என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வேட்பு மனுதாக்கல் செய்கிறார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad #PriyankaGandhi

    வயநாடு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி. ஆன அவர் அங்கு 4-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.

    இந்த நிலையில் ராகுல் தென் இந்தியாவிலும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூற முதலில் ராகுல் அதை ஏற்க தயங்கினார். ஆனால் தென்இந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அது காங்கிரசுக்கு எழுச்சியாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ராகுல் ஏற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார் என்று கடந்த 31-ந்தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 3-வது கட்டமான ஏப்ரல் 23-ந்தேதி அன்று வயநாடு தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அமேதி தொகுதியில் 5-வது கட்டமான மே மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் வருகிற 10-ந்தேதி தான் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்பிறகு ஒரு வாரம் அவகாசம் இருப்பதால் அங்கு ஏப்ரல் 3-வது வாரம் ராகுல் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வயநாடு தொகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி மனு தாக்கல் தொடங்கி விட்டது. மனுதாக்கலுக்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். எனவே நாளை வயநாடு தொகுதியில் ராகுல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.


    ராகுல்காந்தி இன்று அசாம் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்றுள்ளார். இன்று (புதன்கிழமை) இரவு அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்து சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான பிரியங்காவும் வருகிறார்.

    ராகுல்-பிரியங்கா இருவரும் கரிப்பூரில் உள்ள கோழிக் கோடு விமான நிலையத்துக்கு எத்தனை மணிக்கு வந்து இறங்குவார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவர்களது வருகை மற்றும் சுற்றுப் பயண விவரங்கள் அனைத்தும் கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கூட தெரியாத வகையில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

    ராகுல் - பிரியங்கா இருவரும் இன்று இரவு எங்கு தங்குவார்கள் என்பதும் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதுபோல மலப்புரம் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    எனவே கோழிக்கோடு- மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் ராகுல்-பிரியங்கா தங்குவார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்காக 3 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவர்கள் கோழிக்கோட்டில் தங்க அதிக வாய்ப்பு உள்ளது.

    வயநாடு பாராளுமன்ற தொகுதியில் 7 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. 80 சதவீதம் மலைப்பகுதியை கொண்ட வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கு மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜலீல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    கடந்த 2016-ம் ஆண்டும் நிலம்பூர் வனப்பகுதியில் தேவராஜன், காவேரி என்ற 2 மாவோயிஸ்டு தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எனவே மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ராகுல்-பிரியங்கா இருவருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அவர்களது பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஐ.ஜி. குர்மத் டூர்ஜா தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் வயநாடு வந்துள்ளனர். அவர்கள் கேரள மாநில போலீசார், பொதுப் பணித்துறையினர், தீயணைப்பு படையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு ராகுலும், பிரியங்காவும் காரில் செல்ல வேண்டாம் என்று உளவுத்துறை கேட்டுக் கொண்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் இருந்து வயநாடுக்கு ஹெலிகாப்டரில் வர உள்ளனர். வயநாட்டில் உள்ள எஸ்.கே.எம்.ஜே. உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் ராகுலின் ஹெலிகாப்டர் இறங்க புதிய ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு ராகுலும், பிரியங்காவும் காரில் செல்ல உள்ளனர். இந்த வழிநெடுக சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர ராகுல்-பிரியங்கா பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து தனி பாதுகாப்பு படையும் வர வழைக்கப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்களும் வயநாடு பகுதியில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் நகர்வை கண்காணித்தப்படி உள்ளனர். வனப் பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த 2 நாட்களாக தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வயநாடு மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ராகுல்-பிரியங்கா இருவரும் இன்று இரவு கோழிக்கோடு வந்த பிறகு அவர்கள் செல்லும் இடங்கள் பற்றி இன்று காலை முதல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல்வாஸ்னிக், வேணுகோபால் இருவரும் ஆய்வு செய்தனர். அவர்கள் இருவருக்கும் தான் ராகுல்-பிரியங்காவின் சுற்றுப்பயணம் முழு விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராகுலின் இன்றைய பயணத்தில் தாமதம் ஏற்பட்டால் நாளை அதிகாலையிலேயே அவர் கோழிக்கோடு வந்துவிடுவார் என்று கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி தெரிவித்தார்.

    வயநாடு பள்ளிக்கூட மைதானத்தில் தரை இறங்கிய பிறகு ராகுல் நேரடியாக வயநாடு கலெக்டர் அலுவலகத்துக்கு செல்கிறார். நாளை பகல் 11.15 மணி அளவில் தனது வேட்புமனுவை வயநாடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அஜய்குமாரிடம் தாக்கல் செய்வார்.

    ராகுல் மனுதாக்கல் செய்யும்போது பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, உம்மன் சாண்டி, முகுல்வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் இருப்பார்கள். உடல்நலக்குறைவு காரணமாக சோனியா வரமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதுமே கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ராகுலை ஆதரித்து நேற்று முன்தினம் மிகப்பிரமாண்டமான பேரணியும் நடத்தினார்கள்.

    அவர்களை மேலும் உற்சாகப்படுத்த வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு நாளை காலை கல்பேட்டா நகரில் மிகப்பெரிய ரோடு ஷோ நடத்த ராகுல் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கேரள மாநில போலீசாரின் எச்சரிக்கை தொடர்ந்து ராகுல் தனது ரோடுஷோ பேரணியை ரத்து செய்து விட்டார்.

    11.15 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்து முடித்த பிறகு அங்குள்ள ஒரு இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்த உள்ளார். அதில் வயநாடு தொகுதியில் எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்வது என்பது பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மதியம் 1 மணி அளவில் வயநாடு தொகுதிக்குட்பட்ட ஏதாவது ஒரு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ராகுல் முடிவு செய்துள்ளார். பிரியங்காவும் அந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முடித்த பிறகு ராகுல்-பிரியங்கா இருவரும் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளனர். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad #PriyankaGandhi

    மோடிக்கு குடும்பம் என்றால் என்ன என்று தெரியாது என சித்தூர் மாவட்டம் புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசினார். #LoksabhaElections #ChandrababuNaidu #PMModi
    நகரி:

    ஆந்திராவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தபோது முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு சந்திரபாபு நாயுடு தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு மாநில திட்டம் போல் காட்டுகிறார்.

    இதனால் அவர் ஸ்டிக்கர் பாபு ஆகிவிட்டார். சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முன்னேற்றத்தை மறந்து விட்டு தனது மகனை முன்னேற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

    மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் புத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-



    நரேந்திரமோடிக்கு அன்பு, பாசம், உறவுகள், நட்பு குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு மனைவி, குழந்தைகள் என்னும் பந்தங்கள் இருந்தால்தானே இதெல்லாம் தெரியும். குடும்பம் என்றால் என்ன என்று தெரியாத அவர் என் குடும்பத்தை பற்றி பேசுகிறார்.

    ஆந்திராவுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது மட்டுமின்றி விமர்சனம் செய்ய அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. மோடி, சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டிக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் போடுவது போல தான் என ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடு பேசிவருவது குறிப்பிடத்தக்கது. #LoksabhaElections #ChandrababuNaidu #PMModi
    மதுரையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 47 கிலோ தங்க நகைகள் சிக்கியது. #LokSabhaElections2019

    மதுரை:

    தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற வாகன சோதனையில் தங்க நகைகள், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.


    வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தன. அவற்றின் எடை 47 கிலோ. மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

    வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை.

    எனவே 47 கிலோ தங்க நகைகள், வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வேன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    விஜயகாந்தை சீண்டினால் உங்களுக்கு தான் பிரச்சனை வரும் என்று திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயபிரபாகரன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    திருச்சி:

    திருச்சியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து எடத்தெரு அண்ணாசிலை அருகே விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-

    விஜயகாந்தை பற்றி உங்களுக்கு தெரியும். அவர் கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். விஜயகாந்தை சீண்டி பார்க்காதீர்கள். அவரை சீண்டினால் உங்களுக்கு தான் பிரச்சனை வரும்.

    இப்போது துரைமுருகன் வீட்டில் மூட்டைகளில் கத்தை, கத்தையாக பணம் எடுத்து இருக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த எத்தனை பேர் உங்கள் நிலத்தை அபகரித்து இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதமுள்ள 2 ஆண்டுகளும் தொடர வேண்டும்.

    மத்தியில் மோடி ஆட்சிக்கு வர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு நிலையான ஆட்சி அமைந்தால் தான் மக்களுக்கு நல்லது. கடந்த முறை தமிழ்நாட்டில் மோடி அலை வீசவில்லை. ஆனால் இந்த முறை தமிழகத்தில் நிச்சயம் மோடி அலை வீசும்.

    அகில இந்திய அளவில் பா.ஜ.க. தான் வெற்றி பெறும். சென்னைக்கு பிறகு திருச்சியை மற்றொரு தலைநகரமாக கொண்டு வர இருக்கிறார்கள். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்க வேண்டிய வி‌ஷயத்தை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிக்க வேண்டும்.

    ஆகையால் சிந்தித்து செயல்படுங்கள். இது ஒரு மெகா கூட்டணி. இந்த கூட்டணியை அழிக்க நினைக்கிறவர்கள் முட்டாள். இந்த கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் புத்திசாலி. அதனால் போட்டி, பொறாமை, போலி கவுரவம் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து செயல்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami #HRaja
    சிவகங்கை:

    பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்படுகிறது.



    மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற தகுதிவாய்ந்த பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கவேண்டும்.

    எம்பியாகவும் மத்திய நிதிமந்திரியாகவும் இருந்த சிதம்பரம், இந்த சிவகங்கை தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரே செய்யாதபோது அவரது மகன் கார்த்தி எப்படி திட்டங்களை கொண்டு வருவார்?

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami #HRaja
    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #MKStalin
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, ராமநாதபுரம் அரண்மனை பகுதி பரமக்குடி பகுதிகளில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் பிரச்சனைகளை சரி செய்து உலகமே நமது நாட்டை திரும்பிப் பார்க்க செய்தவர் பிரதமர் மோடி. அன்னிய சக்திகள் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி 35 ஆயிரம் போராட்டங்கள் நடத்தியுள்ளார். தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மு.க. ஸ்டாலின் தேவையற்ற போராட்டங்களை நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நாடு நலம் பெறவும், வளம் பெறவும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

    அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணியால் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அரசு உதவியுடன் காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

    தற்போது தமிழகம் மின் தடையே இல்லாத மாநிலமாக விளங்குகிறது. சட்டம்-ஒழுங்கில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றி உள்ளது. ஸ்டாலின் இன்னும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அனைத்தையும் முறியடிக்க கூடிய சக்தி எங்களுக்கு உண்டு.

    மு.க.ஸ்டாலின் நான் முதல்வரானதில் இருந்து எப்போது பேசினாலும் என்னை பதவி விலகச் சொல்கிறார். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என நினைக்கிறார். அ.தி. மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் வரை அவர் முதல்வராக முடியாது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #MKStalin
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் என்று பிரேமலதா தெரிவித்தார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha
    ஸ்ரீமுஷ்ணம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். பண்ருட்டி, கடலூர் உழவர்சந்தை, விருத்தாசலம் பாலகரை ஆகிய இடங்களில் கடலூர் பாராளுமன்றதொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய இடங்களில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் திறந்தவேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

    ஸ்ரீமுஷ்ணம் காமராஜ் சிலை அருகே உள்ள கடை வீதியில் நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணி புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நமது வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு சென்று தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார பிரச்சனைபற்றி பேசி திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் இந்திய பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும். நமது கூட்டணி தமிழகம் வரவேற்கும் கூட்டணி. ஒட்டுமொத்த இளைஞர்கள், பெண்கள் ஆதரவுடன் அமோக வரவேற்பு பெற்ற கூட்டணி.

    இந்த கூட்டணி அமையக்கூடாது என தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தது. அவற்றை எல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேப்டன் ஆகியோர் சேர்ந்து இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி இயற்கையாக பூ, இலை, பழம் என அமைந்துள்ள கூட்டணி. இங்குநிற்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது, ஆற்றல்மிகு இளைஞர்களின் கூட்டமாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேனீக்கள் போல் தே.மு.தி.க. கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வாக்குகளை சிதறாமல் வாக்குச்சாவடிகளில் சேர்க்க வேண்டும்.

    பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha

    கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #SureshGopi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.

    குஜராத் மாநிலம் மகேசனா தொகுதியில் சாரதா பென் படேலும், சூரத் தொகுதியில் தர்சனா ஜார்தேசும் அறிவிக்கப்பட்டனர். பா.ஜ.க. இதுவரை 377 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஒடிசா சட்டசபை தேர்தலுக்கு 11 வேட்பாளர்களின் பட்டியலையும் பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. #LokSabhaElections2019 #SureshGopi
    ஆந்திராவில் அதிரடிப்படை சோதனை என்ற பெயரில் ஆந்திர தொழிலதிபரின் காரை சோதனையிட்டு, ரூ.1.70 கோடி பணத்தை பறித்துச் சென்ற கும்பல் சிக்கியது. #LokSabhaElections2019 #AndhraPradesh
    விஜயவாடா:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த சோதனையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் கும்பலும் சில இடங்களில் கைவரிசை காட்டுகிறது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று தொழிலதிபர் ஒருவர் காரில் வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்துள்ளது. அதிரடிப்படையினர் என அவர்கள் தங்களை அறிமுகம் செய்ததுடன், அந்த தொழிலதிபரின் காரை சோதனையிட்டு அதில் இருந்த 1.70 கோடி பணத்தை பறிமுதல் செய்தது.



    ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த தொழிலதிபர், போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினர். அந்தப் பணம் மோசடி செய்து சேர்த்த பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளனர்.  #LokSabhaElections2019 #AndhraPradesh
    வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது தி.மு.க. தான் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு அவர் கீழ்பென்னாத்தூர் சென்றார். இரவு 10.05 மணிக்கு பிரசாரம் நடைபெறும் இடமான கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றதால் தேர்தல் விதிகளின் படி அவர் பேச முடியாமல் மக்களை நோக்கி கையால் சைகையை மட்டும் காண்பித்து விட்டு சென்றார்.

    இதையடுத்து அவர் இரவு திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள விடுதியில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துரைமுருகனின் வீட்டில் நடைபெற்ற சோதனை அவரை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், எங்களை வெற்றி பெற செய்யவிடாமல் தடுப்பதற்காக நடக்கும் சூழ்ச்சி தான் இது என்றும் துரைமுருகன் கூறி வருகிறார். அவர் எவ்வளவு பெரிய பொய்யை சொல்லி வருகிறார் என்று இன்று வெட்ட வெளிச்சமாக வெளியில் வந்து உள்ளது.

    ஏனென்றால் பாதாள அறைகளிலும், சிமெண்டு குடோன்களிலும், கல்லூரிகளிலும் தோண்ட, தோண்ட குவியல்கள் மாதிரி வந்து கொண்டே இருக்கிறது. பல கோடி ரூபாய் பிடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தபிறகு தான் நமக்கு தெரியும். தே.மு.தி.க.வை அசிங்கப்படுத்த வேண்டும் என்று துரைமுருகன் தொடர்ந்து நடத்திய நாடகம் இன்று அவருக்கே திரும்பி வினையாக போய் முடிந்து உள்ளது.

    வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது தி.மு.க. தான். திருமங்கலம் பார்முலாவில் இருந்து ஒரு புற்றுநோய் போல தமிழகத்தில் இது பரவி விட்டது. கிடைக்கும் தகவலை வைத்து தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

    இதற்கு ஆளும் கட்சியின் சதி என்றும், மத்திய அரசின் சதி என்றும் கூறமுடியாது. சோதனை செய்வது பெரியது அல்ல. அங்கு என்ன கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதற்குரிய தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும். இந்த வருமான வரிசோதனை தி.மு.க.விற்கு ஒரு இழுக்கு.

    தமிழகத்தில் தி.மு.க. எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் சோதனை நடத்த வேண்டும். இன்று வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கலாம் என்று கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. ஒருவர் செய்த தப்புக்காக எல்லா வேட்பாளரும் தண்டனை பெறக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.

    யார் தவறு செய்தார்களோ? அந்த வேட்பாளரை நிச்சயமாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நான் பிரசாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களின் அமோகமான வரவேற்பு கிடைக்கிறது. எங்களின் கூட்டணி ஒட்டுமொத்த மக்கள் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. பிரதமர் மோடி தான் இந்த முறையும் பிரதமராக வரப்போகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நேரு, பொருளாளர் நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.  #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    சண்டிகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Congress #PawanKumarBansal
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும், குஜராத்தில் 4 வேட்பாளர்களும், ஜார்க்கண்டில் 3 வேட்பாளர்களும், ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா 2 வேட்பாளர்களும், இமாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் தலா ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர்.

    இதில் சண்டிகர் தொகுதியில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும் முன்னாள் மந்திரியுமான பிரனீத் கவுர் பாட்டியாலா தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சாகே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் களமிறங்குகிறார்கள்.

    பிரனீத் கவுர்

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரெயில்வே மந்திரியாக இருந்த பவன் குமார் பன்சால், தனது உறவினர் ரெயில்வே பணியிடங்களை நிரப்புவதற்கு லஞ்சம் பெற்றதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Congress #PawanKumarBansal
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #LokSabhaElections2019 #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இது வரவேற்புக்குரியது. மாநிலங்களின் உரிமைகளை மதித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தி.மு.க.வின் உயிர் மூச்சான ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இது 17-வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகிறேன். ஏழைகளுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயாக வழங்கப்படும் என்ற ஏழ்மை ஒழிப்புத்திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக அமையப்போகிறது என்பது இத்தேர்தல் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஏழைகளை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு அரசு, வருகின்ற ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு மத்தியில் அமையப்போகிறது என்பது இந்திய திருநாட்டில் உள்ள 25 கோடி ஏழைகளின் முகங்களிலும் புன்முறுவலைக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கனவான நீட் தேர்வு ரத்து என்ற காங்கிரசின் வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது.

    மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்பதும், பள்ளிக்கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் என்பதும் மாநிலங்களின் தன்மானம் போற்றப்படும் அறிவிப்புகள். விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது கடனில் துடித்துக்கொண்டிருந்த நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக அமைந்துள்ளது.



    இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் மறு ஆய்வு செய்யப்படும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும், வேளாண்மைக்கு தனி நிதி நிலை தாக்கல் செய்யப்படும் என்பன போன்ற காங்கிரசின் வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துள்ளது தி.மு.க. என்று கேலியும், கிண்டலும் பேசியவர்களுக்கு கெட்டியான வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது.

    பாரம்பரியமிக்க மாநில கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்கப் போகும் இன்னொரு பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் ஒப்புதல் கிடைத்திருப்பது ஏழரைக் கோடி தமிழர்களின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் மதிப்பிற்கும், ஒப்புதலுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்று, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாக்கும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் வழங்கியிருக்கிறது.

    ஆகவே, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற கருணாநிதியின் தாரகமந்திரத்திற்கும், சோனியாகாந்தியின் தொலை நோக்குப்பார்வைக்கும், இந்த நாட்டின் வருங்கால பிரதமர் ராகுல்காந்தி ஏழைகளின் மீதுள்ள ஆழ்ந்த அக்கறைக்கும் சான்றாவணமாக திகழ்கிறது.

    இனிமேலாவது நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது என்று விதண்டாவாதம் செய்வோர் அதுபோன்ற கருத்துகளில் இருந்து விடை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை என்றும், இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வரும் என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #LokSabhaElections2019 #MKStalin

    ×