என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு
    X

    சிவகங்கையில் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு

    பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி சிவகங்கையில் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    சிவகங்கை:

    புதிய ஊதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து இன்று 5-வது நாளாக அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் சிரமம் சற்று குறைந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் பஸ் ஊழியர்களின்வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகளும் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    வழக்கமாக மாவட்டம் முழுவதும் 315 அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் வேலை நிறுத்தத்தால் கடந்த 4 நாட்களாக 50 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. 5-வது நாளான இன்று 35 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

    மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்கால், தேவகோட்டை, காளையார் கோவில் ஆகிய முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. கிராமப் புற பகுதிகளில் பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இன்று காலை சிவகங்கை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் காத்திருந்ததை காண முடிந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதால் நகர்ப்புற மக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர்.

    வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 419 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் இன்று 378 பஸ்கள் இயக்கப்பட்டன. அதிகாலையில் குறைந்த அளவு பஸ்களே பணிமனையில் இருந்து எடுக்கப்பட்டன.

    காலை 6 மணிக்கு பிறகு அடுத்தடுத்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. 72 சதவீத போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றைய நிலையே இன்றும் நீடித்தது. அங்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டாலும் அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமநாதபுரம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    பஸ்கள் இயங்காததால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவ- மாணவிகள் தான். வாரத்தின் முதல் நாளான இன்று பள்ளிக்கு புறப்பட்ட அவர்கள், பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களை தேடிச் சென்றனர். பல ஆட்டோக்கள் அதிக அளவு மாணவ, மாணவிகளை ஏற்றியபடி சென்றன. #tamilnews

    Next Story
    ×