என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

85 அடியை கடந்து ரம்மியமாக காட்சியளிக்கும் மணிமுத்தாறு அணை.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை
- மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.






