என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDinakaran
    திருப்பூர்:

    அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூர் பெருமா நல்லூர் நால் ரோடு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 18 தொகுதிகளிலே 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், இந்த துரோகிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழகத்தை வஞ்சிக்கின்ற மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரு கூட்டணியாகவும், மற்றொருபுறம் ஏற்கனவே தமிழ்நாட்டை வஞ்சித்த காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் மதசார்பற்ற கூட்டணி என்கிற பெயரிலே ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றனர்.

    தமிழகத்தில் நடக்கின்ற ஆட்சி மக்களுக்கான ஆட்சியா? அல்லது ஒப்பந்தம் எடுப்பவர்களுக்கான ஆட்சியா? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இது மக்களுக்கான ஆட்சி என்றால் மக்களை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் இங்கே செயல்படுத்த விட்டிருக்கமாட்டார்கள்.

    தொழில்கள் பாதிக்கும் என்பதால்தான் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், இன்றைக்கு தமிழகத்திலே பின்னலாடை தொழில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்க தான் செய்துள்ளனர். பின்னலாடை தொழிலும், தொழிலாளர்களும் மோடியின் ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழிலை பாதிக்கும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்காக திருப்பூர் குமரன் பெயரில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும். தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

    தற்போதைய அரசு தொழில் வளர்ச்சியை பெருக்கிவிட்டதாக பொய்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டி.யில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி விதிப்புகளை மாற்றி, மீண்டும் பழைய அளவிலே வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளைய பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மத்திய அரசுக்கு அடகு வைத்துவிட்டனர்.



    இதனால் இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்க வேண்டும். கேரளாவிலே ராகுல் காந்தி போட்டியிடுகின்ற வயநாடு தொகுதியிலே கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி, எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலே காங்கிரஸ் கட்சியுடன், கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இது முரண்பாடாக உள்ளது.

    ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தை முன்வைத்தே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். மக்களையோ, தொண்டர்களையோ அவர்கள் நம்பவில்லை. பா.ஜனதாவின் கைப்பாவையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. மோடியுடன் நாங்கள் சமரசம் செய்திருந்தால், இப்போது யார் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் சமம் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபோல கணக்கம்பாளையம், பாண்டியன்நகர், எம்.எஸ்.நகர், சி.டி.சி.டெப்போ, வெள்ளியங்காடு நால்ரோடு, கே.வி.ஆர்.நகர், சிறுபூலுவபட்டி, 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் திறந்தவேனில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார். #TTVDinakaran
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இன்று வாகன சோதனையின் போது உரிய ஆவணமில்லாததால் ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே தேர்தல் அதிகாரி மனோகரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து கார் ஒன்று வந்தது. அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர் கேரளாவை சேர்ந்த மகபூப் ஆஷா என்பதும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 5ஆயிரத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் மகபூப் ஆஷாவிடம் தெரிவித்தனர்.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #Seeman
    திருப்பூர்:

    திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழர்கள் உரிமையை இழந்து அடிமையாக வாழவைப்பதற்காகவே இங்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏழை விவசாயிகளின் சின்னம் இரட்டை இலை என்றும், உதயசூரியன் என்றும் திராவிட கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறது. விவசாயியை ஏழையாக மாற்றிய கட்சிகள் இவை. அந்த விவசாயியை சின்னமாக கொண்டு நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. 50 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இதுவரை செய்த சாதனையை சொல்ல முடியுமா?

    5 ஆண்டுகளாக ஆட்சியை நிறைவு செய்த மோடி தமிழர்களுக்கு செய்த சாதனையை சொல்ல முடியுமா?. இங்குள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நீட் தேர்வை ரத்து செய்வோம், கச்சத்தீவை மீட்போம் என்று உறுதி அளிக்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தியோ, மோடியோ அவர்கள் வாயால் இதை சொல்வார்களா?. சொல்ல மாட்டார்கள். இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாட்டை கூறுபோட்டு விற்பனை செய்யும் வேலையை செய்து வருகிறார்கள்.

    தமிழர்களின் உரிமையை பறிக்கும் வேலையைத்தான் காங்கிரசும், பா.ஜனதாவும் செய்து வருகிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு, வாழ்வுக்கு இவர்கள் எதுவும் செய்தார்களா?. இதை மானமுள்ள தமிழ் மக்கள் நினைத்து பார்த்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தமிழர் இனத்துக்காக வாழ்ந்த பிரபாகரனை நாங்கள் சுமந்து நிற்கிறோம். புலிக்கொடியை நாம் தமிழர் கட்சியின் கொடியாக கொண்டுள்ளோம். சோழ மன்னன் கடல் கடந்து ஆண்டான் என்பதை நினைவு கூறும் வகையில் புலியை கொடியாக கொண்டிருக்கிறோம்.

    நாம் தமிழர் கட்சி என்பது மாற்று அரசியல் புரட்சி. மாற்றம் என்பதே மானுட தத்துவம். மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நாங்கள் செய்கிறோம். இந்த சமூகம் குற்றம் நிறைந்ததாக மாறி வருகிறது. கல்வி முறையில் மாற்றம் அவசியம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒரேநாள் இரவில் கொண்டு வந்ததை நாம் மறந்து விடக்கூடாது. மறதி என்பது தேசத்தின் நோய். அதனால் தான் பழையவற்றை நினைவுபடுத்தும் வேலையை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.

    திருடர்கள் திருட வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி திருட விடாமல் செய்பவனே காவலாளி. ஆனால் திருடிய பின்பு துரத்திச்சென்று தாக்குவது காவலாளி அல்ல. மோடி தன்னை காவலாளி என்று கூறுகிறார். ஆனால் புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு துரத்தி தாக்குவதா? காவலாளியின் வேலை. கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து, மின்உற்பத்தி அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்கள். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் முதலாளிகளுக்கு விற்று விட்டால் மக்கள் எப்படி சிறப்பாக வாழ முடியும். இங்குள்ள பொருளாதார கொள்கையே தவறு. வெளிநாட்டு முதலாளிகள் தங்கள் சரக்குகளை விற்பனை செய்யும் வகையில் இந்திய நாட்டை வர்த்தக சந்தையாக மாற்றிவிட்டார்கள். காங்கிரசும், பா.ஜனதாவும் இதைத்தான் செய்து வருகிறது. பொதுவுடைமை கருத்துகளை சொன்ன கம்யூனிஸ்டுகள் ஒரு மாநிலத்தில் ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறது. மற்றொரு மாநிலத்தில் ராகுல் காந்தியை எதிர்த்து மாற்று கட்சியாக நிற்கிறார்கள். உலகம் முழுவதும் ஒரே கொள்கையை கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. நீர்மேலாண்மை பற்றி எந்த கட்சியும் திட்டம் வகுத்தது உண்டா?.

    130 கோடி மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க இவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள். விரைவில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நாம் தமிழர் கட்சி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் வகுத்துள்ளது. விவசாயத்தை அரசு வேலையாக்கும்.

    18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. 37 அ.தி.மு.க. எம்.பி.க்கள் மத்தியில் அங்கம்வகித்தார்கள். தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுக்காதவர்களா, இனியும் குரல் கொடுக்கப்போகிறார்கள். விவசாயத்தை மறந்த நாடுகள் உணவுத்தேவைக்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகிறது. அதுபோன்ற நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம். ஓட்டுக்காக நாங்கள் வரவில்லை. இந்த நாட்டை காக்கவே உங்களிடம் வந்து ஓட்டு கேட்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Seeman
    மெலட்டூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    மெலட்டூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுவதையொட்டி மெலட்டூரை அடுத்த நரியனூரில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அறந்தாங்கியில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த ஒரு வாகனத்தை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாகனத்தில் வந்தவர்கள் உரிய ஆவனம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 160 வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பாபநாசம் உதவி தேர்தல் அலுவலர் இளங்கோ, தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் செந்தில் ஆகியேர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானதாக அமைந்து விடும் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:
     
    காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மீனவர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ரத்து, காலியாக உள்ள 22 லட்சம் அரசு பணியிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் நியமனம், 100 நாள் வேலையுறுதி திட்டம் 150 நாட்களாக உயர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



    இதற்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

    பிரிவினைவாத சட்டத்தை ஒழிப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சியின் தலைமை மாவோயிஸ்ட்டுகள் மற்றும் ஜிஹாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முன்னர் ஜவஹர்லால் நேரு கடைபிடித்த வரலாற்று பிழையை கடைபிடிக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.

    தேர்தல் அறிக்கையில் ஆபத்தான வாக்குறுதிகளை அளித்துள்ள காங்கிரஸ் கட்சி அவற்றில் ஒன்றையும் நிறைவேற்றப் போவதில்லை. நிறைவேற்றினால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்து விடும் என அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #Congresspromises #dangerouspromises #ArunJaitley
    தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி என்றும் ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களின் வாழ்வு சிதைந்து விட்டதாகவும் திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ கூறியுள்ளார். #Vaiko
    திருச்சி:

    தி.மு.க. கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசியதாவது:-

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். இது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும். கொடூர சிந்தனையாளர்களால் மட்டுமே இது போன்று சிந்தித்து செயல்பட முடியும். நாட்டில் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று கூறுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

    டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட ரகசிய அனுமதி இப்படி பல துரோகங்களை மோடி தமிழகத்திற்கு செய்துள்ளார். கஜா புயலில் சிக்கி 83 பேர் இறந்தபோது இரங்கல் செய்தி கூட தெரிவிக்காத மோடி தமிழர்களிடம் வந்து எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டு கேட்கிறார்.

    தமிழகத்தில் கல்வி, பருப்பு, பஸ் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஊழல் தலை விரித்தாடுகிறது. பல பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆட்சியாளர்கள் லஞ்சம் கேட்டதால், வெளி மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களின் வாழ்வு சிதைந்து விட்டது.

    கல்வி மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாத மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறார். இது குறித்து கேட்டால் நான் காவலன் என்கிறார். மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தநிலை தொடர்ந்தால் இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்து போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அழித்து விட்டு விவசாய நிலங்களை அபகரித்து அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து, அந்த நிலத்தில் பல்லாயிரம் அடி ஆழத்தில் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் எடுத்து விவசாய நிலங்களை பொட்டல் காடுகளாக்குவதுதான் மோடியின் திட்டம்.

    இதன் மூலம் மோடி அரசுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல லட்சம் கோடி லாபம் கிடைக்கும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியில் இருந்து தனது கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்தவர் பாரிவேந்தர். விவசாயிகளையும், வியாபாரிகளையும் வாழ வைக்கக் கூடியது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார். #Vaiko
    பாராளுமன்ற தேர்தலையொட்டி பண்ருட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய ஆவணம் இல்லாததால் வியாபாரியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் அருள் கணேஷ் தலைமையில் பண்டரக்கோட்டையில் அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனை செய்தார்.

    அப்போது கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிழக்கு தெருவை சேர்ந்த ‌ஷபியுல்லா என்பவர் மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் ரூ.1 லட்சத்து 25ஆயிரம் இருந்தது அந்தபணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லை. எனவே அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.

    அதேபோல் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழு தலைவர் சீனுவாசன் தலைமையில் ஆநத்தம் பகுதியில் மாலை 5 மணியளவில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த பண்ருட்டி வியாபாரி ராஜா என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவரிடம் எந்தவித ஆவணமின்றி இருந்த 2 லட்சத்து 93ஆயிரத்து 530 ரூபாயை குழுவினர் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் கீதா, துணை தாசில்தார் தனபதியிடம் ஒப்படைத்தனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 215 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளுடன் திருப்போரூர் சட்ட பேரவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி கடந்த தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெற்ற வாக்கு சாவடிகள் குற்றவழக்குகள் பதிவான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டன.

    இதில் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் வருகின்றது. அங்கு 16 வாக்குசாவடிகள் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 24 வாக்குசாவடிகளும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 175 வாக்கு சாவடிகளும் பதட்டமானதாக தெரியவந்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4122 வாக்கு சாவடிகளில் 215 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

    அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019
    வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மதங்களின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் குறிப்பிட்டுள்ளார். #IUMLleader #PMModi #RahuGandhi
    திருவனந்தபுரம்:

    உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    ராகுலின் இந்த முடிவுக்கு கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வயநாட்டில்  ராகுல் காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யாராக இருக்கும்? என்ற ஆவல் அந்த தொகுதிவாழ் மக்களிடையே எழுந்துள்ளது.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

    'வயநாடு தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியின் பெயரை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன். மிக ஆற்றல் வாய்ந்த வீரியமான இளம்தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி நம்முடைய சமூகநீதி மற்றும் வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவருடன் இணைந்து கேரள அரசியலில் மாற்றுசக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

    கேரள மாநில அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆகிய இரு அணிகளின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி இருக்கும் நிலையில் இம்மாநிலத்தில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 'எழவா’ உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்த சில தலைவர்களால் பாரத் தர்ம ஜன சேனா கட்சி உருவாக்கப்பட்டது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கேரளாவில் உள்ள இந்து மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் தலைவரான துஷார் வேளப்பள்ளியை, ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது, அங்குள்ள பாஜகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இந்த தொகுதியில் பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டி வரும் வயநாட்டில், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் மோடி இறங்கியுள்ளதாக முஸ்லீம் லீக் கட்சி தலைவர் சையிது முனவ்வர் அலி ஷிஹாப் தாங்கல் தெரிவித்துள்ளார்.  

    நேற்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்த நாட்டில் பெரும்பான்மை மதமாக இருக்கும் மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் போட்டியிடாமல்,  சிறுபான்மையினத்தவர்கள் அதிகமாக வாழும் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி பயந்து ஓட்டம் பிடிக்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதை சுட்டிக்காட்டி இன்று கருத்து தெரிவித்த  சையிது முனவ்வர் அலி ஷிஹாப் தாங்கல் , பிரதமரின் இது போன்ற முதிர்ச்சியற்ற பேச்சு வருத்தமளிக்கிறது. தேர்தலுக்கு முன்னர் மதங்களின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த மோடி முயற்சி செய்கிறார். நாங்கள் அனைவருமே இந்தியர்கள் தான்.



    மலைவாழ் மக்கள் , பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த மலைப்பிரதேசத்தில் போட்டியிட முன்வந்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நான் பாராட்டுகிறேன். இந்த தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். #IUMLleader #PMModi#RahuGandhi
    கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற உள்ளது. #LokSabhaElections2019 #Mandya
    மாண்டியா:

    பாராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள், பெரும்பாலான மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மாண்டியா உள்ளிட்ட 7 தொகுதிகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    இதில் மாண்டியா தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து நடிகர் அம்பரீசின் மனைவி நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. இதனால் பாஜக தனியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. கர்நாடகாவில் வாக்கு வங்கி இல்லாத பகுஜன் சமாஜ் கட்சியும் அந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இதன்மூலம், இரண்டு பிரதான தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு போட்டியிடவில்லை.



    மாண்டியாவில் இரண்டு பிரதான தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் இல்லாமல் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 65 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் மாண்டியா தொகுதியானது 20 தேர்தல்களையும், 4 இடைத்தேர்தல்களையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்து. #LokSabhaElections2019 #Mandya
    இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று உ.பி. முதல்வர் அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது. #LoksabhaElections2019 #PMModi #yogiadityanath
    காசியாபாத்:

    உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் தொகுதியில் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.

    காசியாபாத் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் 23 நிமிடம் உரை நிகழ்த்தினார்.

    அவர் பேசும் போது, “புல்வாமா தாக்குதலில் நமது இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது.

    இதுவரை இது போன்ற தாக்குதலை இந்தியா நடத்தியது இல்லை. இந்திய படை என்பது பிரதமர் மோடியின் சேனையாகும். அவர்கள் எதிரிகளுக்கு அதிரடி கொடுத்து இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் பயங்கரவாதிக்கு பதிலடி கொடுத்தார்கள். ஆனால் மோடி அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகளை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

    அவர் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து காசியாபாத் மாவட்ட கலெக்டர் இது சம்பந்தமான பத்திரிகை, செய்தி சானல், வீடியோ ஆதாரங்களையும் சேகரித்து அறிக்கை தர வேண்டும் என்று மத்திய தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர் அறிக்கை வந்ததும் அதை மாநில தேர்தல் அதிகாரி மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி விட்டார். இதில் தேர்தல் விதி மீறல்கள் இருக்கிறதா? என்பதை தேர்தல் கமி‌ஷன் ஆராய்ந்து முடிவு செய்யும்.

    இதற்கிடையே யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சுக்கு இந்திய ராணுவ படை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, “நமது ராணுவம் சுதந்திர காலத்தில் இருந்தே அரசியல் மத சார்புக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. இதனை அரசியலுக்கு பயன்படுத்துவது சரியானது அல்ல” என்று கூறினார்கள்.

    கார்கில் போரின் போது தளபதியாக இருந்த வி.பி.மாலிக் கூறும்போது, “கார்கில் போரை கூட தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த பார்த்தார்கள். அப்போது இதை பிரதமர் வாஜ்பாய் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் அது போன்ற பிரசாரத்தை தடுத்தார்” என்றார். #LoksabhaElections2019 #PMModi #yogiadityanath
    ஆதம்பாக்கத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. #Voterid #LokSabhaElections2019

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், பொருட்கள், தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம், சுரேந்தர் நகர் மேடவாக்கம் மெயின் ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 270 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த 7 பேரை அதிகாரிகள் பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை அனைத்தும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடையது என்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தமாக வாக்காளர் அட்டை கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Voterid #LokSabhaElections2019

    ×