என் மலர்
சிவகங்கை
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் காளைவிடும் விழா நடந்தது. இதில் திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, மிட்டூர், வாணியம்பாடி, பர்கூர், ஊத்தங்கரை, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளை விடும்விழாவை திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் முட்டியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் கவுதம்பேட்டையை சேர்ந்த முத்துக்குமரன் மகன் சங்கர் (வயது39) துள்ளி வந்த மாடுகளை முதுகில் தட்டி கொடுக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர், ஆலங்காயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபின் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்ற இளைஞர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது சில காளைகள் சீறிப்பாய்ந்து பலரை முட்டி தள்ளியது. இதில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் நிம்மியம்பட்டு, பெரிய ஏரியூர், செஞ்சி, கம்மவான்பேட்டையிலும் நேற்று மாடுவிடும் விழா நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் நடந்த மாடு விழாவில் காளைகள் முட்டி 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தைப்பூசத்திற்கு செட்டிநாடு என்று சொல்லப்படும் தேவகோட்டையில் இருந்து சுமார் 150 வருடங்களுக்கு முன்பு பழனி முருகனை காண பாதயாத்திரையாக நகரத்தார்கள் செல்வார்கள்.
கார்த்திகை மாதம் முதல் விரதம் இருந்து முருகனை வேண்டி ஓவ்வொரு நாளும் பஜனை நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தேவகோட்டையில் உள்ள பத்தர்கள் தமிழகத்தில் பல இடங்களில் வசித்து வந்தாலும் விரதம் இருந்து தங்களின் பூர்வீக வீடுகளில் இருந்து காவடி தூக்கி பாதயாத்திரை செல்கிறார்கள்.
நேற்று காலை காவடிகள் நகர சிவன்கோவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. வழிநெடுகிலும் ஓவ்வொரு வீடுகளின் முன்பு வாசலில் கோலம் போட்டு காவடிகளை வணங்கினார்கள். பின்பு இரவு சிலம்பனி விநாயகர் கோவிலில் தங்கி இன்று காலை காவடிகள் குன்றக்குடியை நோக்கி புறப்பட்டு சென்றது.
அதே போல திருவாடனை, தொண்டி, கரூர், கண்ணங்குடி, பெரியகாரை, சருகணி, ஆனந்தூர், தேவகோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து சமூகத்தினரும் 5 ஆயிரத்துக்கும் மேற்டோர் பாதயாத்திரையாக சென்றனர்.
இன்று இரவு சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட பத்தர்கள் குன்றக்குடியில் ஒன்று சேர்ந்து 6 நாட்கள் பயணம் செல்வார்கள். ஒவ்வொரு நாள் இரவு தங்கும் ஊர்களில் காவடி பூஜையும், வேல் பூஜையும் நடைபெறும்.
பழனி தண்டாயுதபாணியை வேண்டி பாதயாத்திரை சென்றால் புத்தியில் தெளிவும் மனதில் குழப்பம் இல்லாத நிலை உண்டாகும் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் செல்லுகிறோம் என்று யாத்திரிகர்கள் கூறினார்கள்.
சிவகங்கை:
தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு வேலைக்கு வருவோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு நாளைக்கு பஸ் கட்டண மாக 100 ரூபாய் ஆகிறது.
எனவே பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாப்பன்குளம், திருப்பாச் சேத்தி, மடப்புரம், பூவந்தி, இடைக்காட்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மற்றும் சிவகங்கை நகர்களுக்கு சென்று வருகின்றனர்.
பஸ் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்த பாப்பன் குளம் கிராம மக்கள் இன்று காலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (35). இவர்களது பூர்வீக வீடு, காரைக்குடி ரஸ்தா அருகே உள்ள சங்காராபுரத்தில் உள்ளது. நேற்று கணவன்- மனைவி இருவரும் அங்கு சென்றுவிட்டு, மொபட்டில் நாச்சியாபுரம் புறப்பட்டனர்.
ரஸ்தா- மானகரி சாலையில் வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த விறகு பாரம் ஏற்றிய லாரியை ஆறுமுகம் சரியாக கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த மொபட் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த சிந்தாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆறுமுகம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவயல் அருகே உள்ள வேதியங்குடியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசனை கைது செய்தனர். #tamilnews
ராமநாதபுரம்:
ஹஜ் பயணம் மேற் கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர் தலைவர் கோபி வரவேற்றார்.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணகாந்தி ராஜசேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் பாரிராஜன், சிறுபான்மை பிரிவு நிஜாம்அலிகான், துல்கீப், ஹாஜா, முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், சிறப்பு அழைப்பாளர்கள் முத்துராமலிங்கம், ரமேஷ் பாபு, மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்பிரிவு அன்புச் செழியன், இலக்கிய அணி தலைவர் முருகேசன், செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம் மற்றும் வட்டாரத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் காங்கிரஸ் மாவட்ட சிறு பான்மை பிரிவின் சார்பில் மாவட்டத்தலைவர் சையது இபுராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ சேகரன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு தலைவர் அரசு, நகர்தலைவர் பிரபாகரன், மகளிரணி வித்யா, நிர்வாகிகள் அல்அமின், கணேசன் உள்பட பலர் பேசினர்.
வாடிப்பட்டி, தாதம்பட்டி மந்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர்கள் குரு, ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இதில் கொடிமுத்து, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் நகரதலைவர் கனகராஜ் நன்றி கூறினார். #tamilnews
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டை சேர்ந்தவர் கண் டாக்டர் சாமுவேல் சந்திரசேகர். இவர் அதே பகுதியில் கண் கிளினிக் நடத்தி வருகிறார்.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் சென்றார்.
கிளினிக் ஊழியர்கள் நேற்று காலை டாக்டர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
உள்ளே இருந்த கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமிரா மீது கருப்புத் துணி போர்த்தப்பட்டிருந்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், திருப்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அதில் கண் டாக்டர் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து அங்கு பீரோவை உடைத்துள்ளனர்.
அதிலிருந்த ரூ.25 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர். மேலும் அங்கிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். டாக்டர் வீட்டில் நுழைந்ததும் மர்ம நபர்கள் வீட்டு முன்பு இருந்த கேமராவை கருப்பு துணியால் மூடியுள்ளனர். கருப்பு துணியில் மூடும் நபர் கேமராவில் பதிவாகியுள்ளார்.
மேலும் வீட்டில் கொள்ளையடிக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளனர் அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு ரோட்டைச் சேர்ந்தவர் முத்துமாரி. சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 3¾ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
காளையார் கோவில் அருகே உள்ள ஆண்டிச்சி ஊரணியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். சம்பவத்தன்று இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து 2½ பவுன் நகையை திருடினார். அப்போது வீட்டுக்குள் வந்த செல்வமுருகன் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து காளையார்கோவில் போலீசில் ஒப்படைத்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரணை நடத்தியதில் நகையை திருடியது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அருண் அலெக்ஸ் (வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைதான அருண் அலெக்ஸ் இளையான் குடியில் தனியார் செங்கல் சூலையில் வேலை பார்த்து வருகிறார். #tamilnews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியாண்டி. இவரது மகள் சுதா (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ள இவர் சில மாதங்களாக தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வெளியே சென்ற சுதா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். பலன் இல்லை.
இது குறித்து பெரியாண்டி இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை பரமக்குடியைச் சேர்ந்த விணுச் சக்கரவர்த்தி (22) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, புலியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல அமைப்பு தலைவராக இருந்து வருகிறார். ஏற்கனவே இவருக்கு சிலர் மிரட்டல் விடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று பாலமுருகன் வீட்டு முன்பு போலீஸ்காரர் சத்தியமூர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பாலமுருகன் வெளியூர் சென்று விட்டதால் அவரது மனைவி அழகுசாரதி, தந்தை சண்முகம், சகோதரர் ஆனந்தவேலு, அவரது மனைவி சுபா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் பயங்கர சத்தம் கேட்டது. உடனே போலீஸ்காரர் சத்தியமூர்த்தி மற்றும் பாலமுருகனின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அங்கு பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் பாலமுருகனின் வீட்டுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சிதறிக் கிடந்த பெட்ரோல் குண்டுகளின் சிதறல்களை போலீசார் சேகரித்தனர். எரிந்து சேதம் அடைந்த மோட்டார் சைக்கிளையும் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். #TamilNews
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நாட்டசரன் கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் ரஞ்சித் (வயது 21), பாஸ்கரன் மகன் பிரபு (20), மூர்த்தி மகன் அஜித் (22), இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காளையார்கோவிலில் இருந்து நாட்டசரன்கோட்டைக்கு வந்து கொண்டி ருந்தனர். அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
உடனே அஜித், ரஞ்சித், பிரபு ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பலியானார்.
பலியான அஜித் முத்துப்பட்டியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். படுகாயம் அடைந்த மேலும் 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக பேசியதாக கூறி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
இதையொட்டி காரைக்குடியில் உள்ள எச். ராஜா வீட்டின் அருகில் இன்று, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் எச். ராஜா வீட்டில் 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. வினர் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் எச். ராஜா வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர். வீடு அருகில் வந்ததும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதில் சிலர், போலீஸ் தடுப்பையும் மீறி எச். ராஜா வீட்டை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #TamilNews






