என் மலர்
நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"
- அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
- டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
நெல்லை:
ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.
திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.
வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.
நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.
வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.
அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார்.
- திமுக-தேமுதிக கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது.
- 10 ஆண்டுகள் கழித்து திமுகவில் தேமுதிக கூட்டணி நடந்திருக்கிறது.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதை பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதை இன்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
இந்த கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழிந்து அது நடந்திருக்கிறது.
திமுக-தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களையும் மேடையேற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் கூட்டணியில் புதிதாக சில சிறிய கட்சிகளை கொண்டு வரவும் தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக வருகிற 8-ந்தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் வருகிற 22-ந்தேதி தொடங்கும் பேச்சுவார்த்தையை 15 நாட்களுக்குள் முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
- எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரசும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டு மொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன்.
இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொடுத்த தொகையை மக்கள் செலுத்தவில்லை என கூறுகிறீர்கள். இது குறித்து அரசு தான் கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி கொடுத்து இந்த ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதைப் பற்றி இந்த நாடு கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். அவ்வாறு அவர்கள் கேட்பதால் கூட்டணி உடையாது.
உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை அவர் விளக்குவார். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்றார்.
- மு.க.ஸ்டாலின் அவர்களை இப்பொதுக்குழு மனமார பாராட்டுகிறது.
- சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், "தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத ஃபாசிஸ்டுகளின் கொடும்பிடியிலிருந்து தமிழ்நாட்டை காத்து நின்று, சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி, சமய நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் வழியே தமிழ்நாட்டின் ஆட்சியை நடத்தி, கல்வியிலும் தொழில்துறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கி, ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளைக் கடந்து, ஓங்கி நிற்கும் திமுக அரசையும் அதை முத்தமிழறிஞர் கலைஞரின் முத்திரையோடு இயக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையும் இப்பொதுக்குழு மனமார பாராட்டுகிறது.
இந்த ஆட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு மென்மேலும் வளர்ந்திட, சமூக நல்லிணக்கம் மலர்ந்திட, சமூகநீதி கோட்பாடுகள் ஓங்கி ஒளிர்ந்திட, சிறுபான்மையினர் முன்னேற்றம் சிறந்திட திமுக கூட்டணிக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து, 2026 ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறுவதற்கு முதன்மை காரணமாக நமது களப்பணிகள் அமைந்திட வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
- புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.
புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு மோடி பலியாகி விட்டார். இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் மீது அக்கறை காட்டுகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் எதிர்க்கி றார்கள். எனவே, மோடி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும்.
கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா.? என்பது யூகமான கேள்வி. ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. பா.ம.க. ஏற்கனவே எடுத்த சோசியல் என்ஜினியரிங் நிலைப்பாட்டால் வி.சி.க.வின் வெளிப்படை யான முடிவை அறிவித் தோம். அந்த முடிவைதான் மறுபடி மறுபடி சொல்கி றேன். இதில் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்ப வில்லை.
கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும். புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை.
- காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை அது தான் உண்மை. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி பேச முயன்றபோது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சி தலைவரை கூட பேச அனுமதிக்கவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அது குறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை? அது போன்ற பிரச்சினை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.
தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு பேரும் வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பேசி வருவதும், குழப்பமான நிலை நீடிப்பதற்கும் தி.மு.க. குழு அமைக்காதது தான் காரணம்.
தி.மு.க., காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மணக்கசப்பிற்கு தி.மு.க.வே காரணம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் ஒருபோதும் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை குழுவை தி.மு.க. அமைக்க வேண்டும். இல்லையென்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத் தான் செய்யும்.
ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அதன் பிறகும் கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு முடிவை தி.மு.க. உடனடியாக எடுக்க வேண்டும். தி.மு.க குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
1967-க்கு பின்னர் நாங்கள் ஆட்சியில் இல்லை தான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லை தான். அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும். அப்போதுதான் தி.மு.க. மதசார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாக பார்க்க கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க அரசு ஒருவேளை அமைந்தால், அது அ.தி.மு.க. அரசாக இருக்காது, பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று ரசிகர்கள் உள்ளனர்.
அந்த ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம், தொண்டர்கள் வாக்களிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும், விஜய்க்கு ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை.
அந்த வாக்குகளால் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அது சீட்டாக மாறுமா என்பது கேள்விக் குறிதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. விஜய் மீது வருமான வரி துறையின் தீர்ப்பு என்பது தேர்தலை எந்த விதத்திலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இது ஊழல் கிடையாது, வரி கட்டவில்லை என்று தான் கூறுகிறார்கள். வரியை கட்டிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
- வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
- தி.மு.க தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தி.மு.க முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பெண்களுக்கான ஏராளமான நல்ல திட்டங்களை நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். நான் ஏற்கனவே சொன்னது போல 2006, 2016-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அதைவிட சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டு வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பே தி.மு.க தேர்தல் பரப்புரை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதலமைச்சர் நல்லபடியாக வைத்துள்ளார். தி.மு.க கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர். கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சர் மீது தனி மரியாதை வைத்துள்ளார்கள்.
தி.மு.க தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும். நீங்க எந்த ஆட்சிலும் இல்லாத அளவிற்கு அரசின் நல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதை கண்டறிந்து, எங்கையாவது குறை இருந்தால் அதனை உடனடியாக மாவட்ட கலெக்டர்களிடம் பேசி சரி செய்து கொடுக்கிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் ஒவ்வொரு இடத்திலேயேயும் நடத்தி ஒரு 20 ஆண்டு காலம், 30 ஆண்டு காலமாக நடைபெறாத பணிகளெல்லாம் ஒரே நாளில் முடிச்சு தந்தது நமது முதலமைச்சர் தான். தீர்க்க முடியாத பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க.வுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து முதலமைச்சர் தான் பேசி இறுதி முடிவு எடுப்பார். எங்களிடம் என்ன வேலை சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களது வேலை. கண்டிப்பாக தி.மு.க. தான் தேர்தலில் ஜெயிக்கும் என்றார்.
- ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது.
- காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட் கூறுகையில் "ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை. இதன்மூலம் அவர்களால் தமிழ்நாடு மக்களுக்கு உதவி செய்ய முடியும்.
எதிர்காலத்தில் எது நடந்தாலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழக அரசியலில் கால் பதிக்க முடியாது. தி.மு.க. அரசு சிறந்த பணியை செய்து வருகிறது. அவர்களின் செயல்பாட்டை மக்கள் விரும்பியுள்ளனர்" என்றார்.
தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆட்சியில் அதிகாரம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
- அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
- திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
- வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
- ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் சந்தித்து பேசினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்து கொண்டார்.
தைலாபுரம் தோட்டத்தில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தர்மபுரி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் வந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பா.ம.க. உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
இதனால் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். பூரண குணமடைந்து உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பா.ம.க. ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மற்றும் பா.ம.க. நிறுவனர் பேசக்கூடிய விஷயம். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்.
கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால் தமிழகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் எங்களது நிலைப்பாடு. திருத்தப்பணி நடைபெறும் போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை மகாபலிபுரம் அழைத்து விஜய் சந்தித்தது குறித்த கேட்ட போது,
விஜய் அன்றைய தினமே அல்லது ஒரு சில நாட்களிலே அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக்கூடியது அல்ல. கண்டிப்பாக அவர் கரூரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.






