகிற பாராளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு எதிர்கொண்டு நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. மக்களை குழப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது.
அனைத்து துறைகளிலும் சாதனை படைத்ததன் மூலம் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றிருக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்காக ஆங்கில நாளிதழ் சார்பாக விருது, உணவு தானிய உற்பத்தி அதிகரித்ததற்காக இந்திய அளவில் கிருஷி கர்மான் விருது, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் முதன்மை பெற்றதற்காக சுகாதாரத்துறைக்கு விருது, கல்வித்துறைக்கு விருது, அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ததற்காக விருது, உள்ளாட்சி துறைக்கு விருது போன்ற பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன். இதுபோன்று மக்கள் பணியாற்றிவரும்அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #MKStalin
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் பறக்கும் படையா..? பறிக்கும் படையா?

நம் நாடு எத்தனையோ தேர்தல்களை சந்தித்து உள்ளது. ஆனால் நாம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுதான் உண்மை. தி.மு.க.வுக்கு மாற்று.. அ.தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க... பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க இப்படிதானே இருக்கிறது? இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் “நாம் தமிழர்” என்ற புதிய இயக்கத்தை... புதிய அரசியல் பாதையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இந்த இயக்கம் புரட்சிகர அரசியல் பாதை. அடிமைகளாக இருக்கும் மக்களின் அரசியல் பாதை... நமது அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான வாழ்க்கைபாதை வாருங்கள். இந்த பாதையில் பயணிப்போம்.. இழந்த உரிமையை மீட்டெடுப்போம். நம்மை ஆள இவர்கள் யார்?
ஆட்சியாளர்கள் உங்களுக்கு கொடுக்கும் பணம் உங்கள் வறுமையை போக்கி விடுமா? பொங்கலுக்கு அந்த பக்கம் ரேசனில் ரூ.1000 கொடுக்கிறார்கள். இந்த பக்கம் டாஸ்மாக் கடையில் அதை வாங்கி கொள்கிறார்கள்.
இப்போது அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள். அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா? எங்கள் பாட்டன்.. முப்பாட்டான் எல்லாம் உங்களிடம் இதையா கேட்டார்கள்? தலாய்லாமா தனி நாடு கேட்டால் ஆதரிக்கும் மத்திய அரசு.. பாகிஸ்தானை பிரித்து வங்காள தேசம் உருவாக்கிய இந்திய அரசு பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்திய அரசு நாம் தனி ஈழம் கேட்டால் மட்டும் எதிர்ப்பது என்னங்க நியாயம்? 50 ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்து எதுவும் செய்யாத காங்கிரஸ் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறது? கடந்த 5 ஆண்டாக எதுவும் செய்யாத மோடி மீண்டும் பிரதமரானால் வரும் 5 ஆண்டுகளில் நாடே இருக்காது முடித்து விடுவார்.
நான் உங்களிடம் ஓட்டு கேட்கப் போவதில்லை. எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள்.. இல்லாவிட்டால் போங்கள்.. ஆனால் நாட்டுக்காக பேராட வேண்டியது எனது கடமை. அந்த கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்டின் மீது எனக்கு பேரன்பு உள்ளது.
இவ்வாறு சீமான் பேசினார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எல்லோரும் கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டுவந்தார். அந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர் இந்த வேட்பாளரின் சகோதரர் தங்கம் தென்னரசு. இதே தென்சென்னை தொகுதியில் தான் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க.வின் கோட்டையாக தென்சென்னை விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.

மோடியாக இருந்தாலும் சரி, எடப்பாடியாக இருந்தாலும் சரி இவர்கள் இந்த சாதனைகளை சொல்ல முடியுமா? வேதனை தான் மிஞ்சும். வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றாரே மோடி? வேலை கிடைத்து இருக்கிறதா?. வேலைவாய்ப்பை உருவாக்கும் விஷயத்தில் மோடி அரசு தோல்வியை தழுவியிருக்கிறது.
ராணுவத்தையும் மோடி விட்டுவைக்கவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தை தன்னுடைய தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார். விஞ்ஞானிகளையும் விட்டுவைக்கவில்லை. தான் மட்டுமே அரசு என்று செயல்படுகிறார். இது சர்வாதிகாரம். தினமும் ஓராயிரம் பொய்களை சொல்லுகிறார். அரசியலுக்காக வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை மோடி தவறாக பயன்படுத்துகிறார்.
பொள்ளாச்சி அவமானம் ஒன்று போதாதா? 7 ஆண்டுகளாக அங்கே கொடுமை நடக்கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இதுபற்றி கேட்டால், பிரியாணி கடையில் தி.மு.க.வினர் ரகளை செய்தார்கள் என்று திசைதிருப்புகிறார்கள். சரி, அந்த விஷயத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோமா இல்லையா? ஆனால் நீங்கள் யார் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இல்லையென்றால் உங்கள் ஆட்சி போன பிறகு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என்று கோர்ட்டுக்கு சென்றார்கள். நடந்தது உண்மையா? இல்லையா? என்று கோர்ட்டு கேட்டு இருக்கிறது. நாங்கள் பேசுவோம், இது பனங்காட்டு நரி. எதற்கும் அஞ்சாது. கோடநாட்டில் நடந்தது என்ன? ஜெயலலிதா இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும், தங்களுக்கு எதிரான ஆதாரங்களை எடுக்க கூலிப்படையை அனுப்பிவைத்தார்கள்.
கொலைகள், தற்கொலை எல்லாம் திடீரென்று நடந்தது. இதற்கு யார் காரணம்? இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கூறினேன். இதற்கு தடை கேட்டு தான் கோர்ட்டுக்கு போனார்கள்.
ஆட்சிக்கு விரைவில் வருவோம் அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்த காரணத்தினால் தான் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தரவேண்டும்.
விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக செலுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் இதுவரையில் கிடைத்து இருக்கிறதா? இது மட்டுமல்ல அவரின் திட்டங்கள் அனைத்தும் ‘வரும், ஆனா வராது’ என்ற நிலையில் தான் இருக்கிறது. ஆனால் ராகுல்காந்தி அறிவித்த ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவிட்டு, இரவு 8.15 மணி அளவில் அதிகாரிகள் சென்றனர். அதைத்தொடர்ந்து வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு நிறுத்தலாம் என்பது அவர்களின் கணக்கு. வெற்றி பெறமுடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு. இது முட்டாள் தனமான கணக்கு. கழக பொருளாளர் துரைமுருகனை (சோதனை எனும் பெயரில்) அடித்தால் தி.மு.க.வினர் பயப்படுவார்கள் என்ற தப்புக்கணக்கு போட்டுள்ளனர். இதற்கு பின்புலமாக மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சியினர் இருக்கலாம். இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.
தி.மு.க.வினர் வெற்றியை எவ்வாறு தடுக்கலாம் என்று திட்டமிட்டு இன்று என் வீடு, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு போன்ற பல இடங்களில் இதுபோன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என்ற அரசியல் அறிவு இல்லாதவர்கள் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #DuraiMurugan #ITRaid







