search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனியில் ரூ.1.13 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மின் இழுவை ரெயில்
    X

    பழனியில் ரூ.1.13 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மின் இழுவை ரெயில்

    • கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    • பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 3 மின் இழுவை ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த மின் இழுவை ரெயிலின் பயணம் நேரம் 8 நிமிடம் ஆகும்.

    இந்த மின் இழுவை ரெயிலில் பயணிக்க சிறப்புக் கட்டணம் ரூ.25ம், ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒருமுறைக்கு தற்போது 32 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கூடுதல் நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரெயிலில் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் புதிய மின் இழுவை ரெயிலில் நன்கொடையாளர் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் டி.வி, குளிர்சாதன வசதிகளுடன் 72 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான நவீனமயமாக்கப்பட்ட மின் இழுவை ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து புதிய மின் இழுவை ரெயில் செல்வதற்கு வசதியாக நிலைய நடைமேடைகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இழுக்கும் எந்திரத்தில் அதிக திறன் வாய்ந்த ஷாப்ட் எந்திரம் பொருத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாமிர்த டின்களை அடுக்கி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    2 முறை ஐ.ஐ.டி. குழுவினர் இந்த சோதனை ஓட்டத்தை ஆய்வு செய்தனர். இக்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. புதிய நவீன மின் இழுவை ரெயிலை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், சுப்ரமணி, மணிமாறன், ராஜசேகரன் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 3வது மின் இழுவை ரெயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×