search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sumitra Mahajan"

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் கூடிய ஒரே பாஜக தலைவர் யார்? என்பதை முதன்முறையாக அடையாளம் காட்டியதுடன் அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
    போபால்:

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் அவருக்கு 76 வயது ஆவதால் இந்த முறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆனது.

    இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார்.

    இதையடுத்து, இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷங்கர் லால்வானியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார்.



    அப்போது பாராளுமன்ற சபாநாயகரும் அந்த தொகுதியின் எம்.பி.யுமான சுமித்ரா மகாஜனை அவர் வெகுவாக புகழ்ந்துப் பேசினார். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டு மக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா பிடித்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

    இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிக நன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரேநபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

     பாஜகவில் நானும் அவரும் இணைந்து பலகாலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின்மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்றும் மோடி தெரிவித்தார்.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது. #LokSabhaElections2019 #BJP
    புதுடெல்லி:

    75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.

    புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

    இதனால் மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.


    இதன் காரணமாக முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை.

    அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.

    இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.

    1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு இரு அவைகளின் சபாநாயகர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ளனர். #LokSabha #SumitraMahajan #allpartymeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு அலுவல்களை நிறைவேற்ற முடியாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தது.

    எனினும், வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேறியது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வரும் மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார். 

    இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #LokSabha #SumitraMahajan #allpartymeeting 
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். #Parliament #ADMKMPs #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோ‌ஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.


    அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். வேணுகோபால், செங்குட்டுவன், ராமசந்திரன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.பி. களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

    இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

    இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

    இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

    நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

    இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
    மறைந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #SomnathChatterjee #SumitraMahajan
    கொல்கத்தா:

    பாராளுமன்ற உறுப்பினராக 10 முறை பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி(89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக  பதவி வகித்தார்.

    மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கடந்த 2008-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலக்கி கொண்ட வேளையில் மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

    இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் வசித்து வந்தார். கடந்த இருமாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் - இந்நாள் சபாநாயகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சோம்நாத் சாட்டர்ஜி வாழ்ந்த காலத்தில் தனது உடலை கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் முழு அரசு மரியாதைக்கு பின் மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    அவரது உயிர் பிரிந்த மருத்துவமனையில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அவர் முன்னர் வக்கீலாக பணியாற்றிய கொல்கத்தா உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கிருந்து மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு துப்பாக்கி தோட்டாக்கள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜா பசந்தா ராய் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு ஏராளமான தலைவர்களும், மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கொல்கத்தா வந்தடைந்தார். சோம்நாத் சாட்டர்ஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சுமித்ரா மகாஜன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

    இன்னும் சில நிமிடங்களில் இங்கிருந்து  இறுதி ஊர்வலம்  புறப்படும். கொல்கத்தா அரசு தலைமை மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களின் ஆய்வுக்காக தன்னை தானமாக அளித்த  சோம்நாத் சாட்டர்ஜியின் உடல் அங்கு ஒப்படைக்கப்படும். #SomnathChatterjee #SumitraMahajan
    மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. #LokSabha #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ம் தேதி துவங்கியது. இன்றுடன் இந்த மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தொடரில் 20 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி உட்பட 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நேரமல்லாத நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    தனது இறுதி உரையில் மக்களுக்கும், மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த மக்களவை மழைக்கால கூட்டத்தொடரில் 17 முறை அவை கூட்டப்பட்டதாகவும், 112 மணி நேரங்கள் அவை நடைபெற்றதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabha
    பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    தனது உரையை முடித்த பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி மோடியை கட்டிப் பிடித்தார். பதிலுக்கு மோடியும் சிரித்துக் கொண்டே ராகுல் காந்தியின் கையை பிடித்து குலுக்கி அவருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது அவரை ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது அவையின் மாண்பை குறைக்கும் செயல்.

    அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள் தான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார். #LokSabha #NoConfidenceMotion #PMModi #RahulGandhi #SumitraMahajan
    நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 18-ந் தேதி தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துகிறார். #LokSabhaSpeaker #SumitraMahajan
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். நாளை இந்த கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்துக்கு முன்பாக, பல்வேறு கட்சி தலைவர்களை சபாநாயகர் தனித்தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மக்களவை காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தியை சபாநாயகர் அழைத்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தேன். அப்போது, இந்திய நாடாளுமன்றம் அடிக்கடி முடங்குவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த மக்களவை பதவிக்காலத்தின் கடைசி ஆண்டில் நாம் நுழைந்துள்ளோம். இன்னும் 3 கூட்டத்தொடர்கள்தான் உள்ளன. அவற்றிலும், மழைக்கால கூட்டத்தொடரிலும், குளிர்கால கூட்டத்தொடரிலும்தான் மசோதா தொடர்பான பணிகளை கவனிக்க முடியும்.

    ஆகவே, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும். முதல்முறை எம்.பி. ஆனவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    கட்சி மேலிடத்தின் செல்வாக்குடன், வேட்பாளரின் நற்பெயரும் தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சி மேலிடத்தின் செல்வாக்கால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியாது. எனவே, எம்.பி.க்கள் தங்களது நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்காளர்களின் நம்பிக்கையை அவர்கள் பெற முடியும்.

    எதிர்க்கட்சிகளின் யோசனைகளை பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாதுகாப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு ஆகும்.

    இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.  #LokSabhaSpeaker #SumitraMahajan #Tamilnews
    ×