search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK coalition"

    சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது தி.மு.க. கூட்டணி பழைய சோறு என்று கூறினார். #LokSabhaElections2019
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பஸ்நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

    காவிரி நடுவர் மன்றம் தொடர்பாக தமிழகத்தில் எந்த முதல்வரும் சாதிக்க இயலாத காரியத்தை சாதித்து காட்டியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவார். சட்டரீதியாக போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தமிழகத்துக்காக வாங்கி தந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த நாள் தான் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.



    தி.மு.க. தலைவர் ஸ்டாலினை போன்று நடந்து சென்றும், சைக்கிள் ஓட்டியும், டீ கடையில் டீ குடிப்பது போன்றும், மாய தோற்றத்தை நான் உருவாக்க மாட்டேன். நானே டீ கடை நடத்தியவன். டீ கடையில் டீ சாப்பிடுவது யார்? டீ சாப்பிடுவது போல் நடிப்பது யார்? என்பது எனக்கு தெரியும்.

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் யாரும் பேண்ட் போட்டுக்கொண்டு ஏர் உழுவது இல்லை. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலர் கலராக பேண்ட், சட்டைகளை போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

    இலங்கையில் போர் நடக்கும்போது கருணாநிதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதுபோல் பாவனை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது,

    இலங்கை தமிழர்களுக்காக நான் மத்திய அரசிடம் பேசி சுமூகமாக போரை நிறுத்தி விட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதேசமயத்தில் இலங்கையில் பதுங்கும் குழியில் இருந்தவர்கள் கருணாநிதியின் பேச்சை நம்பி வெளியே வந்தனர். அப்போது இலங்கை அரசு வெடிகுண்டுகளை வீசி தமிழர்களை அழித்து விட்டனர். அந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போரை நிறுத்த வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்த சென்ற கனிமொழி இலங்கை தமிழர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தாமல் பரிசு மட்டும் வாங்கி வந்து விட்டார்.

    தி.மு.க.வினர் பிரியாணி கடை மற்றும் பரோட்டா கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டதற்கு கடைக்காரர்கள் காசு கேட்டனர். காசு கொடுக்காமல் கடைக்காரர்களை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர்.

    காலை முதல் மாலை வரை அடுப்பில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்களை தி.மு.க.வினர் வயிற்றில் அடிக்கிறார்கள். ஓசியில் சாப்பிட்டால் செரிக்காது.

    தி.மு.க.வினர் ஏற்கனவே அவர்களுடன் இருந்தவர்களுடனே கூட்டணி அமைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி பழைய சோறு ஆகும்.

    அம்மா இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் என்ற தமிழர்களின் பண்பாட்டின்படி பாதி சீட்டை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளோம். மீதி தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

    தர்மத்தின் ஆட்சி நீடிக்கவும், வலிமையான பாரதம் அமையவும், வலிமையான பிரதமர் கிடைக்கவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நமது பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திடீர் சென்னை வருகையால் திமுக கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். #ParliamentElection #RahulGandhi #MKStalin
    சென்னை:

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர, ஏனைய கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டன. எந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேசினாலும், முடிவு எட்ட முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், நாகர்கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வருகைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையை முடித்து தொகுதிகள் பட்டியலை வெளியிட தி.மு.க. திட்டமிட்டிருந்தது.



    ஆனால், நேற்று திடீரென ராகுல்காந்தியின் வருகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவர் சென்னை வந்து 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகே நாகர்கோவில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

    இதனால், நேற்று இரவு தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வரவில்லை. இன்றும் நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் செல்ல இருப்பதால், தொகுதிகள் பட்டியல் வெளியாக வாய்ப்பு இல்லை.

    எனவே, நாளை (வியாழக்கிழமை) காலை சென்னை அண்ணா அறிவாலயம் வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளை இறுதி செய்ய உள்ளனர். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். தற்போதைய நிலையில், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, திருச்சி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் சிக்கல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #RahulGandhi #MKStalin

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #DMK #Election

    பாபநாசம்:

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உயர் கல்வித் துறையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ஊழல் நடந்துள்ளது. எனவே தமிழக கவர்னரை மாற்றவேண்டும் எனவும் கூறி வருகிறார். இது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கருத்தாக உள்ளது.

    இந்த நிகழ்வு தமிழக கல்வித் துறைக்கு மிகப் பெரிய அவமானம். இது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கூறி வருகிறார். இது தமிழக அரசியலுக்கு மிகபெரிய அவப்பெயராகும்.

     


    தமிழகத்தில் கல்வி, ஒழுக்கம், அரசியல் நாகரிகம், நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, என்று தமிழகத்தில் நிறைந்திருந்த காலம் போய் தற்போது தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது. மு.க.ஸ்டாலின் கூறியது போல் தமிழக அரசு கலெக்சன், கமி‌ஷன், கரப்சன் ஆட்சி என கூறி வருவது உண்மை என தமிழக அரசியல் நடுநிலையாளர்கள் எண்ணுகின்றனர்.

    காங்கிரசுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். இது அவரின் சொந்த கருத்தாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் தோழமையுடன் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் இந்திய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தி.மு.க.கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திமுக கூட்டணியால் ஒருபோதும் எங்களை வீழ்த்த முடியாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். #tamilisai #dmk #mkstalin

    சென்னை:

    பா.ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்கு தேவையான செயல் திட்டங்களை வகுப்போம் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு பதிலளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

    பிரதமர் யார் என்பதையே முடிவு செய்ய முடியாமல் இருக்கும் ஒரு கூட்டணி. தொடர்ந்து பா.ஜனதாவை விமர்சித்து வருவதற்கு காரணம் எங்கள் வளர்ச்சியை கண்டு பயப்படுவதுதான்.

    கலைஞர் உயிருடன் இருந்த போது பா.ஜனதாவுக்கு ஒரு கொடி நடுவதற்கு கூட இடம் கிடைக்காது என்றார். இன்றைய நிலைமை என்ன? தி.மு.க. பக்கம் யாரும் செல்ல வில்லை.


    ஆனால் பா.ஜனதா வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் முத்திரை பதித்துள்ளது. கட்சி பலமாக வளர்ந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூடுதலான எம்.பி.க்கள் வெற்றி பெறுவார் என்று பா.ஜனதா செயற்குழுவில் அமித்ஷா குறிப்பிட்டார். கட்சியின் வளர்ச்சி அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    தி.மு.க.வை மாதிரி நாங்கள் எந்த கட்சியையும் வர விடமாட்டோம் என்று சொல்ல மாட்டோம். ஆனால் மக்களே உங்களை இனிவர விட மாட்டார்கள்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மதம் சார்ந்த கட்சியாக இருக்கும். மதக்கலவரம் வரும் என்றெல்லாம் பூச் சாண்டி காட்டி பார்த்தார்கள். ஆனால் கடந்த 4½ ஆண்டுகளில் அவர்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப் பையும் மோடி பெற்று இருக்கிறார்.

    மத்தியில் தி.மு.க.வுக்கு அங்கீகாரம் கொடுத்த கட்சி பா.ஜனதா என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது தங்கள் இயலாமையின் காரணமாகத்தான் இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியால் ஒருபோதும் எங்களை வீழ்த்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #dmk #mkstalin

    ×