என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீலகிரி மாவட்ட மக்களே 14-ந்தேதி உஷாரா இருங்க... மிக கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நாளை (12-ந்தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (13-ந் தேதி) தமிழகம் முழுவதும் மழை அளவு அதிகரிக்கக் கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
வருகிற 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
14, 15-ந்தேதிகளில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீலகிரி மாவட்டத்தில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ரெட் அலர்ட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் 204.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
நீலகிரியில் 14-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்பதால் தண்ணீர் தேக்கம், நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இதற்கு ஏற்ப முன் எச்சரிக்கையுடன் தயாராக இருக்க வானிலை இலாகா அறிவுறுத்தி உள்ளது.
16-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






