search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபர் மசூதி இடிப்பு தினம்"

    • நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டனர். மேலப்பாளையம் பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

    நெல்லை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், நெல்லையப்பர் கோவில், டவுன் ரதவீதிகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள், மேலப்பாளையம் ரவுண்டானா என முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலப்பாளையத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தை பகுதிகள், பஜார்வீதி, அண்ணா வீதி, அம்பை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ., தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இன்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாளை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு த.மு.மு.க. சார்பில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி தலைமையிலும், நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர்.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    கோவை:

    ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாளை நாடு முழுவதும் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் பாபர் மசூதி தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகரில் 1,200 போலீசார் புறநகரில் 800 போலீசார் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காந்திபுரம் நகர பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அன்னூர், வால்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையங்களுக்கு வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

    பஸ்களிலும் ஏறி அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பஸ் நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர். மக்கள் வைத்திருந்த பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோல் மக்கள் அதிக நடமாட்டம் இருக்க கூடிய மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் ரெயில்வே தண்டவாளங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

    கோவை பீளமேடு அருகே உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை உக்கடம் பகுதியில் போராட்டமும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பஸ்நிலையம், ரெயில்நிலையம், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார் பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் நகரில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மலைக்கோட்டையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு திருக்கார்த்திகையை முன்னிட்டு ஒரு தரப்பினர் தீபம் ஏற்ற வருவார்கள் என்ற தகவலால் இந்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் யாரையும் மலைக்கோட்டைக்கு அனுமதிக்கவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தொடர்ந்து இன்று முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்களது விபரங்களை கேட்டறிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் முகவரி மற்றும் செல்போன் எண்களையும் போலீசார் குறித்து வைத்துக்கொண்டனர்.

    • பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
    • அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய மாநில போலீசார் கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையிலான 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில்வே போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து ெரயில் நிலையத்திலும், அனைத்து கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதேபோல புதிய, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து பணி செய்து வருகின்றனர். 

    இன்று அதிகாலையில் மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள், விழுப்புரம் ெரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர். ெரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் ேசாதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் விழுப்புரம்ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
    • டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    இன்று (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தி கோவிலை சுற்றி கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு உள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சபரிமலை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு பி.விஷ்ணு ராஜ் ஆய்வு செய்தார். அவர் சன்னிதானம், பம்பை மற்றும் மரக்கூட்டம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    அவரின் உத்தரவின் பேரில் சன்னிதானம் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாயிக் தலைமையில் கமாண்டோ படை, கேரள போலீஸ், அதி விரைவு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய படையினர் சன்னிதானம் நடை பந்தல் முதல் மரக்கூட்டம் வரை அணிவகுப்பு நடத்தினர்.

    அதே சமயம் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

    பம்பை கணபதி கோவில் முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் வெடிகுண்டை கண்டறியும் (மெட்டல் டிடெக்டர்) கருவி அமைத்து பக்தர்கள் சோதனை நடத்தப்பட்டு, சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும் படியாக செல்வோரை கண்காணிக்க பம்பை முதல் சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போல் வான் வழியாக கண்காணிக்க இந்த ஆண்டு பறக்கும் கண்காணிப்பு கேமரா ஈடுபடுத்தப்படுகிறது.

    இதேபோல் வனத்துறை சார்பிலும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்தும் சோதனை நடந்து வருகிறது.

    சபரிமலை சீசன் காலங்களில் வழக்கமாக வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நடப்பு சீசனையொட்டி நேற்று அதிகபட்சமாக 89 ஆயிரத்து 737 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.

    டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

    • 745 பேர் மீது வழக்கு
    • கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். 2 ஷிப்டுகளாக போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிய 745 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. கூடுதல் போலீ சார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலைய பகுதிகளில் போலீசார் மப்டி உடையில் ரோந்து சுற்றி வந்தனர். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லாட்ஜில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் சோதனை செய்தனர். வருகை பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டும் தங்கி உள்ளார்களா? வேறு நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சென்னை கோவை பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து வந்த ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோவில் ரயில் நிலை யத்திலிருந்து வெளியூருக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    பிளாட்ஃபாரங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். தண்ட வாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.கன்னியாகுமரி நாங்குநேரி வள்ளியூர் இரணியல் குழித்துறை ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி களியக்கா விளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    டிசம்பர் 6-ந்தேதியான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அன்று நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசாரும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கான அறிவுறுத்தல்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக கோவை, திருவண்ணாமலையில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் 4 ஆயிரம் போலீசாரும், திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மேற்பார்வையில் போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய பார்சல்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவையில் இரவில் வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.

    டிசம்பர் 6-ந்தேதி அன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செல்ல உள்ளார். பல்வேறு முக்கிய பிரமுகர்களும் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு செல்ல உள்ளனர். இதையொட்டியே திருவண்ணாமலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    5-ந்தேதி இரவில் இருந்தே திருவண்ணாமலை முழுவதும் போலீஸ் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    இதே போன்று மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 மாவட்டங்களிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் டிசம்பர் 6-ந்தேதி அன்று ரோந்து பணியை தீவிரப்படுத்த கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக துணை கமிஷனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை இரவு முதல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர். தங்கும் விடுதிகள், லாட்ஜு கள் உள்ளிட்டவற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் போலீசார் இப்போதே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்கள் கொண்டு வரும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ந்தேதி அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய தினம் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களிலும் போலீசார் உஷாராக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×