search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொடுத்த கடனை திரும்ப தராததால் விரக்தி: போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து பெண் மரணம்
    X

    கொடுத்த கடனை திரும்ப தராததால் விரக்தி: போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து பெண் மரணம்

    • கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
    • கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரன். மீனவரான இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35).

    அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கலைச்செல்வி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லை. கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

    இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஏழுமலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும், சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து சுருண்டு கீழே விழுந்தார்.

    போலீசார் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

    கலைச்செல்வி தீக்குளித்த போது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கி விட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரி இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×