என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது பில்டப்- திருமாவளவன்
- மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார்.
- இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.
அரியலூர்:
அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டப் பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சண்முகம் கூறியதை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சிந்திக்க முடியும். நாங்களும் அப்படித்தான். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்.
அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில் அவர்கள் உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம். அவர்களுக்கு எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆகவே நானும் சொல்லுகிறேன் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். நாங்கள் கூடுதலாக மதுக்கடைகளை மூட வேண்டும். படிப்படியாக மூட வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக அதிலே ஒரு நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு சவாலாக அ.தி.மு.க. கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை.
மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
குறிப்பாக தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. ஆகவே அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைத் தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதை இன்னும் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சூழலில் அ.தி.மு.க.,பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று சொல்ல வேண்டி உள்ளது. இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.