என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்கு வரும் நெல் மூட்டைகள் தரமானதாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கட்டிடமில்லாமல் திறந்த வெளியிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 வருடம் முன்பு புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் சுமார் 10,000 நெல் மூட்டைகள் மட்டுமே வைக்க கூடிய நிலை உள்ளது. அதிகமாக வரும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில்தான் வைக்க வேண்டும். அப்போது மழை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தற்போது சீசன் என்பதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகமாக இருந்தது.
இந்நிலையில் 500 லாட் நெல் மூட்டைகளாக 14, 1474 நெல் மூட்டைகளும் நேற்று 700 லாட்டுகளாக சுமார் 16,000 நெல் மூட்டைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஞ்சி கமிட்டியில் எடைப்பணி தொழிலாளர்கள் சாக்கு மற்றும் தொழிலாளர்கள் லாரி மூட்டை ஏற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அதிக அளவு நெல் மூட்டைகள் வரும்போது கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே நெல் மூட்டைகள் நேற்று முன்தினமும் நேற்றும் கொள்முதல் செய்யப்பட்டன. அவைகள் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டனர். நேற்று வந்த நெல் மூட்டைகள் நேற்று மாலை மற்றும் இன்று கொள்முதல் செய்யப்படுகிறது. அவை சுமார் 3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டுமே வேலை நாளாக இருப்பதாலும் மற்ற நான்கு நாட்கள் விடுமுறையா இருப்பதாலும் விவசாயிகள் இனி நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் திங்கட்கிழமை நடைபெறும் கொள்முதலுக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்தால் போதும் என்று கமிட்டி கண்காணிப்பாளர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமிட்டியின் வெளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தை மாதமும் சீசன் டைம் என்பதால் சுமார் 15 நாட்களுக்கு இவ்வாறு அதிக அளவில் நெல்மூட்டைகள் வரும் என்றும், மற்ற நாட்களில் சாதாரணமாக இருக்கும் என்றும் கமிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சீசன் காலங்களில் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.
- இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி.
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.
9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகி ருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூ ராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து க்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவ தியப்பன், நாகராஜன், விஜய மணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
- சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து வியாபாரிகள் குருவிகளாக சென்று அங்கிருந்து தங்கத்தை திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேடிக் ஏர் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஆண் பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து ரூ.35,02 ,800 மதிப்பிலான 556 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த சிம்பத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் என்பது தெரியவந்தது.
- மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.
திருச்சி:
திருச்சி திருவானைக்கோவில் சன்னதி தெரு தீட்சிதர் தோப்பு பகுதியில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் திருச்சி மணச்சநல்லூர் மேல சீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதவன் என்கிற மண்டை வெட்டு மாதவன் 50 என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணச்சநல்லூர் பிரபல ரவுடி குணாவின் கூட்டாளி ஆவார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மேலகொண்டையம் பேட்டை பகுதிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வசித்து வந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரை திருவானைக்கோவிலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரது தலை துண்டித்து கீழே விழும் அளவுக்கு சரமாரியாக கழுத்து மார்பு மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். ஆகவே இது பழிக்கு பழியாக நடந்த கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவானைக்காவல் மற்றும் மணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
- சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938-ல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள்.
அதேபோல, 1939-ல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டிசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கியபோது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும்போது, 'தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்" என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது.
அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக்கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை ஆர்.என்.ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப்போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்டபோது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.
150 ஆண்டு கால பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை வழியில் போராடித்தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத்தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர்.
சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கறைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
- பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 3 மின் இழுவை ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த மின் இழுவை ரெயிலின் பயணம் நேரம் 8 நிமிடம் ஆகும்.
இந்த மின் இழுவை ரெயிலில் பயணிக்க சிறப்புக் கட்டணம் ரூ.25ம், ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒருமுறைக்கு தற்போது 32 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் புதிய மின் இழுவை ரெயிலில் நன்கொடையாளர் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் டி.வி, குளிர்சாதன வசதிகளுடன் 72 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான நவீனமயமாக்கப்பட்ட மின் இழுவை ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
இதனைத்தொடர்ந்து புதிய மின் இழுவை ரெயில் செல்வதற்கு வசதியாக நிலைய நடைமேடைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இழுக்கும் எந்திரத்தில் அதிக திறன் வாய்ந்த ஷாப்ட் எந்திரம் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
2 முறை ஐ.ஐ.டி. குழுவினர் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர். இக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புதிய நவீன மின் இழுவை ரெயிலை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், சுப்ரமணி, மணிமாறன், ராஜசேகரன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 3வது மின் இழுவை ரெயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
- புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
- மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-
முளகுமூடு கோடியூர் புனித பவுல் சி.எஸ்.ஐ. சேகர சபை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற ஷாலினி - செகின் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

தக்கலை புன்னை நகர் மைக்கேல் ராஜ்- லைலா மேரி ஆகியோரது புதல்வி கார்மல் மேரி மற்றும் பிரதீஷ் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி. மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென் தமிழகத்தில் முதல் முறையாக ஸ்ரீனிவாசா மருத்துவமனையில் ரோபோட்டிக் துல்லியத்துடன் முழுமையான மூட்டு நிவாரணம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கூடிய நவீன இயந்திரத்தை விஜய் வசந்த் அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.

ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதரவற்ற ஏழை விதவைக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் கே.டி.உதயம் ஆகியோருடன் இணைந்து பாராளுமன்ற விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
- ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.
கோவை:
குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.
கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
- தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.
அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.
யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.
மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.
மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.

2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.
தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.
உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.
இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.
அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.
2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.
அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.
கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.
கோவை:
கோவை குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர், எம்.ஸ்.பார்க் அவென்யூ, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறந்து கிடப்பதுடன், சில பூனைகள் மாயமாகியும் விட்டன. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்று இரவில் நடமாடுவது என்ன என்பது குறித்து விசாரித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உண்மையிலேயே சிறுத்தை தான் நடமாடுகிறதா? அல்லது வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.
அதன்படி எம்.எஸ்.பார்க் அவென்யூ பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகேயும், ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு செல்லும் வழி உள்பட 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். அந்த கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெ.ஜெ.நகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் வயதான சிறுத்தை ஒன்று இப்பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த பகுதி முழுவதும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
- பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின்சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.
இதற்கிடையில் வழக்கில் தேடப்படுபவர்கள் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் கோர்ட்டுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்ட பாதிரியார் ராபின்சன் இன்று காலை திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.






