என் மலர்
செய்திகள்

மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்: ஜி. ராமகிருஷ்ணன்
சிவகங்கை:
சிவகங்கையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கு விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பணம் கட்டினால் 2 ஏக்கருக்கு தான் பணம் தரப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகளுக்குரிய இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் வறட்சி நிவாரணப் பணியை தொடங்க வேண்டும். தற்போது புதுவித மணல் கொள்ளை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. விவசாய நிலத்தில் ரூ. 15 ஆயிரம் கொடுத்து 3 அடிக்கு சவடுமண் எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் 15-ல் இருந்து 20 அடி வரை மணல் தோண்டப்படுகிறது.
இது பிற மாநிலங்களுக்கு விற்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தட்டிக்கேட்கும் விவசாயிகள் அடித்து விரட்டப்படுகிறார்கள். இதில் மாநில அரசு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
மாநில அரசு புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதாக அறிவித்துள்ளது. இதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். செயற்கை மணலை உருவாக்க வேண்டும். அல்லது மணல் இறக்குமதி செய்ய வேண்டும். இதனால் கட்டிடப்பணிகள் பாதிக்கக்கூடாது.
கந்துவட்டி சட்டத்தின் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து வருகிற 30-ந் தேதி காலையில் நடைபெறும் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஆர்.கே. நகர் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.






