என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
கோவை:
கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்கள் பஸ்சில் சந்தோஷமாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், அரசு பஸ் மூலமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவ்வாறு ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்து கழகம் ஒரு போதும் தனியார் மயமாகாது.
அரசு போக்குவரத்து கழகத்தில் 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்து கழகம் தற்போது இன்று புத்துயிர் பெற்று வருகிறது.
எனவே தனியார் மையம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களும் நடத்துனர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்காக அவர்களுக்கு உயர பிரச்சனை காரணம் ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு 10 சென்டிமீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.
எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாவட்ட தி.மு.க செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார்.
- அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.
அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதற்கான முயற்சியில் பா.ஜ.க. கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது.
இதனால் பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார். இதனை உணர்த்தும் வகையிலேயே பா.ஜ.க. நடத்திய இப்தார் நோன்பும் அமைந்திருந்தது.
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய அதே நாளில்தான் அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் இப்தார் நோன்பில் பங்கேற்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பா.ஜ.க. கட்சி விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாகவே கூறப்பட்டது.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியை இறுதி செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதற்கு வலியுறுத்தக்கூடாது என்பதும் பிரதானமாக இருந்தது. இதனை ஏற்றுக்கொண்டே அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி வீசிய கூட்டணி பந்தில் ஓ.பன்னீர்செல்வம் கிளீன் போல்டாகி உள்ளார். இதனால் அடுத்த அரசியல் ஆட்டத்தை ஆடுவது எப்படி? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருக்கிறது.
இதற்கிடையே பா.ஜ.க. கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சியை ஓ.பி.எஸ். தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுக்கும் என்பதும் தெரியவில்லை. அப்படி ஓ.பி.எஸ். கட்சி தொடங்கினாலும் பெரிய அளவில் பா.ஜ.க. கட்சி அவரை கண்டு கொள்ள வாய்ப்பு இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
- மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் துர்காலயா சாலையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அசோக்குமார். இவர் எல்லையம்மன் கோவில் சன்னதி தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கடையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் தீ பிடித்த எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் மளமளவென பற்றி எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் பெரும்பாலான தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்ததால் தப்பித்தது. இருந்தாலும் கடை ராக்கரில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் தீயில் உருகி சேதமானது என்று நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து குறித்த புகாரின் பேரில் திருவாரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
- இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் 'திராவிட மாடல்' மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
- கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோவை:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வார நாட்களில் ஒரு போட்டியும், வார இறுதி நாட்களில் 2 போட்டிகளும் நடைபெற்று என தினமும் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பெட்டிங் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐ.பி.எல். போட்டியை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக நேற்று காட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வந்ததை பார்த்தும் அந்த கும்பல் அதிர்ச்சியாகியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்ப முயன்றனர்.
போலீசார் உடனடியாக 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காட்டூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார், விபுல், ஜிதேந்திரா, விபின் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 12 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேரும் கோவை, கேரளா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஆவர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தினமும் நடக்கும் போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும், இவ்வளவு ரன் அடிக்கும், என ஒரு போட்டிக்கு இவர்கள் ரூ.100-ல் ஆரம்பித்து லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதும், அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இவர்கள் மட்டும் தான் ஈடுபட்டுள்ளனரா? அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பூத் கமிட்டி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த நேற்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக மேற்கு மண்டலமான கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
நேற்று அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் விரிவடைகிறது.
பா.ம.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
நேற்றே கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தரப்பு பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்தியதாகவும், 9 தொகுதிகள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க. தலைமையிடம் கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.
பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்ட பின் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
- மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
- ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
சென்னை:
எழும்பூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
* மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
* ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
* இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை.
* பா.ஜ.க.வுக்கு எடுபிடி போல்தான் இருந்தார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒருவர்கூட பேசவில்லை என்றார்.
- தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.
- பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
வருகிற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று அறிவித்தார். அப்போது, 'எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்' என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
* 2 ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல் தான்.
* அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு தொடர் தோல்வியைக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
* தோல்விக்கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
* தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை.
* பழைய கொத்தடிமைக் கூடாரமான அ.தி.மு.க. தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தனது சதித்திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறது.
* பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
* சுயமரியாதையின்றி டெல்லியில் மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே நேற்று, சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கருப்பு நிற புறாக்களை பறக்க விட்டும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும், அமித்ஷா புகைப்படத்தை தீ வைத்து எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 192 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகரில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் விருதுநகர்- மதுரை சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பொருட்காட்சி கடந்த 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், உணவு பண்டங்கள், சிறுவர்களை குதூகலமாக்க செய்யும் விளையாட்டு அம்சங்கள், பிரமாண்ட ராட்டினங்கள் ஆகியவவை இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இந்த பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த பொருட்காட்சியில் சுனாமி என்று பெயரிடப்பட்ட ராட்சத ராட்டினம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு அங்கு வந்த விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண் கட்டணம் செலுத்தி சுனாமி ராட்டினத்தில் ஏறினார். அப்போது அதனை இயக்குபவர் பல்வேறு விதிமுறைகளை பக்குவமாக எடுத்துக்கூறினார்.
அதன்படி ராட்டினத்தில் ஏறியதும் கால்களை அதற்காக கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் வைத்து பூட்டிக் கொள்ளுமாறும், பெல்ட் அணிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கவுசல்யா பாதுகாப்பு சாதனத்தை காலில் மாட்டாததால் ராட்டினம் தலைகீழாக சுற்றிய போது கால்களை தொங்கிய நிலையில் நிலை தடுமாறி இருக்கையில் இருந்து கீழே விழுந்தார்.
இதைப்பார்த்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த மற்றவர்கள் கூச்சல் போட்டனர். உடனடியாக எந்திரத்தால் இயக்கப்பட்ட ராட்டினம் நிறுத்தப்பட்டது. கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த கவுசல்யாவை மீட்ட பொருட்காட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் பொருட்காட்சியில் தயார் நிலையில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுனாமி ராட்டினம் என்று அழைக்கப்படும் அந்த ராட்டினத்தில் ஹைட்ராலிக் லாக் செய்யப்பட்டிருந்தும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த அந்த பெண் காலை ராட்டினத்தில் உள்ள பாதுகாப்பு லாக் செய்யாததால் அந்த பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ராட்டினம் இயக்கும் நிர்வாகியிடம் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.






