என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvannamalai temple"
- ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார்.
- வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.
ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி, தனது பரிவாரங்களுடன் திருவில்லிபுத்தூர் வந்து கொண்டிருந்தார். அப்போது இந்த தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து திருப்பதிக்கு திரும்ப முடிவு செய்தார், வெங்கடாசலபதி. எனினும் ஆண்டாள் அவரை தடுத்து, இத்தலத்தில் தங்கி தனக்கும், இங்குள்ள மக்களுக்கும் அருள்பாலிக்குமாறு வேண்டிக் கொண்டாள்.
ஆண்டாளின் வேண்டுக்கோளை ஏற்று, இந்த மலையின் உச்சியிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார், வெங்கடாசலபதி.
திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர். ஆதலால் இந்த தலத்தை 'தென்திருப்பதி' எனவும் பக்தர்கள் அழைப்பர்.
மலையின் மேல் உள்ள பெருமாள் சன்னிதியை அடைய 150-க்கும் மேற்பட்ட படிகளை ஏறி செல்ல வேண்டும். இங்குள்ள பெருமாள் ஒன்பதடி உயர திருமேனியுடன் அற்புதமாக காட்சி தருகிறார். திருப்பதியில் இருப்பது போன்றே நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தில் கருடாழ்வார், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகியோர் உள்பட பல்வேறு சன்னிதிகள் இங்குள்ளன. மலை அடிவாரத்தில் தாமரை மலர்கள் நிறைந்த 'கோனேரி தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்தத்தில் குளித்தால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
வழக்கில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் சக்தி இந்த பெருமாளுக்கு உண்டு என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆதலால் வழக்கில் ஏதேனும் செல்வத்தை இழக்கும் சூழ்நிலை வந்தால் பக்தர்கள் இந்த குன்றின் மேல் உள்ள பெருமாளை மனமுருக வேண்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல்களும் உடனே நிறைவேறி விடும். திருப்பதியை போல பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்க இங்கு வருகின்றனர். இந்த கோவிலில் கோ தானம் செய்வது சிறப்பு.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் முதல் விளைப்பொருட்களான நெல், பருத்தி, மிளகாய் மற்றும் பயறு வகைகளை சீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துவர். இந்த கோவிலில் உள்ள பெருமாளை வேண்டினால் சகல பாக்கியங்களையும் தந்து வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நிகழ்ச்சி நடக்கும். சாதி, மதம் பேதமின்றி அனைவருக்கும் இந்த பெருமாள் குல தெய்வமாக விளங்குகிறார்.
இந்த கோவில் நடை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கும். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.
- ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.
- கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்கள் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.
ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.
இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம்,
வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோவில் மற்றும்
திருவண்ணாமலை கோவில்களில் பத்து நாட்களும்,
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.
ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும்.
இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால்,
அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில்
குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
- அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.
அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.
முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.
கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
- மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.
- மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வ.உ.சி.நகரில் வசித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மகாதீபத்தின்போது மலைக்கு செல்லும் 2,500 பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், மலையேறும் முக்கிய பாதைகளான கந்தாஸ்ரமம் பாதை, முலைப்பால் தீர்த்த பாதை, அரைமலை பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிக்கிறது.
மலையேறும் அனைத்துப் பாதைகளும் மண் சரிந்து உள்ளது. ஆபத்தான சூழலில் 200 மற்றும் 300 டன் எடை கொண்ட பாறைகள் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. குறிப்பாக மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றும் சமயத்தில் மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினரின் கோரிக்கை வைத்துள்ளனர்.
புவியியல் வல்லுனர்கள் அண்ணாமலையார் மலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்த பின்னர் கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் மலையேறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தின்போது மலைஏற அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது.
- லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள் எண்ணற்றவை இருந்தாலும், அதில் முதன்மையானதாக, பழம் பெருமை கொண்டதாக இருப்பது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில்.
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுதான், அதற்கான அடிப்படையாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் தன்னை ஒரு தீப வடிவமாக மாற்றி, விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது அடி முடியில் ஒன்றை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அடியைத் தேடி வராக (பன்றி) வடிவம் எடுத்து விஷ்ணுவும், முடியைத் தேடி அன்னப் பறவை உருவம் கொண்டு பிரம்மனும் புறப்பட்டனர். பல நூறு ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, அவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடியையோ, முடியையோ காண முடியவில்லை.

இதனால் தான் ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி' என்று அழைக்கிறோம். இறுதியில் இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு ஜோதி வடிவில் அருட்காட்சி வழங்கியதுபோல, அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டினர்.
மேற்கண்ட நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்படும்.
ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம், பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது.
அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்.

விரதம் இருக்கும் முறை
கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன்தினமான பரணி நட்சத்திரம் அன்று, பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனை வழிபட்ட தண்ணீர் மட்டும் பருக வேண்டும்.
அன்று முழுவதும் உணவைத் தவிர்த்து இரவு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருபவர்களுக்கு, மறுபிறப்பு இல்லை. சந்ததியினர் பெரும் புகழோடு வாழ்வர் என்பது ஐதீகம்.

விளக்குகளின் வகைகள்
பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும்.
கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் அல்லாது, அனைத்து நாட்களிலுமே, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், மாலையில் சூாியன் மறைவதற்கு முன்பாகவும், வீட்டில் வாசல் தெளித்து கோலமிட்டு, பூஜை அறையிலும், வீட்டின் வாசல் படியிலும் விளக்கு ஏற்றலாம். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து, வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #Thiruvannamalaitemple






