search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விமான நிலையம்"

    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும்.
    • தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு அதிக அளவில் இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை பறிமுதல் செய்யும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது அறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த 4 பயணிகளின் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் டிக்கெட் பாக்கெட் மற்றும் கைப்பையில் 8 செயின் வடிவிலான தங்கத்தையும், 2 வளையல் வடிவிலான தங்கத்தையும் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.1.16 கோடி ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பெருமளவு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளில் பயணிகள் வருகை மற்றும் கார்கோ சேவையும் அதிகரித்துள்ள அதேவேளை தங்கம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

    இதனிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஏர்ஏசியா விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தபோது அவர் தகுந்த ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 129 பண்டல் சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தடை செய்யப்பட்ட சிகரெட் வகைகளை விமானத்தில் கடத்தி வந்ததை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்கியதாக குழு தெரிவித்தது.
    • விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய டிஜிசிஏ அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரமாக நடுவானிலேயே வட்டமடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சுமார் 8.15 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

    இந்த நிலையில், விமானம் நடுவானில் வட்டமடித்த சம்பவம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாலை 6.05 மணியளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்கியதாக குழு தெரிவித்தது.

    இதை அடுத்து விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய டிஜிசிஏ அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
    • சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களில் வரும் பயணிகள் மறைத்து கடத்தி வரப்பட தங்கம் பிடிபட்டது. இதுபோன்ற செய்திகள் நாளும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறுகிறது.

    கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலை முடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவி என நூதன முறையில் கடத்தல்காரர்கள் தங்கம் கடத்தி வருவது சுவாரசியம் தரக்கூடிய செய்தியாக மாறி உள்ளது.

    இப்படி தங்கம் கடத்தி வருபவர்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பது தொடர்கதையாகவே உள்ளது.

    இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான1605 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் திருச்சி விமான நிலையம் பயணிகளின் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என விமான நிலைய இயக்குனர் மெயிலுக்கு தகவல் வந்ததை தொடர்ந்து தமிழக போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் அந்த செய்தி புரளி என தெரிய வந்தது

    இந்த நிலையில் இன்று காலை 10:35 மணி அளவில் திருச்சி விமான நிலைய இயக்குனரின் இமெயிலிற்கு திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் வெடி கொண்டு வைத்திருப்பதாகவும் அது விரைவில் வெடிக்கும் எனவும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழக போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு சோதனை பிரிவினர் மற்றும் மோப்பநாய் பிரிவினர் உள்ளிட்டோர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். மெயில் அனுப்பியவர்கள் குறித்து விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக திருச்சி விமான நிலையம் மற்றும் அனைத்து விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
    • சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்டு வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஜூஸ் மிக்சருக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி (தோராயமாக) மதிப்பிலான 2.579 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும்.
    • பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 2-ந்தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, பணிகள் நிறைவு பெற்றன. இதனால் இன்று முதல் புதிய முனையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

    முன்னதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து இன்று காலை 6 மணி முதல் அனைத்து விமானங்களும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த வேண்டும்.

    உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44½ லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3,480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 குடியுரிமை கவுண்ட்டர்கள் செயல்பட உள்ளது.

    பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் முதல் கட்டமாக 5 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்த உள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிரிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் பஸ் இயக்க போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளோம். அதில் சர்வதேச பயணிகள் மட்டும் 13 லட்சத்து 50 பேர் ஆவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் ஜூன் 11-ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து புதிய விமான நிலையம் முனையத்தின் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்து வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விமான நிலையத்தில் அலுவலகங்கள், விமான நிறுவனத்தின் அலுவலகங்கள், தீயணைப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
    • ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    மலேசியா சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 68).

    இவர் கடந்த 20-ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை மெயின் ரோடு கோவில்பட்டிக்கு சென்றார்.

    மீண்டும் மலேசியா செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு தனது மனைவி அமுதாவுடன் வந்தார்.

    இருவரும் மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திடீரென ராஜலிங்கம் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அமுதா, அவரை உடனடியாக மீட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்த தனியார் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையம் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

    • திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
    • சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    கே.கே. நகர்:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிக அளவில் கடத்தல் தங்கம் கடத்தப்பட்ட வருவது, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளின் டிராவல் பேக்கில் சோதனை செய்தபோது அதில் சுருள் வடிவில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.16.17 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை முகநூல் பகுதியில் தனிநபர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும் 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தகவல் அனுப்பியதாக தெரிகிறது.

    இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.

    பயணிகளின் வாகனங்கள் மற்றும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது.
    • மறுஅறிவிப்பு வரும் வரை சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    கே.கே.நகர்:

    கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பு அனுமதித்து வருகின்றனர். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் தமிழக போலீசாரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை செய்யப்பட்ட பின்பு வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றது.

    அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய நுழைவு வாயிலில் மோப்பநாய் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

    இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை செய்யும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு சோதனை செய்யப்பட்ட பின்பு முனைய வளாகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். மற்றும் பயணிகளை ஸ்கேனர் கருவிக்கொண்டு விமான நிறுவனத்தினர் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    இந்த சோதனையானது நேற்று முன்தினம் இரவு முதல் நடைபெற்று வருகிறது. எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சோதனையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரி சிங் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் விமான நிலையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×