search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மரணம்"

    • சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டிற்கு சென்ற சங்கர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகள்களுடன் குஞ்சார்வலசையில் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக வேதாளை அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் பணிகள் உதவிக்காக ஊராட்சி மன்றம் சார்பில் சாந்தி தன்னார்வலராக நியமிக்கப்பட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையம் ஒன்றில் பணி செய்து வந்தார்.

    இந்நிலையில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிவடைய இருந்த நிலையில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக அதே பள்ளியில் உள்ள மற்றொரு வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு அறைக்கு வெளியே வந்தபோது சாந்தி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மருத்துவர்கள் சாந்தியை பரிசோதனை செய்து பார்த்தபோது சாந்தி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை கைப்பற்றிய மண்டபம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    கணவரை இழந்து தனியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து உயிரிழந்ததால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்கி வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமியார், மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர்.
    • மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், யாதகிரி குட்டா அடுத்த கொல்ல குடிசேவையை சேர்ந்தவர் பாரதம்மா (வயது 65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இளைய மகனின் மனைவி மங்கம்மா (26). மாமியார் மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர். நேற்று அதிகாலை பாரதம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

    மாமியாரின் உடலைப் பார்த்து மருமகள் மங்கம்மா கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் மங்கம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே மங்கம்மா பரிதாபமாக இறந்தார்.

    மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வழக்கமாக மாமியார், மருமகள் சண்டையிட்டு அடித்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மாமியார் மருமகள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள பெருமாம்பட்டி, கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 25). வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள். நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலையை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அன்று இரவு மணிமேகலைக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று இரவு திடீரென இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் கூடியதால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் இறந்ததை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    இது குறித்து உறவினர்கள் கூறும் போது, பயற்சி டாக்டர் மூலம் மணிமேகலைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால்தான் இறந்து போனார். மேலும் அறுவை சிகிச்சை செய்தது முதல் மணிமேகலையை பார்க்க டாக்டர்கள், ஊழியர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டபோதே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கின்றோம் என்று கூறியும் டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    தொடர்ந்து இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து கம்யூனிட்டு கட்சியினர் உறவினர்களை அழைத்து சென்று இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து சண்முகம் கூறுகையில் நல்ல நிலையில் இருந்த பெண் திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை நல்ல முறையில் பிறந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே பெண் உயிர் இழந்து உள்ளார். எனவே மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் இறப்பிற்கு உரிய நீதி வேண்டும் என்றார்.

    • குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கிழக்கு பெங்களூரு கண்ணமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார். இவரது மனைவி குஷ்பு ஆசிஷ்திரிவேதி (32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்கள் தொட்டபன ஹள்ளி என்ற பகுதியில் உள்ள 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 5-வது தளத்தில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் குஷ்பு ஆசிஷ்திரிவேதி மற்றும் அவரது வீட்டு பணியாளர் ஆகியோர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். குஷ்பு ஆசிஷ்திரிவேதி ஜன்னலை திறந்து வைத்து மர ரேக் மீது ஏறி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். வீட்டு பணியாளர் வீட்டுக்குள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது மர ரேக் திடீரென வழுக்கி ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்த குஷ்பு ஆசிஷ்திரிவேதி 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் மாமியார் குஷ்பு ஆசிஷ்திரிவேதியை மீட்டு சீகேஹள்ளியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குஷ்பு ஆசிஷ்திரிவேதி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 தளங்களில் மொத்தம் 750 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    • கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போரூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போரூர், குன்றத்தூர் சாலையில் உள்ள ஏரியில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மீட்கப்பட்டது பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த கலாவதி (வயது37) என்பது தெரிந்தது.

    திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் சண்முகம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது கலாவதியும் தற்கொலை செய்து உள்ளார்.

    • கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
    • கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரன். மீனவரான இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35).

    அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கலைச்செல்வி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லை. கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

    இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஏழுமலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும், சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து சுருண்டு கீழே விழுந்தார்.

    போலீசார் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

    கலைச்செல்வி தீக்குளித்த போது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கி விட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரி இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    பெண் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு, திருமணமாகாத 35 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பெண்ணின் மகள்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது வாலிபர் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் பெண் தனது கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார்.

    மாலையில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் இருந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் கதறி அழுதார்.

    அப்போது வெளியே சென்று இருந்த பெண்ணின் மகள்கள் வீட்டிற்கு திரும்பினர். அவர்கள் தனது தாய் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சிய டைந்தனர். மேலும் அவரது அருகில் வாலிபர் அழுது கொண்டு இருப்பதை பார்த்தனர்.

    உடனடியாக மகள்கள் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

    உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள்(வயது 38). இந்த தம்பதி ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் உள்ளது.

    இவர்களுக்கு பீலா என்ற மகளும், பெல்வின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பிலோமினாளும், ரூபனும் வழக்கம்போல் தூங்க சென்றனர்.

    நேற்று காலையில் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் கார்த்தி நேசன் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ரூபன் கோழிப்பண்ணை ஆரம்பிக்க கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இறந்த பிலோ மினாளின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர்.
    • விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் கோட்டை மாநகரில் 22 வயது இளம்பெண் மற்றும் 17, 16 வயதுடைய சிறுவர்கள் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை இறந்துவிட்டார்.

    தாய் ராஜேஸ்வரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் மைசூரை சேர்ந்த மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெருமாநல்லூரில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மனோஜ் கடந்த சில மாதங்களாக காங்கயம் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றி வந்துள்ளார். ராஜேஸ்வரியின் உறவினர்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ராஜேஸ்வரி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறினார்.

    சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த கோரி பலமுறை பெருமாநல்லுார் மற்றும் காங்கயம் போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ராஜேஸ்வரி சாவில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    • கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 75). இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    கணவர் இறந்த துக்கத்தை தாங்காமல் ராமுவின் மனைவி தங்கமணி (65) தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்கான ஒரே வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. மயானத்தில் இருவரது உடல்களும் அருகருகில் அடக்கம் செய்யப்பட்டன.

    • கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
    • திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்று கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.

    இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.

    கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கி கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.

    ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.

    இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கி கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.

    இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம் பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி கொண்டது.
    • அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது35). கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொப்பூரில் உள்ள கெங்களாபுரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர்.

    கடை முன்பு மின்சாரத்தால் இயங்கக்கூடிய கரும்பு சாறு பிழியும் எந்திரம் உள்ளது. அதில் கரும்பு ஜூஸ் போட்டு விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அனிதா வழக்கம்போல் கடையில் கரும்பு சாறு பிழியும் எந்திரம் முன்பு நின்று கரும்பு சாறு பிழித்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா போட்டிருந்தார்.

    அப்போது அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக அந்த எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதில் அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சு விட முடியாமல் திணறினார்.

    உடனே அவரது கணவர் பிரபு ஓடிவந்து எந்திரத்தின் மின்சாரத்தை துண்டித்தார். பின்னர் அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரபு தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×