என் மலர்tooltip icon

    சிவகங்கை

    பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி சிவகங்கையில் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சிவகங்கை:

    புதிய ஊதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இன்று 5-வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் சிரமம் சற்று குறைந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பஸ் ஊழியர்களின்வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகளும் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வழக்கமாக மாவட்டம் முழுவதும் 315 அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் வேலை நிறுத்தத்தால் கடந்த 4 நாட்களாக 50 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. 5-வது நாளான இன்று 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

    மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்கால், தேவகோட்டை, காளையார் கோவில் ஆகிய முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. கிராமப் புற பகுதிகளில் பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இன்று காலை சிவகங்கை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் காத்திருந்ததை காண முடிந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதால் நகர்ப்புற மக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர்.

    வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 419 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் இன்று 378 பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகாலையில் குறைந்த அளவு பஸ்களே பணிமனையில் இருந்து எடுக்கப்பட்டன.

    காலை 6 மணிக்கு பிறகு அடுத்தடுத்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. 72 சதவீத போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றைய நிலையே இன்றும் நீடித்தது. அங்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமநாதபுரம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    பஸ்கள் இயங்காததால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவ- மாணவிகள் தான். வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளிக்கு புறப்பட்ட அவர்கள், பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களை தேடிச் சென்றனர். பல ஆட்டோக்கள் அதிக அளவு மாணவ, மாணவிகளை ஏற்றியபடி சென்றன. #tamilnews

    படிப்பு சரிவர வராததால் பெற்றோர் கண்டித்ததில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார்.
    மானாமதுரை:

    மானாமதுரை கண்ணார்தெருவை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகன் சந்தோஷ். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பு சரிவர வராததால் சந்தோஷ் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான். 

    இதனை அவனது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்டு சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தோஷ், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தாயார் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், மானாமதுரை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பத்தூர்:

    செங்கத்தை சேர்ந்த அயோத்தி என்பவரது மகள் நிஷாந்தி (வயது 19). திருப்பத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

    இதே கல்லூரியில் படிக்கும் திருப்பத்தூர் சதாசிவம் படையாச்சி தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் பிரசாந்த் (20). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து நிஷாந்தி அவரது கணவர் வீட்டில் தங்கினார். தம்பதி இருவரும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    நேற்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த நிஷாந்தி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அவர் பிணமாக தொங்கியதை கண்ட குடும்பத்தினர் திடுக்கிட்டனர். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணமாகி 5 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    சிவகங்கையில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை, தலைவர் சின்னச்சாமி தெருவை சேர்ந்தவர் சர்வேசுவரன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகன் ஜீவா(வயது 17). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவா சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் சரியாக படிக்கவில்லை என்று திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஜீவா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவா பரிதாபமாக இறந்து போனார்.

    இதேபோன்று சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சக்கையன். இவருடைய மனைவி சகாயராணி(30). கண்வன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பப்பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சகாயராணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராணி இறந்து போனார்.

    இந்த வெவ்வேறு சம்பவங்கள் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்று மணல், சவடு மண் அள்ளினால் புகார் செய்யலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறு, கண்மாய், மலைப் பகுதிகளில் மணல், கிராவல், சவடு மண் மற்றும் கனிம வளங்களை அரசின் அனுமதியின்றி அள்ளி எடுத்துச் செல்வதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளது.

    இது தவிர சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக ஆற்று மணல், சவடு மண், கிராவல் மற்றும் கனிம வளங்களை எடுத்துச் செல்லும் நபர் குறித்தும், வாகனங்கள் குறித்தும் அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக 86086–00100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே உள்ள டி.அதிகரை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 16). இவர் மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

    சம்பவத்தன்று பள்ளிக்கூடம் சென்று வருவதாக கூறிச் சென்ற பிரவீன்குமார், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருப்பத்தூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகேயுள்ள மாரண்டபள்ளி, பாரதி நகர் பகுதியை சேர்ந்த 110 பக்தர்கள் 2 தனியார் பஸ்கள் மூலம் வீரபள்ளி கிராமத்தில் இருந்து மேல் மருவத்தூருக்கு இன்று காலை சென்றனர்.

    ஆரணியை சேர்ந்த ரவி என்பவர் பஸ்சை ஓட்டினார். வீரபள்ளியில் இருந்து 10 அடி தூரம் பஸ் சென்றபோது குறுகிய சாலையின் இடது புறமாக உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி கிராம மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 13 பெண் பக்தர்களும், 10 ஆண் பக்தர்கள் மற்றும் பஸ் டிரைவர் ரவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மற்றொரு சம்பவத்தில் தேசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று அதிகாலை அரசு டவுன் பஸ் செய்யாறு புறப்பட்டது. பஸ் தவசி என்ற பகுதியில் சென்ற போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.

    அதிர்ஷ்ட வசமாக பஸ்சில் இருந்த பயணிகள் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டனர் மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர். #tamilnews

    தேவகோட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ஆண்டவர் செட் அருகே தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் காளிமுத்து மற்றும் ஊழியர்கள் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

    இன்று காலை கடையை திறக்க முயன்றபோது ‌ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே போய் பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ. 16 ஆயிரம் மற்றும் 15 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இந்த கடைக்கு 100 அடி தூரத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையிலும் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இது குறித்து எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கண்ணன், டிபார்ட்மெண் டல் கடை உரிமையாளர் காளிமுத்து ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேற்கண்ட 2 கடைகளும் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. இது திருடர்களுக்கு சாதகமாக உள்ளது.

    ஏற்கனவே தேவகோட்டை பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தவர்கள் தற்போது வணிக நிறுவனங்களிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர் மறுத்ததால் 7-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகள் அபினயா (வயது13). இவர் மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சக்கிமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அபினயா கூறினார். அதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் அபினயா விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் அபினயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபினயா பரிதாபமாக இறந்தார்.

    பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சிவகங்கை அருகே டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகரில் உள்ள செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 45). இவரது மகன் பாலமுத்து (26), என்ஜினீயரிங் பட்டதாரி.

    நேற்று காளீஸ்வரி, பாலமுத்துவுடன் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு சென்றார். பின்னர் இரவு அங்கிருந்து தாய்-மகனும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது காளீஸ்வரி தனது 2 வயதுடைய பேரன் அர்சித்தையும் அழைத்து வந்தார்.

    ஓக்கூர் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலமுத்து, காளீஸ்வரி, அர்சித் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாலமுத்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட கலெக்டர் லதா, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளீஸ்வரி, குழந்தை அர்சித் ஆகியோரை மீட்டு அரசு வாகனத்திலேயே சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கலெக்டர் லதா உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்.கே.நகர் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் 6 மாதங்களுக்கு முன்பே பிரசாரம் செய்து மக்கள் மனதை மாற்றிவிட்டார்.

    தினகரன் ஒருமாயமான் அவரை நம்பி ஏமாற வேண்டாம் என துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் ஜெயலலிதாவின் கோட்டை அங்குள்ள மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

    திருப்பத்தூர் பாதாள சாக்கடை திட்டபணிகள், ஜோலார்பேட்டை மேம்பால பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏலகிரி மலையில் புதிய டிரான்ஸ்பாரம் அமைக்கப்படும், ஏலகிரி மலையில் தடுப்பனைகள் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காளையார்கோவிலில் கடையை உடைத்து ரூ. 3 லட்சம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    காளையார் கோவிலை சேர்ந்தவர் தேவி. இவர் அதே பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு தேவி வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் கதவை உடைத்தனர்.

    பின்னர் உள்ளே இருந்த பலசரக்கு சாமான்கள், பிரிட்ஜ், கிகெரட், பீடி, பண்டல்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

    கொள்ளை குறித்து காளையார்கோவில் போலீசில் தேவி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே பீதியடைந்து உள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கையை மேற் கொண்டு சமூகவிரோதிகளை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×