என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
புயல் காரணமாக “ஒக்கி” தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்தது.
“ஒக்கி” புயலை தொடர்ந்து சாகர் புயல் மிரட்டல் விடுத்து வருகிறது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:-
தேவகோட்டை-49.4
திருப்பத்தூர்-48.3
சிங்கம்புணரி-8.20
சிவகங்கை-8.5
காளையார்கோவில்-3.4
மானாமதுரை-2.4
சிவகங்கை:
திருப்புவனம் தாலுகா வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 65), விவசாயி. இவரது தம்பி சேதுராமன் (48). இவர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (48) என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பிக் கொடுக்காததால் சுப்பிரமணியன், சேதுராமனின் அண்ணன் செல்லச்சாமியிடம் சென்று கேட்டார்.
அப்போது சுப்பிரமணியன் கொலை மிரட்டல் விடுத்ததாக திருப்பாச்சேத்தி போலீசில் சேதுராமன் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார் கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.
கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடிய, விடிய மழை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.
தொடர்மழை காரணமாக சிவகங்கை, காளையார்கோவில், இளையாங்குடி, மானாமதுரை, திருப்புவனம் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் லதா அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டியது. நேற்று சற்று ஓய்வெடுத்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பலத்த சூறாவளி வீசியது. அந்த சமயத்தில் பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் கடல் உள் வாங்கியது.
சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை மணல் மூடியது. இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கிய சாரல் மழை 6 மணி வரை நீடித்தது. தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டதுடன், விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகிபோனது. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் குளறுபடி இருப்பதாகவும், ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் காளையார்கோவில் அருகே உள்ள புலியடிதம்மம் கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நேற்று புலியடிதம்மத்தில் காளையார்கோவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மருது (வயது 20). கட்டிடத் தொழிலாளி.
அதே பகுதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). கட்டிட வேலை செய்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 24-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நடராஜபுரத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக் குமார் ஆத்திரம் அடைந்து தன்னிடம் இருந்த கத்தியால் மருதுவை குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
படுகாயம் அடைந்த மருதுவை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மருது பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மருதுவின் தாயார் அம்மாசெல்வி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஎசப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருதுவை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பணம் கட்டினால் 2 ஏக்கருக்கு தான் பணம் தரப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகளுக்குரிய இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் வறட்சி நிவாரணப் பணியை தொடங்க வேண்டும். தற்போது புதுவித மணல் கொள்ளை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. விவசாய நிலத்தில் ரூ. 15 ஆயிரம் கொடுத்து 3 அடிக்கு சவடுமண் எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் 15-ல் இருந்து 20 அடி வரை மணல் தோண்டப்படுகிறது.
இது பிற மாநிலங்களுக்கு விற்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தட்டிக்கேட்கும் விவசாயிகள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இதில் மாநில அரசு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
மாநில அரசு புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. இதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். செயற்கை மணலை உருவாக்க வேண்டும். அல்லது மணல் இறக்குமதி செய்ய வேண்டும். இதனால் கட்டிடப்பணிகள் பாதிக்கக்கூடாது.
கந்துவட்டி சட்டத்தின் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து வருகிற 30-ந் தேதி காலையில் நடைபெறும் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஆர்.கே. நகர் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கால் அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை உருவாகி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதுபோக கடந்த சில ஆண்டுகளாக தேவகோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு வந்து கொட்டப்படுவதால் இந்த பகுதியில் மலைபோல் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறி வந்தனர். இந் நிலையில் காரைக்குடி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், அப்பகுதியில் அமைய உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 13-ந்தேதி சாலை மறியல் போராட்டம், கடையடைப்பு போராட்டம், சமையல் செய்து அங்கேயே சாப்பிடும் போராட்டம், வாய் மற்றும் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம், கும்மியடித்து போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 12-வது நாளான நேற்றும் அந்த பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் பாடைகட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்தில் கம்பினால் பாடை ஒன்று கட்டப்பட்டது. அந்த பாடையில் பெண் ஒருவர் படுத்திருந்தார். அந்த பெண்ணின் நெற்றியில் சந்தனம் பூசப்பட்டு அதில் நாணயம் வைக்கப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பாடையை சுற்றி வந்து மார்பில் அடித்தபடி ஒப்பாரி வைத்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகாவில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரேவதியிடம் ஒரு முகவரியை காட்டி இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டனர்.
அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்கள் ரேவதி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசில் ரேவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள கொழுக்கட்டைபட்டியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60), விவசாயி. இவரது மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சந்திரன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய சந்திரன் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கையில் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாணவர்களுக்கு கல்விக் கடன் ஏராளமாக வழங்கியது.
இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். அவர்கள் இன்று பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். சிலர் தொழில் தொடங்கி உள்ளனர்.

ஆனால் தற்போதைய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கல்விக்கடன் எதுவும் வழங்கவில்லை.
இதனால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்விக்கடன் கிடைக்காது என்ற எண்ணத்தில் மேல்படிப்பு படிக்க தயங்குகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவகங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 200 பொருட்களுக்கு மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. ஓட்டல்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்வேறு ஓட்டல்களில் கூடுதலாக ஜி.எஸ்.டி. வரிகள் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“பத்மாவதி” திரைப்படம் ராஜஸ்தான் மாநிலம் சித்தூர் ராணியின் வரலாற்றை படமாக எடுத்துள்ளனர். ஆனால் அதில் ராணியை குறித்து தவறான தகவல்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.
“பத்மாவதி” திரைப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்து தவறானது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொது மேடைகளில் வரலாற்றை மூடி மறைப்பதும், திரித்துக் கூறவும் கூடாது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடந்து வருகிறது. இதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை ரெயில் நிலையம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாம்பவிகா உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளர் மற்றும் செயலாளராக இருந்து வருபவர் சேகர்.
இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது.
இந்த நிலையில் பகல் 12 மணியளவில் திடீரென பள்ளி வளாகத்திற்குள் மதுரை, காரைக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட கார்களில் வந்து இறங்கினர்.
அவர்கள் நேராக பள்ளியின் செயலர் அறை, பதிவறை, கணினி அறை ஆகியவற்றுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியில் தனியாக இருந்த ஓய்வு அறையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை தொடர்பாக பள்ளியின் நிர்வாகிகளிடமும் கேள்விகள் கேட்டு பதில்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
அதன் பிறகு 2 பைகளில் ஆவணங்கள், பென்-டிரைவ்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
முன்னதாக அண்ணா மலைநகரில் உள்ள பள்ளியின் செயலர் சேகர் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.






