என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பை கிடங்கை அகற்றக்கோரி பாடைகட்டி போராட்டம்
    X

    குப்பை கிடங்கை அகற்றக்கோரி பாடைகட்டி போராட்டம்

    காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று பாடைகட்டி போராட்டம் நடத்தினர்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை கிடங்கால் அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை உருவாகி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதுபோக கடந்த சில ஆண்டுகளாக தேவகோட்டை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு வந்து கொட்டப்படுவதால் இந்த பகுதியில் மலைபோல் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறி வந்தனர். இந் நிலையில் காரைக்குடி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், அப்பகுதியில் அமைய உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 13-ந்தேதி சாலை மறியல் போராட்டம், கடையடைப்பு போராட்டம், சமையல் செய்து அங்கேயே சாப்பிடும் போராட்டம், வாய் மற்றும் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம், கும்மியடித்து போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 12-வது நாளான நேற்றும் அந்த பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் பாடைகட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்தில் கம்பினால் பாடை ஒன்று கட்டப்பட்டது. அந்த பாடையில் பெண் ஒருவர் படுத்திருந்தார். அந்த பெண்ணின் நெற்றியில் சந்தனம் பூசப்பட்டு அதில் நாணயம் வைக்கப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பாடையை சுற்றி வந்து மார்பில் அடித்தபடி ஒப்பாரி வைத்தனர்.
    Next Story
    ×