என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
    • ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அருள் எம்.எல்.ஏ.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

    • 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.
    • பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் "தென்னிந்திய தென்னை திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த "தென்னிந்திய தென்னை திருவிழா" நிகழ்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் "இயற்கை சந்தையில்" 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு முத்துகுமார் கூறினார் அவரோடு முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்கள் உடன் இருந்தார்.

    • பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திட வேண்டும்.
    • வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயங்க அனுமதி.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:-

    கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும்.

    இந்த உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி மட்டுமல்லாமல் கிரிமினல் சட்ட நடவடிக்கை பாயும்.

    மேலும், ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திட வேண்டும்.

    பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் தேனையின்றி சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்.

    ஈசிஆர், வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக, சித்தூர், ரெட்ஹில்ஸ் உள்பட வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறியுள்ளது.

    • சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
    • மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    நெல்லை:

    இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    தொடர்ந்து தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதனை வழங்கி வரும் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    • படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சித்திரங்கோடு மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). இவர் இட்லி மாவு தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி அனிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் குலசேகரத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வெண்டலிகோடு பகுதியில் சென்ற போது கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரி வந்தது. இந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அனிதா கீழே விழுந்த நிலையில், டாரஸ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அனிதாவின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் இது போல் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் கனரக லாரிகளை தடை செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி அவர்கள் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த ஜெயராஜ், பேரூராட்சி தலைவர்கள் அகஸ்டின் (பொன்மனை), சுகிர் ஜெபராஜ் (வேர்கிளம்பி), ஜெயந்தி ஜேம்ஸ் (குலசேகரம்), பொன் ரவி (திற்பரப்பு) , ஊராட்சி தலைவர்கள் பி.டி.செல்ல ப்பன், விமலா சுரேஷ், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் தாசில்தார் புரந்ந்தரதாஸ் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-கலெக்டர் லொரைட்டா, குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்கவுதம் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சு வார்த்தையில் கனிமப் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் தடை செய்யப்படும் என்றும் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரி மூடப்படும், அனிதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 6 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி டிரைவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியை மூட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த கல்குவாரியை மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிக்கு சென்று கல்குவாரியை மூடி சீல் வைத்தனர்.

    • அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
    • ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த குழுவினர் வருகிற 5-ந்தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.

    அதன்படி பிப்ரவரி 5-ந்தேதி தூத்துக்குடி, 6-ந்தேதி கன்னியாகுமரி, 7-ந்தேதி மதுரை, 8-ந்தேதி தஞ்சாவூர், 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந்தேதி திருப்பூர், 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந்தேதி விழுப்புரம் செல்கிறார்கள்.

    அதன் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கருத்து கேட்க உள்ளனர்.

    தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கள்ளக்குறிச்சியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். திண்டிவனத்தில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திண்டிவனம் விரைந்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் சரவணன் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் அடிக்கடி கொள்ளை மற்றும் திருட்டு நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.
    • மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் திருச்சி வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டிஇ ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியார்,

    திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ.,

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு மற்றும் இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார்.

    முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார்.

    பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார். முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் சிலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவார் என கூறப்படுகிறது. இதை போன்று மாநாட்டில் பங்கேற்கும் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூரில் இருந்து திருச்சி புறப்பட்டு வருகிறார்.

    மாநாட்டை ஒட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    முதல்வர் வருகையை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    மாநாடு மேடை மற்றும் பந்தள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும் என கட்சியினர் தெரிவித்தனர்.

    இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
    • உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரே ஒரு கொள்முதல் நிலையம் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. பிற காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலும் குவித்து வைத்துக்கொண்டு எப்போது அவற்றை விற்க முடியுமோ? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் உழவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அதே நாளில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும். உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.
    • தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டத்துக்குட்பட்ட பரஞ்சோ்வழியில் உள்ள மகாதேவா் நட்டுராமந்தா் என்னும் மத்தியபுரீஸ்வரா், வீரநாராயண பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 கோவில்களிலும் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா், பொறியாளா் பொன்னுசாமி ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பழமையான இரு கல்வெட்டுகளை கண்டறிந்தனா்.

    இது தொடா்பாக ஆய்வு மையத்தின் இயக்குநா் ரவிகுமாா் கூறியதாவது:-

    பண்டைய கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 24 நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தால் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்த நாடு காங்கயம் நாடு.

    இந்த நாட்டில் உள்ள பண்டைய 12 கிராமங்களில் பழஞ்சேபளி என்றும், பரஞ்சோ்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சோ்வழியும் ஒன்றாகும். இங்குள்ள மத்தியபுரீஸ்வரா் கோவிலின் அம்மன் சன்னதி முன் மண்ணில் புதைந்திருந்த பெரிய தூண் கல்லை எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி.11-ம் நூற்றாண்டை சோ்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

    220 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட பெரிய கல்லில் நான்கு பக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ., ஆகும்.

    இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியா் சுப்பராயலு, கல்வெட்டின் 4 பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற சொற்களே திரும்ப திரும்ப வருகின்றன என்றாா்.

    பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லை வழிபடுவதால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாகும். எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும்போது இது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

    அதேபோல, வீரநாராயண பெருமாள் கோவிலில் புதைந்திருந்த ஒரு கல்லை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது அதில் 3 பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதை காண முடிந்தது. 80 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம், 20 செ.மீ., கனம் கொண்ட இந்த கல்லில் 3 பக்கங்களில் வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் உள்ளன.

    தமிழா்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் மண் பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோவில்களிலும் இறைவனுக்கு மண்பானையிலேயே அமுது செய்து படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண் பானைகளை உருவாக்கும் குயவா்களை, வேட்கோவா், வேள்கோ என்றெல்லாம் நமது இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    இந்த கல்வெட்டில் முதல் பக்கத்தில் 12 வரிகளும், இரண்டாம் பக்கத்தில் 9 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 4 வரிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் வேட்கோவா்களுக்கு வரி விதித்தது பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

    அதாவது விளம்பி வருஷம் மாசி மாதம் 18-ம் நாள் ஸ்ரீ மன் கும்பள அண்ணாா்கள் இப்பகுதியை திம்மராசன் ஆட்சியின் கீழ் அதிகாரம் செய்தபோது, பரஞ்சோ்பள்ளி வீர நாராயண பெருமாளுக்கு திருநந்தா தீபம் எரிப்பதற்காக கூத்தாா் சுங்கம் என்னும் வேட்கோவா் மண்பானை செய்ய பயன்படும் ஒரு சக்கரத்துக்கு அன்று விதிக்கப்பட்ட வரிப்பணம் நான்கை சந்திரன் உள்ளவரை கொடுத்துள்ள செய்தியை அறிய முடிகிறது.

    இதன் மூலம் அன்று மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததும், அதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததையும் நாம் அறிய முடிகிறது. எழுத்து அமைப்பை வைத்து பாா்க்கும் போது இது கி.பி.16-ம் நூற்றாண்டை சோ்ந்ததாகும் என்றாா்.

    ×