search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devote"

    திருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.

    திருமலை:

    திருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    திடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.

    பஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

    திருப்பதியில் சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக கூறி 400 பக்தர்களை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    குண்டூர் மாவட்டம் வெங்கலபள்ளியை சேர்ந்த கார்த்திக் திருப்பதியில் தங்கி சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.

    ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்ற பக்தர் கடந்த 1-ந் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்டு சுப்ரபாத டிக்கெட் வேண்டும் என கேட்டிருந்தார். சீனிவாசராவிடம் தன்னுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கார்த்திக் கூறினார்.

    இதையடுத்து கார்த்திக்கின் வங்கிக்கணக்கில் சீனிவாசராவ் 5 ஆயிரத்து 300 ரூபாயை செலுத்தினார்.

    ஆனால் திருமலைக்கு சீனிவாசராவ் வந்தபோது சுப்ரபாத சேவை டிக்கெட் வாங்கி கொடுக்காமல் கார்த்திக் ஏமாற்றிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசராவ் திருமலையில் உள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ராமகிருஷ்ணாவிடம் கார்த்திக்கின் மோசடி குறித்து புகார் அளித்தார். திருமலை 2-வது நகர போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

    ஏ.எஸ்.பி. மகேஸ்வரராஜி, டி.எஸ்.பி. சிவராம ரெட்டி, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் கார்த்திக்கின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    கார்த்திக் குண்டூர், தெனாலி, ஏலூர் ஆகிய இடங்களில் நடமாடியது தெரியவந்தது. சப்-இன்ஸ்பெக்டர் தர்மாரெட்டி தலைமையில் போலீசார் கார்த்திக்கை தெனாலியில் கைது செய்து திருமலைக்கு அழைத்து வந்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் திருமலையில் உள்ள மடங்கள் மற்றும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு 400க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

    கார்த்திக்கின் பின்னணியில் வேறு யார், உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. #Tirupati #TirupatiTemple

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி பிரசித்திப் பெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்குள்ள விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22½ கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 22-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று 6-வது நாளாக யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 4 புனித நீர் குடங்கள் திருப்பதி குடைகள் புடைசூழ மேளதாளங்களுடன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சரியாக காலை 7.15 மணிக்கு இங்குள்ள மூலவர் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

     


     

    அதை தொடர்ந்து 7½ அடி உயரமுள்ள ஏழுமலையான், 3½ அடி உயரமுள்ள பத்மாவதி தாயார், 3½ அடி உயரமுள்ள ஆண்டாள் அம்மாள் ஆகிய 3 சன்னதிகளிலும் விசே‌ஷ அபிஷேகங்கள் நடந்தது.

    பால், பன்னீர், எண்ணை போன்ற பொருட்களை பயன்படுத்தி இந்த அபிஷேகங்கள் நடந்தது. கருடாவாழ்வார் சன்னதியிலும் அபிஷேகங்கள் நடந்தது. மேலும் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

    திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

     


     

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மூலவர் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பகல் 12.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் மற்றும் புளியோதரை, பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெறுகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு இதே விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்துதான் தற்போது கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்துள்ளது. #Tirupati #TirupatiTemple

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது இருதரப்பு கருத்திலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #Sabarimala #RahulGandhi

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை.

    இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் இருப்பது கோவில் ஆச்சாரம். அதை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்களும், பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகளும் கூறி வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்தார். அதே நேரம் கேரள மாநில காங்கிரசார் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இத்தீர்ப்பு தொடர்பாக கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டத்திலும் பங்கேற்றனர். கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக துபாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வாழும் கேரள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையும், எதிர்ப்பான கருத்தையும் அறிந்து கொண்டேன். இரு தரப்பினரும் கூறுவதில் நியாயம் இருக்கிறது.

    ஒரு பிரிவினர் கோவிலின் ஆச்சாரத்தை ஒரு போதும் மீறக்கூடாது என்கிறார்கள். இன்னொரு பிரிவினர் அனைத்து வயது பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    பெண்களுக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் கோவிலின் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்பதிலும் நியாயம் இருக் கிறது.

    எனவே இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பமான சூழ்நிலையே நிலவுகிறது. என்ன நேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களின் உணர்வுகளுக்கு, விருப்பத்திற்கு மாறாக செயல்படாது. மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதன்படி தான் செயல்பட வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #RahulGandhi

    ஒட்டன்சத்திரம் அருகே வருகிற 19-ந்தேதி பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அண்ணாமலையார் ஆன்மிக குழு ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை:

    அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கிய தினமான தைப்பூசம் திருவிழா வருகிற 21-ந்தேதி முருகன் தலங்களில் கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகத்தில் உள்ள முருகன் தலங்களில் தைப்பூசம் விழா பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும்.

    தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் தைப்பூசத்தை முன்னிட்டு விரதம் இருந்து காவடியை சுமந்தபடி பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்டுக்கு ஆண்டு பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    அப்படி செல்லும் பக்தர்களின் பசியை போக்குவதற்காக வழிநெடுக ஏராளமானோர் குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பழ வகைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது உண்டு. சில அமைப்புகள் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்குகிறார்கள்.

    சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு கடந்த 8 ஆண்டுகளாக பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது 9-வது ஆண்டாக அன்னதானம் வழங்க அந்த குழுவினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே உள்ள எல்.என். திருமண மண்டபத்தில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக அந்த திருமண மண்டபத்தில் “பழனி முருகன் அன்னதான குடில்” அமைக்கப்பட்டுள்ளது.

    அங்கு 18-ந்தேதி மாலை பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடு ஆகியவற்றுடன் அன்னதானம் தொடங்குகிறது.

    19-ந்தேதி காலை 9 மணிக்கு மகாசக்தி பூஜை, வேல் பூஜை, வேல்மாறல் பாராயணம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி வரை பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் 12 மணியில் இருந்து பக்தர்களுக்கு வாழை இலையில் அன்னதானம் வழங்கப்படும்.

    அன்னதான குடில் பகுதியில் பக்தர்களுக்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அன்னதான சேவையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பொருள் உதவி, நிதி உதவி செய்யலாம் என்று அண்ணாமலையார் ஆன்மிக குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நிதி உதவி செய்ய இயலாத பக்தர்கள் அன்னதான சேவையில் பங்கேற்று தங்களால் முடிந்த பணிகளை செய்யலாம். இந்த சேவையில் விருப்பம் உள்ள பக்தர்கள் 99443 09719, 98421 98889 எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்.

    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
    இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்

    aadi amavasai today pitru tharpanam

    aadi amavasai, pitru tharpanam, amavasai, ஆடி அமாவாசை, தர்ப்பணம், அமாவாசை,


    இன்று ஆடி அமாவாசை தினம் ஆகும். இதையொட்டி காவிரி ஆறு பாயும் இடங்களில் எல்லாம் முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்தனர்.



    இதற்காக மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.

    ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் பஸ் மற்றும் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வந்து குவிந்தனர்.

    தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரியில் வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பாக நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    ஆற்றுக்குள் அதிக தூரத்துக்கு மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் ஓரமாக தொட்டியும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் நீராடினர். சிலர் தடுப்பு வேலிக்குள் நின்று ஆற்றில் நீராடினர்.

    பின்னர் தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி என முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பிறகு அவர்கள் திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    கன்னி பெண்களும் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து காவிரியில் நீராடி தங்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமைய வேண்டும். தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வழிபட்டனர்.


    ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் குளித்து தர்ப்பணம் செய்வதற்காக குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.


    ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி விவசாயம் செழிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகள் பலரும் வந்த காவிரி நீராடி வழிபட்டனர்.

    ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பவானி ஆற்றங்கரை முழுவதும் இன்று மக்கள் கூட்டமாக தென்பட்டது. வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டிருந்தது. கோவிலின் முன்பும் பின் புறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் பொதுமக்களிடம் தங்கள் உடமைகளையும், தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி மைக்கில் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய் தபடி இருந்தனர். தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள். #temple

    ஈரோடு:

    ஆடி மாதம் என்றலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விஷேச பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து அம்மனை பக்தர்கள் வழி படுவார்கள்.

    வழக்கமாக வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பெண் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு அதிகமாக வருவார்கள். இன்று ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் அன்னதானம், கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல காட்சி அளித்தது. மேலும் கோவிலில் விளக்கு பூஜையும் நடந்தது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.

    இதே போல பண்ணாரியம்மன் கோவில், கோபி அடுத்த பாரியூர் அம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், நடு மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், வீரப்பன் சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், ஓங்காளியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், ராஜாஜி புரம் மாகாளியம்மன், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரானமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். #temple

    ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகின்ற ஆடி 26-ந் தேதி (11.8.18) அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள்.

    விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும் வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து திருப்பதி கோவிலுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. #Tirupati #GSTTAX
    திருமலை:

    திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.

    இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.

    இதனால் திருப்பதியில் தங்கும் விடுதி, திருமண மண்டபத்திற்குரிய கட்டணம் மற்றும் தங்க டாலர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் லட்டு, வடை விலையும் அதிகரித்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.


    இந்த நிலையில் பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற் கோவிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பக்தர்களுக்கு இலவசமாக ரொட்டி வழங்கப்படுகிறது. இதனை காரணம் காட்டி மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து பொற்கோவிலுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

    இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

    இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tirupati #TirupatiTemple #GST #GSTTAX #Food
    ×