என் மலர்
தஞ்சாவூர்
- 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு ராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய, அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறுகையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சி அளிக்கிறார். 'தென்னக அயோத்தி' என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி பெருவிழா கடந்த (9-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மங்கல இன்னிசையுடன் பல்லக்கிலும், மாலை வண்ண மின் விளக்குகள் ஒளிர இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராம் ராம்.. சீதா ராம்... என பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) திருமஞ்சனமும், புஷ்பயாகமும், மறுநாள் 21-ந்தேதி ராஜ உபசார திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
- விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் கிருபா பொன் பாண்டியன் (வயது 34).
இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை அடுத்த வல்லம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுத்திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த கிருபா பொன் பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி டிரைவரான காரைக்கால் திருநகரைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாச முத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த மேத்யூ (26) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் உயிரிழந்தார். மேத்யூவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தில் சேதமடைந்த கார், லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
- கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது.
விழாவின் கடைசி நாளான 23-ந்தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.
காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 25-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது.
திருவையாறு:
திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேரோட்டம்
விழாவில் வருகிற 18-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெறுகிறது. அன்று 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறுகிறது.
22-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர்வீதி உலா வருகிறது. அப்போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தேர் நான்கு வீதி வந்து நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
சப்தஸ்தான பெருவிழா
விழாவில் 25-ந்தேதி முக்கிய திருநாளான சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
26-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குகளுடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.
விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
- சுதீஷ் இன்று மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
இதனை மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டையும் மந்திரிகளாக, எம்.பிக்களாக ஆக்கியவர்.
அவரை தொடர்ந்து விஜயகாந்தும் சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை.
- வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.
தஞ்சாவூா்: தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரசநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சமரச மையத்தின் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையில் தீர்வுகாண வலியுறுத்தியும், நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
சமரசமாக தீர்வு காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.
சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
- வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
- வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நேற்று மாலை நடந்தது.
முன்னதாக தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து கப்பரை எடுத்து வரப்பட்டது. கப்பரையானது சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டு வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர், பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராதாகிருஷ்ண சாமியார் வீசிய வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்து சாப்பிட்டனர்.
சாமியார் வீசும் இந்த வாழைப்பழத்தை பக்தர்கள் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் கிட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பின்னர், இரவு சுவாமி வீதிஉலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை முதலே கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான உருவபொம்மைகளை வாங்கி வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, குதிரை எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாய்மேடு போலீசார் செய்திருந்தனர்.
- இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
- வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.
இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.
இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.
எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
- சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2-ம் நாளான நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவின் கடைசி நாளான 23-ந் தேதி தீர்த்த வாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
- வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர்.
- பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.
தஞ்சாவூா்:
தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கோலமிடுதல், கிரிக்கெட் போட்டி, பலூன் பறக்க விடுதல் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த கழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏராளமான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்தை கோலமாக வரைந்து அதில் 1000 தீபங்கள் ஏற்றினர்.
அப்போது வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். மேலும் ஒலி பெருக்கியில் விழிப்புணர்வு பாடலும் போடப்பட்டன.
இந்த நூதன விழிப்புணர்வை பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.
- இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்.
கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்.
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
முரசொலியையும், உதயசூரியனையும் பிரிக்க முடியாது. மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும்.
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






