என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடைசி நேரத்தில் கை கழுவிய பாஜக... ஓ.பி.எஸ். எதிர்காலம் கேள்வி குறியானது
- பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார்.
- அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.
அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதற்கான முயற்சியில் பா.ஜ.க. கட்சி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது.
இதனால் பா.ஜ.க. கட்சி தங்களை நிச்சயம் கைவிடாது என்றே ஓ.பி.எஸ். மலைபோல நம்பிக் கொண்டிருந்தார். இதனை உணர்த்தும் வகையிலேயே பா.ஜ.க. நடத்திய இப்தார் நோன்பும் அமைந்திருந்தது.
டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய அதே நாளில்தான் அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் இப்தார் நோன்பில் பங்கேற்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பா.ஜ.க. கட்சி விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாகவே கூறப்பட்டது.
ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியை இறுதி செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதற்கு வலியுறுத்தக்கூடாது என்பதும் பிரதானமாக இருந்தது. இதனை ஏற்றுக்கொண்டே அமித்ஷா அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி வீசிய கூட்டணி பந்தில் ஓ.பன்னீர்செல்வம் கிளீன் போல்டாகி உள்ளார். இதனால் அடுத்த அரசியல் ஆட்டத்தை ஆடுவது எப்படி? என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருக்கிறது.
இதற்கிடையே பா.ஜ.க. கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பதற்கு வசதியாக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சியை ஓ.பி.எஸ். தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைகொடுக்கும் என்பதும் தெரியவில்லை. அப்படி ஓ.பி.எஸ். கட்சி தொடங்கினாலும் பெரிய அளவில் பா.ஜ.க. கட்சி அவரை கண்டு கொள்ள வாய்ப்பு இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.






