search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிப்பதுதான் தேவேகவுடா குடும்பத்தின் குணம்: ஸ்மிரிதி இரானி
    X

    கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிப்பதுதான் தேவேகவுடா குடும்பத்தின் குணம்: ஸ்மிரிதி இரானி

    மக்களை அனுதாப அலையில் வீழ்த்தி கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிப்பதுதான் தேவேகவுடா குடும்பத்தின் குணம் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடுமையாக தாக்கி பேசினார். #SmritiIrani #DeveGowda
    கோலார் தங்கவயல் :

    கோலார் டவுனில் உள்ள பி.யூ.கல்லூரி மைதானத்தில் கோலார் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் முனிசாமியை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா அரசு ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. ஜந்தன் வங்கி திட்டம் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர். முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.56 ஆயிரம் கோடி வரை தொழில்கடன் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிராமப்புறங்களில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

    மத்திய அரசால், 12 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த கூட்டணி கமிஷன் அடிப்படையில் சேர்ந்த கூட்டணி. முதல்-மந்திரி குமாரசாமி தலையாட்டி பொம்மைபோல் ஆகிவிட்டார். அவர் ‘ரிமோட் கன்ட்ரோல்’ முதல்-மந்திரி போல் செயல்படுகிறார். அவரை இயக்குவது எல்லாம் காங்கிரஸ் கட்சிதான்.

    காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு முதல்-மந்திரி குமாரசாமி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இதை அவரே பல இடங்களில் சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    இதுமட்டுமல்லாமல் மக்களை அனுதாப அலையில் வீழ்த்தி கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிப்பதுதான் தேவேகவுடா குடும்பத்தின் குணம் ஆகும்.

    கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனை தீர்க்க கூட்டணி ஆட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டில் ராமர் இல்லை, ராமாயணமும் இல்லை என்று காங்கிரசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ராகுல்காந்தி இப்போது கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகிறார். இதிலிருந்து அவர் தேர்தலுக்காக வேஷம் போடுகிறார் என்று மக்களுக்கு தெரியவந்துள்ளது.

    தற்போது நாட்டின் பாதுகாவலனாக நரேந்திர மோடி உள்ளார். அவரையே மீண்டும் மக்கள் பிரதமராக்க வேண்டும். கோலார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

    இதில் மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடமுனி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பங்கி, வேட்பாளர் முனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #SmritiIrani  #DeveGowda

    Next Story
    ×