search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
    X

    6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

    • கோவை ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அன்று நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசாரும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கான அறிவுறுத்தல்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக கோவை, திருவண்ணாமலையில் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் 4 ஆயிரம் போலீசாரும், திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் டி.எஸ்.பி. யாஸ்மின் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மேற்பார்வையில் போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய பார்சல்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.

    கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவையில் இரவில் வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.

    டிசம்பர் 6-ந்தேதி அன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செல்ல உள்ளார். பல்வேறு முக்கிய பிரமுகர்களும் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு செல்ல உள்ளனர். இதையொட்டியே திருவண்ணாமலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    5-ந்தேதி இரவில் இருந்தே திருவண்ணாமலை முழுவதும் போலீஸ் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

    இதே போன்று மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 மாவட்டங்களிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் டிசம்பர் 6-ந்தேதி அன்று ரோந்து பணியை தீவிரப்படுத்த கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக துணை கமிஷனர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை இரவு முதல் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர். தங்கும் விடுதிகள், லாட்ஜு கள் உள்ளிட்டவற்றில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளது. வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட மக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் போலீசார் இப்போதே தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பொதுமக்கள் கொண்டு வரும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ந்தேதி அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய தினம் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களிலும் போலீசார் உஷாராக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×