search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer struggle"

    ஊத்துக்கோட்டை பகுதியில் மின்தடையால் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள மின்வாரிய மின் பகிர்வு நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை, அந்தேரி, போந்தவாக்கம், வடதில்லை, மாம்பாக்கம், சீத்தஞ்சேரி, பென்னாலூர்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் மின்தடை நீடித்து வந்தது.

    இந்த நிலையில் மின் தடையை கண்டித்தும் சீரான மின்சாரம் வழங்கக்கோரியும் ஊத்துக்கோட்டை, அந்தேரி உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மின் ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக மின்தடையை கண்டிக்கும் விதமாக மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும், விவசாயிகளின் கோணிப்பைகளை திரும்ப வழங்காததை கண்டித்தும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் அமைந்துள்ளது. வந்தவாசி, மருதாடு, பிருதூர், ஒசூர், கீழ்கொடுங்காலூர், மழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விளைபொருளான நெல்லை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு எடை போட்ட பிறகு வியாபாரிகளின் கோணிப்பைகளில் இருந்து நெல் மாற்றப்பட்டு காலி கோணிப்பைகளை அப்போதே விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக கோணிப்பைகள் விவசாயிகளுக்கு முறையாக திருப்பி கொடுக்கப்பட வில்லை என்பதுடன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    காலி கோணிப்பைகள் திரும்ப வழங்கபடாதது, அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஆகியவற்றை கண்டித்து விவசாயிகள் நேற்று வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எல்கே சுதீஷ் பேசினார். #lksudhish #dmdk #farmersstruggle

    சூலூர்:

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் 5-வது நாளாக பல்வேறு கட்டமாக போராட்டம் நீடிக்கிறது.

    விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று தே.மு.தி.க. மாநில துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் சுல்தான் பேட்டை வந்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்சினை பற்றி கவலைப்படாத முதல்- அமைச்சரும், பிரதமரும் உள்ளனர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவை நிலத்தடியில் மூலம் செல்லும் போது மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல முடியாதா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    உயர் மின் கோபுரங்களால் ஏற்கனவே 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுர பிரச்சினையை உடனடியாக தீர்க்க விடில் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் போல் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில்இ தியாகராஜன், எஸ்.எம். முருகன் மற்றும் மாவட்ட துணை செயலர்கள் ஒன்றிய நகர ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #farmersstruggle 

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடு அணிந்து போராட்டம் நடத்தினார்கள். #FarmerStruggle #Delhifarmerprotest

    சென்னை:

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லியில் 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்றனர்.

    அவர்கள் போராட்டம் முடிந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் அய்யாகண்ணு தலைமையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரெயிலில் திருச்சிக்கு செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அதில் பாதிபேருக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகி இருந்தது. மற்றவர்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆக வில்லை. அவர்களுக்கும் டிக்கெட் கன்பார்ம் செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு மோடி செவி சாய்க்க வில்லை.

    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.  #FarmerStruggle #Delhifarmerprotest

    திருவாரூரில் 12-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரித்துள்ளார். #Farmersstrike #PRPandian

    மன்னார்குடி:

    காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 12-ந்தேதி திருவாரூர் ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் போராட்டத்துக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நடராஜன் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் சார்பில் உண்ணாவிரதம் நடத்த முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுத்தும், போலீசார் அனுமதிக்க கொடுக்க மறுத்துவிட்டனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும். எனவே நாங்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி வருகிற 11-ந்தேதி ஐகோர்டில் வழக்கு தொடருவோம். அதன்பின் ஐகோர்ட் அனுமதி அளிக்கும் தேதியில் நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    இது தொடர்பாக மற்ற விவசாய சங்க நிர்வாகிகளையும் கலந்தாலோசித்து தொடர் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழக விவசாயிகள் நிலை பெரும் கேள்விக்குறிதாக மாறிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார். Farmersstrike #PRPandian

    ×