என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அவுசிங்போர்டு அருகில் உள்ள உமையாள்திருநகரைச் சேர்ந்தவர் தவமணிவாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய கலைச் செல்வி கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பெரியாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மணிகண்டன் (25). இவர் நேற்று உறவினர் மாரியம்மாளுடன் கண்டனூர் காட்டுப்பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. மணிகண்டன் தர மறுத்ததால் அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி தாலுகா நேமத்தான்பட்டி மாணிக்க வாசகம் தெருவைச் சேர்ந்தவர் அழகு. சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த புதுக்கோட்டை மாவட்டம் உச்சாணிபுதூரைச் சேர்ந்த மணிமுருகன் (28) என்பவர் பீரோவைத் திறந்து ரூ. 34 ஆயிரத்தை திருடினார். அப்போது வீட்டுக்கு வந்த அழகு, அவரை கையும் களவுமாக பிடித்து செட்டிநாடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் மணிமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை, நகை-பணம் பறிப்பு போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கண்டனூர் காட்டுப்பகுதியில் சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே போலீசார் இனியும் தாமதிக்காமல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கந்திலி அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம கும்பல் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    கந்திலி அருகே உள்ள பெரிய கண்ணாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (50). அரசு பஸ் கண்டக்டர் நேற்று வீட்டை பூட்டி விட்டு எதிரே உள்ள மற்றொரு அறையில் தூங்கினர்.

    மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை அடைத்து ஒரு பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதே பகுதியில் உள்ள இந்திராணி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அதே ஊரை சேர்ந்த பானிபூரி வியாபாரி சகாதேவன் (35) குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். அங்கு எவ்வளவு நகை, பணம் கெள்ளைபோனது என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்திலி போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு கட்டுப்படுவேன். கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ, அங்குதான் இருப்பேன் என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 6 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வீரமணி, ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன் உள்பட 5 பேர் கலந்து கொள்ளவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் பாஸ்கரன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும்போது ஆலோசனை கூட்டம் குறித்த தகவல் தாமதமாக கிடைத்ததால் என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. நேற்று நடந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

    கட்சியும், சின்னமும் எங்கு இருக்கிறதோ, அங்குதான் நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
    காரைக்குடி:

    மாநில அளவிலான 36-வது மூத்தோர் தடகள போட்டிகள் கரூரில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மூத்தோர் தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்புராம், துணைத்தலைவர் துரைசிங்கம் ஆகியோர் தலைமையில் 45 வீரர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 10 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    சிங்கம்புணரியை அடுத்த செல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன்(வயது 80) 75 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 800 மீ., 1,500 மீ., 5,000 மீ. ஆகிய ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பிடித்து 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதேபோன்று காரைக்குடியை சேர்ந்த பொசலான்(73) 70 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் 80 மீ. தடை தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் 2-ம் இடமும் பிடித்து 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றார்.

    காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ணன் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் போல்வால்ட் போட்டியில் 2-ம் இடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் 3-ம் இடமும் பிடித்து ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் காரைக்குடியை சேர்ந்த ராஜாமணி 65 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 5 கி.மீ. நடை போட்டியில் வெள்ளிப்பதக்கமும், வேலுச்சாமி என்பவர் 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஸ்ரீராம்நகரை சேர்ந்த கணேசன் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், அதே ஊரை சேர்ந்த இப்ராகிம் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும் வென்றார்.

    இதேபோன்று பொன்னமராவதியை சேர்ந்த வீராங்கனை சண்முகவள்ளி 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான 100 மீ., 800 மீ., 1,500 மீ. ஓட்டப்பந்தயங்களில் 2-ம் இடம் பிடித்து 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஸ்ரீராம்நகரை சேர்ந்த சாந்தி 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும், காளையார்கோவிலை சேர்ந்த ஆல்பர்ட் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 5 கி.மீ. நடை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான மூத்தோர் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
    காரைக்குடி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை, டிச.21-

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது 28).

    இவருக்கும் திருச்சியை சேர்ந்த சசிதரன் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 60 பவுன் நகை, ரு. 3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் சவுந்தர்யா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் எனது கணவர் சசிதரன் கூடுதலாக வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்துகிறார். இதற்கு அவரது பெற்றோர் குருராஜப்பா-பத்மாவதி, உறவினர் ஸ்ரீதரன் ஆகி யோர் உடந்தையாக உள்ளனர். எனவே அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி சசிதரன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    தேவகோட்டை அருகே அய்யனார் கோவிலில் சுவாமி சிலையை மர்ம நபர்கள் பெயர்த்து எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள முப்பையூர் கிராமத்தில் முப்பால் அய்யனார் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசே‌ஷ நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    நேற்று பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவிலின் சுவரில் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் இருந்த சுவாமி சிலையை பெயர்த்து எடுக்க முயன்றனர். பல மணி நேரமாகியும் சிலையை எடுக்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த கும்பல் கோவில் உண்டியலை உடைக்க முயன்றது. இதிலும் தோல்வி ஏற்பட்டது. விரக்தி அடைந்த கும்பல் கோவில் வெளியே இருந்த சிறிய அளவிலான அம்மன் சிலையை திருடி சென்றது.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிகிடந்தன. சுவாமி சிலை பீடம் உண்டியல்கள் சேதமாகியிருந்தன.

    இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருட முயன்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளி விக்கி என்ற விக்னேஷ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 4 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் காவலர் சிலம்பரசன் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கலைகுளம் தேவராஜ் மகன் தினேஷ்குமார் (25). சென்னை அறிவழகன் மகன் பாலா என்ற யுவராஜ் (22), வீரகுமார் மகன் ராஜ்குமார் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மற்றொரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவனை இரண்டு நாட்களுக்கு முன் வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரிடமும் 25 பவுன் நகை, பணம், எல்.இ.டி டிவி, டுவீலர், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி விக்கி என்ற விக்னேஷ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாராட்டினார்.
    40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அரசு இடத்தை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், மாற்று இடம் வழங்கக்கோரி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல் உள்பட 356 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஆதிதிராவிடர் பிரிவில் 3–ம் இடம் பிடித்த மானாமதுரை மாணவி யுவஸ்ரீக்கு, புதுடெல்லி டாக்டர் அம்பேத்கர் பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.40 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. குணசேகரன், மதகுபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், ஒக்கூர் மாதவன் ஆகியோர் தலைமையில் சொக்கலிங்கபுரம் கிராமமக்கள் சார்பில் மனு ஒன்று கொடுத்தனர். அதில், சொக்கலிங்கபுரம், உச்சபுளி, ஊத்துபட்டி, ஒக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் அரசு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யக்கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மிகவும் வறுமை நிலையில் உள்ள எங்களால் வேறு இடத்திற்கு மாற முடியாத நிலை உள்ளது. எனவே தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் பசுமை வீடு திட்டத்தில் நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குறைதீர்க்கும் கூட்டத்திற்கு காரைக்குடி தேரோடும் வீதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர் செங்கமலம்(வயது 63) என்பவர் வந்தார். அப்போது அவர் தன்னுடைய கணவர், மகள் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது உதவியாளர் இன்றி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறி மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார். அப்போது அங்கு வந்த அமைச்சர் பாஸ்கரன் மூதாட்டி செங்கமலத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து உதவி செய்தார்.
    தேவகோட்டை பகுதியில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பங்கள் நடந்தன. இந்த சம்பவம் காவல் துறைக்கு பெரும் சவலாக அமைந்தது.

    மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவின் பேரில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் குமரன் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், மருது, விஜய்சண்முகநாதன், தலைமை காவலர் கிருஷ்ண மூர்த்தி, காவலர்கள் பிரபாகரன், இளங்கோ, செல்வ பிரபு, எண்ணெய்துரை ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சருகணி அருகே உள்ள தாஸ்புரம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை தும்பைபட்டி சுப்பிரமணி மகன் சண்முகம் (வயது 42), பரமக்குடி பொன்னையாபுரம் ரங்கன் மகன் சிலம்பரசன் (37), அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (33), மறவமங்கலம் வேலு மகன் கோவிந்தராஜன் ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரனை நடத்தினர்.

    அப்போது தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் இளையான்குடியில் திருட்டுகளில் தொடர்புடைவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்த தங்க நகைகள் 22 பவுன், வெள்ளி கொலுசு ஒரு ஜோடி, ரொக்க பணம் 4300, திருட்டுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் மக்கள் நிம்மதி அடைந்தாலும் தேவகோட்டை நகரில் வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் தொடர்புடையவர்கள் இன்னும் பிடிபடமல் காவல் துறைக்கு சவாலாக உள்ளனர்.

    காரைக்குடியில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அரசு வங்கியில் அதே பகுதியை சேர்ந்த ஹரி ஹரசுதன் (வயது24), மணி கண்டன் (31) ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு நகைகளை அடகு வைத்தனர்.

    இவர்களின் நகைகளை வங்கி மதீப்பிட்டாளர் சுந்தரேசன் (34) ஆய்வு செய்து உண்மையான நகைகள் என கூறிய பின் வங்கி மூலம் ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் வங்கியின் முதுநிலை மேலாளர் மணிகண்டன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் வங்கியில் அடகு வைக்கபட்ட நகைகளை ஆய்வு செய்தபோது ஹரிஹரசுதன், மணிகண்டன் ஆகியோரின் நகை போலியானது என கண்டறியப்பட்டது. இதற்கு சுந்தரேசன் உடந்தையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரசுதன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். சுந்தரேசனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
    காரைக்குடியில் இன்று காலை கல்லூரி பஸ் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). விவசாய கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக காரைக்குடிக்கு வந்திருந்தார்.

    இன்று காலை அவர் காரைக்குடி கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அழகப்பாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மணவாளன்கரையை சேர்ந்த கணேசனை (29) கைது செய்தார்.

    காரைக்குடி அருகே உள்ள ஆத்தாங்குடியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (52). இவர் மொபட்டில் பள்ளத்தூருக்கு சென்றார். அப்போது ரோட்டின் குறுக்கே வந்த மாடு மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாய மடைந்த சையது முஸ்தபா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    திருப்புவனம் அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் திருப்புவனம் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2012-ம் ஆண்டு அல்லி நகரத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரிடம் வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து ரூ. 1 லட்சம் கடன் பெற்றேன்.

    அதற்கு வட்டியும் சேர்த்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் வீட்டு பத்திரத்தை கொடுக்க மறுக்கிறார்.

    இது பற்றி கேட்டபோது கூடுதலாக ரூ. 3 லட்சம் கேட்கிறார். மேலும் வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டு பத்திரத்தை மீட்டுத்தர வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி விசாரணை நடத்தி சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    ×