என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா கண்டனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் காசியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கலையரசி (வயது 56) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கலையரசி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

    தனியார் செங்கல் சேம்பரில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டார் பழுதை வேலைபார்க்க சென்ற தொழிலாளி வி‌ஷ வாயுதாக்கி பலியானார். உறவினர்கள் இழப்பீடு கேட்டு சடலத்துடன் போராட்டம் நடத்தினர்.

    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராமு மகன் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). இவர் மோட்டார் பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் ராஜகம்பீரத்தில் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியார் செங்கல் சேம்பர் கம்பெனியில் உள்ள கிணற்றில் இருந்த மோட்டாரில் பழுது ஏற்பட்டு இருந்ததை சரி செய்ய முத்துக்கிருஷ்ணன் மற்றும் 2 பேர் சென்றுள்ளனர்.

    அப்போது சுமார் 50 அடி ஆழத்திற்கும் மேற்பட்ட அந்த கிணற்றில் முதலில் முத்துக்கிருஷ்ணன் மட்டும் இறங்கி மோட்டாரை கழற்றி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வி‌ஷவாயு தாக்கி முத்துக்கிருஷ்ணன் மயங்கி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனைப்பார்த்த மற்ற 2 பேரும் கிணற்றில் இறங்காமல் மானாமதுரை போலீசாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

    பின்னர் பலியான முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு செங்கல் சேம்பர் கம்பெனி நிர்வாகத்தினர் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று சடலத்துடன் அங்கேயே போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சேம்பர் நிர்வாகத்தினர் உறுதியளித்ததை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை அருகே தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் மக்கள்நல பணியாளராக வேலை பார்த்தவர் சுமதி (வயது35). இவரது கணவர் கண்ணன், கோவையில் ஓட்டல் தொழிலாளியாக உள்ளார்.

    இதனால் சிறுமடை கிராமத்தில் கணவர் வீட்டாருடன் சுமதி வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய போவதாக சுமதி கூறி சென்றார்.

    இந்த நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தீக் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக சேர்ந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சுமதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சிவகங்கையில் வாலிபரிடம் வழிப்பறி செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் வழிமறித்தார்.

    அவர் சக்திவேலை மிரட்டி பணம் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு வழிப்பறி செய்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

    பின்னர் அவன் சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தார்.

    விசாரணையில் அவனது பெயர் ஆகாஷ் (22) என்பதும் ஏற்கனவே 3 வழிப்பறி வழக்குகள் அவன் மீது இருப்பதும் தெரிய வந்தது.

    தேவகோட்டை அருகே தொழிலாளியை மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    தேவகோட்டை தாலுகா ஈக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 65). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சுப்பையாவின் வழிமறித்து பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சுப்பையாவை சட்டைப்பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ. 1,500-ஐ பறித்தனர்.

    அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது சுப்பையா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    அக்கம், பக்கத்தினர் திரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். விசாரணையில் அவர்களது பெயர் பாண்டியராஜன் (34), கண்டிப்பட்டி புதூர், ராஜூ (36) வெட்டிவயல் என தெரியவந்தது.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 98 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் பாதைகளில் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. இதுதவிர பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஹாலித் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜலால்தீன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அப்துல்மாலிக் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

    இதற்கிடையில் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், மசூதியை இடித்தவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும், இடம் தொடர்பான வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அரண்மனைவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நகர் போலீசார், கட்சியின் மாவட்ட செயலாளர் காஜாமுகைதீன், மாநில துணைச் செயலாளர் முகமதுசைபுல்லாக், மாநில வர்த்தகர் அணி செயலாளர் சாகுல்ஹமீதுசேட் உள்பட 98 பேரை கைது செய்தனர்.
    திருப்புவனம் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து பணம், மதுபாட்டில்கள் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது சாய்னாபுரம். இங்கு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த பணம், மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சம். இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்யைடித்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் இந்த வழக்கு தொடர்பான மர்மநபர்களை பிடிக்க, திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சப்–இன்ஸ்பெக்டர் வாசிவம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் பனையூரை சேர்ந்த குரங்குசிவா, அருள்குமார் மற்றும் திருப்புவனத்தை அடுத்த சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் ஆகிய 3 பேர் சேர்ந்து சாய்னாபுரம் டாஸ்மாக் கடையில் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து குரங்குசிவா, அருள்குமார், அஜீத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×