search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கேசி வீரமணி"

    அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும், அவரது உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு நேற்று காலை 9 மணிக்கு திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர்.

    டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த சோதனை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இரவு 10.30 மணிவரை சோதனை நடைபெற்றது. சத்தியமூர்த்தி வீட்டில் 2 மஞ்சள் நிற பைகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.

    மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

    அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. நகை பணம் எதுவும் சிக்கவில்லை. இது குறித்து தகவல்களை வருமான வரிதுறையினர் தெரிவிக்க மறுத்தனர்.

    காட்பாடி காந்திநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி ரெட்டி. கோபாலகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 2 பேரும் ஒன்றாக ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வீடுகளில் நேற்று காலை 6.30 மணி முதல் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

    காட்பாடி பாரதிநகரில் உள்ள ராமமூர்த்தி ரெட்டியின் தம்பி மோகன்ரெட்டி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது.

    வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போல குடியாத்தம் அருகே உள்ள கே.வி.குப்பத்தில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான வி.டி.சிவக்குமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து வருமான வரித்துறையினர் வி.டி.சிவக்குமாரை அழைத்துக்கொண்டு, அவர் வங்கி கணக்கு வைத்துள்ள கே.வி.குப்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரூ. 300 கோடி மதிப்புள்ள 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் நிலப்பிரச்சனையில் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது அந்த நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் தொடர்புடைய அனைவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த நிலப்பிரச்சனை தொடர்பான இந்த திடீர் சோதனை சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.

    இதில் மத்திய வருமான வரி துறையினர் களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
    வேலூர்:

    வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
    வேலூர் மாவட்டத்தில் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கேசி வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சியில் கால் நடைத்துறையின் சார்பில் 240 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளையும், தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 208 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், கூட்டுறவுத் துறையின் மூலம் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 3 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

    தமிழகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், மகளிர் தன்னம்தனியாக பொருளாதாரத்தை பெற்றிட கடனுதவிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றாம்பள்ளி பகுதிகள் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக கண்டறிப்பட்டு மாவட்டத்தில் கணியம் பாடியில் செயல்படுத்தப்பட்ட உறைகிணறு நமது பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மேட்டூர் குடிநீர் இல்லா கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் கேட்காமலே செய்து கொடுத்து வருகிறது. இவற்றை எல்லாம் பெற்று பயன்படுத்திக் கொண்டு என்றென்றும் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் முகமை பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மண்டல கால்நடை இணை இயக்குநர் சாந்தகுமாரி, துணைபதிவாளர் முனிராஜ், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தாமலேரி முத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் ரமேஷ், உதவி இயக்குநர் கால்நடை ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சிவா, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேலூரில் சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தோம். 2010-ம் ஆண்டு இந்த நிலத்தை சேகர் ரெட்டி உள்ளிட்டோர் வாங்கினர். அந்த நிலத்தை ரூ.225 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தனர். அந்த நிலத்தை மேம்படுத்தியதற்காக ரூ.65 கோடி எங்களுக்கு வழங்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    ஆனால், பேசியபடி அந்த தொகையை வழங்காமல், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியுடன், சட்டவிரோதமாக எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதற்காக அமைச்சர் வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால், எங்களை மிரட்டுகின்றனர்.

    இதுகுறித்து சட்டசபை செயலாளர், அரசு கொறடா, தமிழக டி.ஜிபி., ஆகியோரிடம் அமைச்சர் உள்ளிட்டோர் குறித்து புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, நாங்கள் கொடுத்த புகாரை, முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க சட்டப்பேரவை செயலாளர், அரசு கொறடா ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். அந்த புகாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்ற முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி விசாரித்தார். பின்னர், மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். #MinisterKCVeeramani
    வேலூரில் நடந்த தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி ‘எம்.ஜி.ஆரின் நாளை நமதே’ பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி அசத்தினார். #KCVeeramani #ADMK
    வேலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நேற்று நடந்தது.



    பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் கே.சி. வீரமணி தொண்டர்களை பார்த்து கை அசைத்தப்படி, ‘‘நாளை நமதே, இந்த நாளும் நமதே... தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே... நாளை நமதே, எந்த நாளும் நமதே! தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்று பாடல் பாடினார்.

    அமைச்சரின் பாடலை கேட்டு தொண்டர்கள் வியந்துபோய் ஆரவாரம் செய்தனர். அமைச்சர் வீரமணி பாடல் பாடிய வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #KCVeeramani #ADMK




    டாஸ்மாக் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Tasmac #Teacher

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் மதுபானம் குடித்து விட்டு போதையில் தள்ளாடிய படி வந்து ரகளையில் ஈடுபட்டார்.

    அவரை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்ற முயன்றனர். போதையில் இருந்த முதியவரை விடுமாறு போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியபோது ‘‘டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது.

     


    அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும்’’ என்றார்.

    அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களிடம் முதலில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு சலசலப்பை உண்டாக்கியது.

    ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் மதுகுடிக்க ஊக்குவிப்பதை போல் அமைச்சர் வீரமணி பேச்சு அமைந்திருந்தாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    டாஸ்மாக் வருமானத்தில் சம்பளமா? என்று நினைக்கும் போது வேதனையளிப்பதாக ஆசிரியர்களும், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சு விவாத பொருளாகவும் மாறியுள்ளது.

    ×