என் மலர்
செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை: கலெக்டர் தகவல்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகின்ற ஆடி 26-ந் தேதி (11.8.18) அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள்.
விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படும் வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும்.
எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப் பைகளை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.