என் மலர்
தேர்தல் செய்திகள்
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
ஈசூர், புதுர், தச்சூர்வீராணம், குன்னம், குமாரவாடி, முகையூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

வேட்பாளருக்கு மதுராந்தகம் ஒன்றிய கிராமங்களில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியசெயலாளர் அப்பாதுரை, பா.ம.க. பொன்.கங்காதரன், கோபாலகண்ணன், தேமுதிக ராஜேந்திரன், பா.ஜ.க செந்தழிழ்அரசு, பாலாஜி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #LokSabhaElections2019
ராயபுரம்:
வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே உள்ள கணேசபுரத்தில் (45-வது மேற்கு வட்டம்) பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி வீதி, வீதியாக, வீடு, வீடாக, நடந்து சென்று தீவிர வாக்கு சேகரித்தார். முன்னதாக கணநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் பிரார்த்தனை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து சுந்தரம் மெயின் ரோடு, சுந்தரம் பவர் லைன், பாலகிருஷ்ணா தெரு, ரத்தினம் தெரு, தேசிகானந்தம் புரம் 1,2, தெரு, சுந்தரம் லைன் 3,4,5,6, தெரு, மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் ஓ.பி.லைன், எம்.எம்.கார்டன், ஸ்டீபன் சாலை, அவ்வை நகர், சாந்தி நகர் பி-டி குவாட்டர்ஸ், பி.பி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரித்தார். அவருடன் மா.ஜெயபிரகாசம், ஜெ.கே.ரமேஷ், வட்ட செயலாளர் வி.கோபிநாத், டி.ஒய்.கே.செந்தில்குமார், எஸ்.சீனிவாசன், இ.வேலு மேஸ்திரி, வி.எஸ்.சாமுண்டீஸ்வரி, எல்.நடராஜன், மற்றும் மகளிரணியினர் தோழமை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
ராஜஸ்தான் மாநில கவர்னராக கல்யாண்சிங் இருக்கிறார்.
இவர் உத்தரபிரதேச மாநில முன்னாள் பா.ஜனதா முதல்-மந்திரி ஆவார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கல்யாண்சிங் பேசியுள்ளார்.
சமீபத்தில் அவர் பேட்டி அளிக்கும்போது, “ஒவ்வொருவரும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரையே தேர்வு செய்ய வேண்டும். அவர்தான் நாட்டுக்கு தேவையானவர்” என்று கூறி இருந்தார்.
கவர்னர் பதவியில் இருக்கும் ஒருவர் தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு உயர்பதவி வகிக்கும் கவர்னர் இவ்வாறு பேசுவது தேர்தல் விதிமுறை மீறலாகும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் மீது ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் புகார் கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல் விதிமுறை மீறும் 2-வது கவர்னர் கல்யாண்சிங் ஆவார். இதற்கு முன்பு 1993-ம் ஆண்டு இமாச்சலபிரதேச கவர்னர் குல்சர்அகமது தேர்தல் விதிமுறைகளை மீறி இருந்தார். அவர் தனது மகள் சயீத் அகமதுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்த விதிமீறலை தொடர்ந்து குல்சர் அகமது தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Loksabhaelections2019 #PMModi #KalyanSingh #EC
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
அமேதி தொகுதி மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் வாக்காளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள பயந்தும், இங்கு மறுமுறை வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதாலும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி ஓட்டம்பிடித்து விட்டதாக பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்பது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:-

மோடியின் ஆட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதாக தென்னிந்தியா உணர்கின்றது. ‘உங்களுடன் நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை விதைப்பதற்காகவே இந்த முறை நான் வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #Wayanad
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேலூரில் கட்டுக் கட்டாக பணம் பிடிபட்டது. இன்றும் சோதனை தொடர்ந்து நடக்கிறது. சோதனையின் முடிவில்தான் எவ்வளவு பணம் என்பது தெரியவரும். வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கு இன்னும் அறிக்கை தரவில்லை.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தேர்தல் கமிஷனுக்கு செலவின பார்வையாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள், பொது பார்வையாளர்கள் தனித் தனியாக அறிக்கை அனுப்புவார்கள். இதுபோல் நாங்களும் அறிக்கை அனுப்புவோம். இதை வைத்து தலைமை தேர்தல் கமிஷன் ஒரு முடிவுக்கு வரும்.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.80.35 கோடி பிடிபட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.2.23 கோடி பிடிபட்டிருக்கிறது.

வேலூரில் பிடிபட்டது பற்றி முழு விவரம் வராததால் அந்த தொகை சேர்க்கப்படவில்லை.
மத்திய தேர்தல் கமி ஷனர்கள் சுனில் அரோரா, அசோக், சுசில்சந்திரா ஆகியோர் இன்று இரவு சென்னை வருகிறார்கள். கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித் தனியாக சந்தித்து பேசுகிறார்கள்.
ஒவ்வொரு கட்சி பிரதிநிதிக்கும் 9 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பகல் 11.30 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், கம்யூனிஸ்டுகளுடன் ஆலோசனை நடக்கிறது.
4-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. பகல் 11.30 மணியளவில் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்திக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #Incometax
பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஒரே வரி விகிதத்தில் ஜிஎஸ்டி கொண்டு வரப்படும். 2 ஆண்டுக்குள் பெட்ரோல்-டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும். மதுபானம், புகையிலை மற்றும் ரியல் எஸ்டேட் துறையும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும். மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Rahul #CongressManifesto
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்து, மத்தியிலே பாஜக ஆட்சியில் தான், ஒடிசாவில் 24 லட்சம் வீடுகளில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 3000 கிராமப்பகுதிகளில் முதன் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது. இவை யாவும் மோடியினால் தனியாக நடைபெற்றிடவில்லை. இந்தியாவில் வாக்காளர்கள் அனைவரும் இணைந்து செய்ய வைத்தார்கள்.
காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் இந்தியாவை ஏழ்மையிலே வைக்க சதி தீட்டி, அதன்படியே ஆட்சியும் நடத்தி வந்தனர். மக்களை ஓட்டு வங்கிகளாகவே கருதினார்கள். தனா மஞ்சி போன்று இன்னும் எத்தனை பேர் அவசர வாகனமின்றி தவித்தார்களோ தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தமுறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். #LokSabhaElections2019 #Rahul #CongressManifesto #NEET

இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் துயரம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை இந்தத் தேர்தல்களில் முதலிடம் வகிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மன்மோகன் சிங் கூறினார். வறுமையை குறைக்கும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக அவர் கூறினார். #LokSabhaElections2019 #CongressManifesto #RahulGandhi
சாத்தூர்:
சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அவர் முதல்- அமைச்சர் பதவி ஆசையில் வெறிபிடித்து அலைகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி களத்திலேயே கிடையாது. ஜெயிக்க முடியாத கட்சி என்ன வேண்டுமானாலும் கூறலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று குறிப்பிடலாம். நாங்கள் எப்போதும் எங்களது சாதனையை கூறியே ஓட்டு கேட்போம்.
தி.மு.க. இந்த தேர்தலில் அ.தி.மு.க.விடம் தோற்கும். அ.தி.மு.க. சினம் கொண்ட சிங்கம். தி.மு.க. மதம் கொண்ட யானை. சினம் கொண்ட சிங்கத்திடம் மதம் கொண்ட யானை தோற்று ஓடும்.
கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சரை குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இப்போது அவரது கட்சியினர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டபோது ஏன் வாய் திறக்கவில்லை. கொள்ளையடித்த பணம் இருந்தால் வருமான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள்.
சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளார். அவரது வீட்டிற்கு எப்போது வருமான வரித்துறையினர் சோதனை வரும் என்று தெரியவில்லை.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு நகைச்சுவையாளர், நகைச்சுவையாக தான் பேசுவார். அவருக்கெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் அவர்களை யாரும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #AMMK #KTRajendraBalaji
பாராளுமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 72 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருவட்டார் வட்ட வழங்கள் அதிகாரி வேணுகோபால் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த பேக் ஒன்றில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதையடுத்து பேக்கில் இருந்த தங்க வளையல், செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 37 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகையை திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த நகைகள் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.86 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று காலையில் நாகர்கோவிலில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை மற்றும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை நடந்த சோதனையில் 1 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரத்து 911 ரொக்கப்பணமும், 327 கிராம் தங்கமும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 11 மிக்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019
வேலூர்:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.
துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வேலூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் பணப் பரிமாற்றம் செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார்கள் வந்தன. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடப்பதாக தெரிய வந்ததால் அது பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும்.
அதன் அடிப்படையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சில ஆவணங்களையும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
காட்பாடி அருகே கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் திடீரென மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது தி.மு.க. விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், பெரிய துணிப் பைகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பணக்கட்டிலும் ஊரின் பெயர், வார்டு நம்பர் எழுதப்பட்டு இருந்தது.
துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீட்டில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் அந்த பணக்கட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அந்த பண கட்டுகள் எண்ணப்பட்டன.
இன்று அதிகாலை பணம் எண்ணும் பணி முடிந்தது. அப்போது ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் புத்தம் புது நோட்டுகளாக இருந்தன.
வருமான வரித்துறை வசம் உள்ள அந்த ரூ.11.48 கோடியாருக்கு சொந்தமானது என்பதை இதுவரை உறுதி செய்ய இயலவில்லை. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினார்க்ள. ஆனால், “பிடிபட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

ஆனால் துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து அந்த பணம் சிமெண்ட் குடோனுக்கு கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். என்றாலும் அந்த பணத்துக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தீவிரமாகியுள்ளது. முதல் கட்டமாக பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி விஜயா இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களிடம் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்று விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்படும். தேவைப்பட்டால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு இடத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்றால் எந்த ஒரு சிறு தகவலையும் வெளிப்படுத்த மாட்டார்கள். என்ன ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை கூட யாரிடமும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நேற்று தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் நடந்த சோதனை விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவின.
குறிப்பாக சிமெண்ட் குடோனில் சாக்குமூட்டைகள், அட்டை பெட்டிகளில் இருந்த கட்டு கட்டான பணம் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் பரவின. அந்த பணம் பற்றிய தகவலை பெற வேண்டும் என்பதற்காகவே வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அந்த காட்சிகளை கசிய விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ரூ.11.48 கோடியில் 80 சதவீத நோட்டுகள் புத்தம் புதியதானவை. எனவே அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்களை வைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி எந்த கால கட்டத்தில் அச்சடிக்கப்பட்டன? அவை எந்த நகர வங்கிகளுக்கு அனுப்பப்பட்டன? என்று விசாரணை நடக்கிறது.
ரூபாய் நோட்டு எண்கள் மூலம் எந்த வங்கியில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தெந்த வங்கி கணக்குகளில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்றார்.
மேலும் பணம் எடுக்கப்பட்ட வங்கி விவரம் தெரிந்த பிறகு அந்த வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த பணக்கட்டுகளை வாங்கி சென்ற நபர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
துரைமுருகனின் ஆதரவாளர்கள் அனைவரிடமும் 2 நாட்களுக்குள் இந்த விசாரணையை முடித்து விட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி குறித்து வருமான வரித்துறை சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும்.
அந்த அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அதன்பேரில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதன் பிறகே வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? அல்லது திட்டமிட்டப்படி நடக்குமா? என்பது தெரிய வரும். #ITRaid #DMK






