என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலியான மேல்சபை எம்.பி. பதவி இடம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

    இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபோன்ற சூழலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

    முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026 சட்டசபை தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயார்.

    * தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

    * கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது.

    * தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம்.

    * ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.

    * தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விக்கு தி.மு.க.விடம் கேளுங்கள்.

    * த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.

    * தி.மு.க. அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

    • மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
    • காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் ஒரு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.

    ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது உடையவர்கள்.

    மாநகர காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சர்ச்சை பேச்சால் பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பொறுப்பு உள்ளிட்டவற்றை இழந்து தொண்டர் என்ற முறையில் உள்ளார்.

    இந்த நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    அதற்கு அமைச்சர் மா.சுப்பிரணியன், போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான். எது போலி, எது நிஜம் என்று கண்டுபிடிக்க வேண்டியது மாணவர்களும், பெற்றோர்களும். எங்கேயாவது போலியான கல்லூரி இருந்து மருத்துவத்துறையில் நடத்துகிறார்கள் என்று சொன்னா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    போலியான கல்லூரிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. அமைச்சரின் பொறுப்பு. அதை மாணவர்களும், பெற்றோர்களும் கண்டுபிடிக்கணும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    * பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.

    * பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது தி.மு.க.

    * தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

    * மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன.

    * இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள்.
    • அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

    இந்த பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். அண்மை காலமாக பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் காரணமாக அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி அதிரடியாக ஆய்வு நடத்தி விதிகளை முறையாக பின்பற்றாத ஆலைகளுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில காரியாபட்டி அருகே இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அமைந்துள்ளது வடகரை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று பல்வேறு கட்டிடங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு காரியாபட்டியை அடுத்த தண்டியனேந்தல், கல்குறிச்சி, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு கிளைகளை கொண்டுள்ள இந்த ஆலை நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்த ஆலையில் சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்படுகிறது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் தண்டியனேந்தல், கல்குறிச்சியை சேர்ந்த 5 தொழிலாளர்கள் மருந்துகளை கலக்கும் பணியில் இருந்தனர். அப்போது அதிக உராய்வின் காரணமாக குவித்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது.

    இதில் அந்த அறை அடையாளம் காண முடியாத அளவுக்கு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு பணியில் இருந்த தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 35), கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (53) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், உடல் சிதறியும் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பேச்சியம்மாள் (43), கணேசன் (53) மற்றும் முருகன் (45) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காரியாபட்டி உள்ளிட்ட அருகிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து மருந்துகள் வெடித்த வண்ணம் இருந்தன. பின்னர் அதிக வேகத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகே பலியானவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தை அறிந்த அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததையடுத்து பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
    • 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

    நெல்லை:

    பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    * ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது.

    * உலகம் முழுவதும் உள்ள 63 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    * பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை.

    * சிவகிரி இரட்டைக்கொலை, விடுதியில் பள்ளி மாணவி வன்கொடுமை என நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிப்பு.

    * சிவகிரியில் இரட்டைக்கொலையில் பிடிபட்டவர்கள் இதற்கு முன்பு 19 கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

    * 19 கொலைகள் தொடர்பாக இதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா?

    * சிவகிரி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளி என்பதில் நம்பிக்கை இல்லை.

    * 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் அமையும்.

    * 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்றார். 

    • மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம், ராசையா இருவரையும் போலீசார் சோதனை செய்தனர்.
    • 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு மட்டக் கடை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மட்டக்கடை பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 21), ராசையா என்ற கலாம் (23) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நாளை (12-ந்தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை மறுநாள் (13-ந் தேதி) தமிழகம் முழுவதும் மழை அளவு அதிகரிக்கக் கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

    வருகிற 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    14, 15-ந்தேதிகளில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீலகிரி மாவட்டத்தில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ரெட் அலர்ட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

    ஏனெனில் 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் 204.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

    நீலகிரியில் 14-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்பதால் தண்ணீர் தேக்கம், நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இதற்கு ஏற்ப முன் எச்சரிக்கையுடன் தயாராக இருக்க வானிலை இலாகா அறிவுறுத்தி உள்ளது.

    16-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.
    • எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான்.

    தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு, த.வெ.க. நிர்வாகி பண மாலை அணிவித்து பின் மன்னிப்பு கேட்ட நிலையில் இதுதொடர்பாக எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். அவர் அண்ணன், தம்பிகள் எல்லாம் தி.மு.க.வில் உள்ளனர். எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான். சென்ற முறை எனக்கு ஓட்டு போட்டவர் தான். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழாவிற்கு, ஐயா நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று சொன்னார்கள்.

    நான் பொதுவாக கட்சி பார்ப்பதில்லை. திருவண்ணாமலையை பொறுத்தவரை யார் எனக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தாலும் சரி, நான் அந்த சட்டமன்ற உறுப்பினர். எனக்கு யார் வாக்களித்தார்கள். வாக்களிக்கவில்லை என்று பார்க்க முடியாது.

    என்னை மதித்து அழைத்ததின்பேரில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி விட்டு வந்தேன். அவ்வளவுதான். அவர் என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்று கூறினார்.

    • நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
    • தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியேற்போம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

    நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம், இன்றைய குழந்தைகளை சார்ந்துள்ளது. அவர்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களை குழந்தை தொழிலாளராக பயன்படுத்துவது சட்டத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

    ஆனால், ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் தொழிலாளர்களாக மாறும் போது, அவர்கள் கல்வி, விளையாட்டு, சுதந்திரம் மற்றும் அவற்றால் கிடைக்கக்கூடிய நல்ல எதிர்காலம் ஆகியவற்றை இழக்கிறார்கள். ஒரு எதிர்கால சாதனையாளரை இழப்பது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. எனவே அத்தகைய சூழலை தடுப்பது மிக அவசியம். கல்வி கற்கும் உரிமையை அனைத்து குழந்தைகளும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

    குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்கவும், அனைத்து குழந்தைகளின் கல்வி கற்றலையும் உறுதி செய்யும் பொருட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக அரசு மாநில செயல் திட்டத்தையும், நிலையான இயக்க நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 தமிழ்நாட்டில் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு ஊழியர்கள், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று குழந்தைத் தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    குழந்தைகள் தரமான கல்வி கற்கவும், பெற்றோர்களின் சுமைகளை குறைக்கவும், தமிழ்நாடு அரசு கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலைச் சிற்றுண்டி மற்றும் சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

    தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு பொது மக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பினை நல்கி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வுடன், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியேற்போம்.

    குழந்தைகளே நம் நாட்டின் செல்வம்!

    கல்வியே குழந்தைகளுக்கு நிரந்தர செல்வம்!

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்!

    குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்! என கூறியுள்ளார். 

    • 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது.
    • முதல் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார். பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார்.
    • இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.

    அரியலூர்:

    அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டப் பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சண்முகம் கூறியதை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சிந்திக்க முடியும். நாங்களும் அப்படித்தான். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்.

    அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில் அவர்கள் உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம். அவர்களுக்கு எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆகவே நானும் சொல்லுகிறேன் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். நாங்கள் கூடுதலாக மதுக்கடைகளை மூட வேண்டும். படிப்படியாக மூட வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக அதிலே ஒரு நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறோம்.

    தி.மு.க. கூட்டணிக்கு சவாலாக அ.தி.மு.க. கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை.

    மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

    குறிப்பாக தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. ஆகவே அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைத் தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதை இன்னும் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சூழலில் அ.தி.மு.க.,பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று சொல்ல வேண்டி உள்ளது. இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×