search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold jewel"

    அரசு பஸ்சில் சென்ற முதியவரிடம் 10 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர்.வேலூரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 74). இவருடைய மகன் கோவை பீளமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரைராஜ் தனது மகனிடம் இருந்து 10 பவுன் நகையை வாங்கிச்சென்று, உடுமலையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்தார். பின்னர் அந்த நகையை சில நாட்களுக்கு முன்பு திருப்பினார். அதை பீளமேட்டில் வசித்து வரும் தனது மகனிடம் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக துரைராஜ் நேற்று முன்தினம் காலையில் உடுமலையில் இருந்து அரசு பஸ் மூலம் கோவை உக்கடம் வந்தார். 10 பவுன் நகையை ஒரு சிறிய பைக்குள் மறைத்து தான் அணிந்திருந்த ஆடைக்குள் வைத்திருந்தார்.

    உக்கடம் வந்த அவர் அங்கிருந்து மற்றொரு அரசு பஸ்சில் ஏறி, பீளமேடு சென்றார். பின்னர் அவர் பீளமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கியதும், தான் வைத்திருந்த நகையை பார்த்தபோது அதை காணவில்லை. பஸ்சில் வந்தபோது மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

    அந்த நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து துரைராஜ் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் துரைராஜிடம் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, ‘பொதுவாக பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி முதியவர் கள் மற்றும் பெண்களிடம் நகை, பணம் திருடும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. எனவே பஸ்சில் செல்லும்போது பணம், நகை கொண்டு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்றனர். 
    ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கயல்விழி (வயது29). இவர் நேற்று செம்பாளூர் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயார் செல்வராணியை (49) ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். இவர்கள் ஒரத்தநாடு அருகே வடக்குநத்தம் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கயல்விழியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    அதேபோல் பேராவூரணியை சேர்ந்தவர் நீலகண்டமூர்த்தி என்பவருடைய மனைவி சுந்தரி (34). இவரும் அதே செல்லம்பட்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேராவூரணியை சேர்ந்த ரெங்கசாமி மனைவி நீலவேணி (35) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சுந்தரி ஓட்டினார்.

    திருவோணம் அருகே தளிகைவிடுதி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார்சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் சுந்தரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை திடீரென பறித்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தங்க சங்கிலியுடன் தப்பி விட்டனர்.

    ஒரத்தநாடு பகுதியில் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 2 பெண்களிடம் 15 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கயல்விழி ஒரத்தநாடு போலீசிலும், சுந்தரி திருவோணம் போலீசிலும் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார், பெண்களிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
    குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தாயும், மகளும் காயம் அடைந்தனர்.

    குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், விவசாயி. இவரது மனைவி கீதா என்கிற அகிலாண்டேஸ்வரி (வயது 37). இவர்கள் நேற்று முன்தினம் இரவு 2 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் டவுன் பிச்சனூர் வாரியார் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    வாரியார் நகர் பகுதியில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் கீதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் நிலைத்தடுமாறி 3 பேரும் கீழே விழுந்துள்ளனர்.

    பின்னர் 5 பவுன் நகையுடன் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கீழே விழுந்ததில் கீதாவிற்கு தலையிலும், குழந்தைக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். 
    ×